‘பஞ்சாயத்து சீனா?’ - பன்னீர்செல்வத்தின் பல்ஸ் எகிறவைத்த பாச்சா!

By சானா

‘விடுதலை... விடுதலை... விடுதலை’ எனும் பாடலை முணுமுணுத்துக்கொண்டே பாத்ரூமில் குளித்துவிட்டு பந்தாவாக வெளியே வந்தான் பாச்சா. விறுவிறுப்பான ‘விரைவுச் செய்திக’ளை அசுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்த பறக்கும் பைக், “விட்டா ஜெயில்ல இருந்து ஜாமின்ல வந்த ஜெயக்குமாருக்கு மாலை போட்டு வரவேற்ற மாதிரி குளிச்சுட்டு வந்த உன்னை கொண்டாட்டமா வரவேற்கச் சொல்வே போல? இதெல்லாம் ஒரு சாதனையா?” என்று இடித்துரைத்தது.

“இல்லைதான். ஆனா, ஹண்ட்ரட் டேஸ் செலிப்ரேஷன்னு கொண்டாடித் தீர்த்த ஊருல ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸயெல்லாம் சாதனைன்னு சொல்லி சலம்புறாங்களே... அதுக்கு என்ன சொல்றே?” என்று டீஸர் வியூவ்ஸ் புகழ் சினிமாக்காரர்களை டீஸ் செய்தான் பாச்சா.

“இப்பல்லாம் தியேட்டருக்குத் தேறாதுங்கிற படத்தையெல்லாம் ஓடிடி-யில ஓட்டி விட்டுடறாங்களே... நம்மளையெல்லாம் பார்த்தா அவ்ளோ பொறுமைசாலிகளா தெரியுதுபோல இருக்கு” என்று பறக்கும் பைக் சொன்னதும் ஓபிஎஸ் ஞாபகம்தான் வந்தது பாச்சாவுக்கு.

உள்ளபடியே, ஓபிஎஸ்ஸைப் பார்த்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால் உடனடியாக அவரது இல்லத்தை நோக்கிப் பறந்தான் பாச்சா.

குறுக்கே கோடு போட்ட ஜமுக்காளத்தை விரித்து அதன் மீது அமர்ந்து, அருகில் இருந்த அதிமுகவினரிடம் பலமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் பன்னீர்செல்வம்.

“என்ன சார், அடுத்த நாடகத்துக்கான ஒத்திகையா? பஞ்சாயத்து சீனா?” என்று கேட்டபடி ஓபிஎஸ்ஸிடம் ஒரண்டையைத் தொடங்கினான் பாச்சா.

“யாரைப் பார்த்துய்யா நாடகம் கீடகம்னு நாக்கு மேல சொல்லு போட்டு பேசுறே?” என்று ஓபிஎஸ்ஸை ஓரக்கண்ணால் பார்த்தபடி, கனலைக் கக்கிய கட்சி நிர்வாகிகள், “அண்ணன், எவ்வளவு பெரிய சினிமா ரசிகர் தெரியுமா? எம்ஜிஆர் படத்தை எத்தனை தடவை பார்த்திருக்காரு தெரியுமா?” என்று கெத்தாகக் கேட்க, பன்னீர்செல்வம் பல்லைக் கடித்துக்கொண்டு பணிவு காத்தார்.

“அய்யய்யோ தப்பா நினைச்சுக்காதீங்க... தங்க தமிழ்ச்செல்வன் தடாலடியா கொடுத்த பேட்டியில ‘ஓபிஎஸ் நாடகம் போடுறார்’னு சொல்லியிருந்தார். இப்பல்லாம் ஸ்டார் நடிகர் படம்னு தியேட்டருக்கு வரவச்சு திருவிழா பாணி நாடகமா போட்டுக் கொல்றாங்க... அரசியல் தலைவர் போடுற நாடகம் நல்லாருக்குமேன்னு ஒரு நப்பாசையில அப்படிக் கேட்டுட்டேன்” என்று மானசீகமாக மாப்பு கோரினான் பாச்சா.

அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி மன்னித்து மன்னித்தே பழக்கப்பட்டுவிட்ட பன்னீர்செல்வம், பாச்சாவைப் பச்சாதாபத்துடன் மன்னித்து பழசை மறந்து பாயின்ட்டுக்கு வரச் சொன்னார்.

பயம் தெளிந்த பாச்சா, “அதிமுகவுல இப்ப என்னதான் சார் நடக்குது? யார் யார் பக்கம் இருக்காங்கன்னே தெரியலை... பெரிய சைஸ் பிக் பாஸைப் பார்க்கிற மாதிரி இருக்கு. சசிகலா வர்றார்னு சலம்பலா ஆரம்பிச்சு சைலன்ட்டா முடிக்கிறது டெய்லி பேஸ் ட்ரெண்டா இருக்கே? இதுக்கு எண்டே இல்லையா?” என்றான்.

“எல்லாரும் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் ஆன்மாவின் ஆசியில் அமைதியா வேலை பார்த்துட்டு இருக்கோம். அவர்கள் காட்டிய வழியிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம்” என்று பழக்கமாகிவிட்ட பலத்த அமைதியுடன் சொன்னார் பன்னீர்செல்வம்.

“ஆனாக்கா, ஆறுமுகசாமி ஆணையம் அத்தனை தடவை சம்மன் அனுப்பும்போதுகூட ஆஜராகாம அதே அமைதியைக் காத்துட்டு இருக்கிறது, அம்மாவோட ஆன்மாவுக்கு அடுக்குமா?” என்றான் பாச்சா.

உடனடியாக இருக்கின்ற இடத்திலிருந்து இறுக்கமாகக் காலை மடக்கி கண்ணை மூடிக்கொண்டார் ஓபிஎஸ்.

‘உக்ரைன்லேயே யுத்தம் முடிஞ்சிடும்போல இருக்கு... உங்க தர்மயுத்தம் ஐநாவே தடை போட்டாலும் அசராது போல’ என்று மைண்ட் வாய்ஸில் நினைத்தபடி வைண்ட்-அப் செய்தான் பாச்சா.

“இன்னைக்கு ஒரு பேட்டிதானா?” என்று ஏமாற்றத்துடன் கேட்டது பறக்கும் பைக்.

“சீமானை வாராவாரம் சீண்டிட்டு இருக்கோமே... இன்னிக்கும் அவர்தானே லிஸ்ட்ல ரெண்டாவதா இருக்கார். சீக்கிரமா முடிச்சுக்கலாமேன்னு நினைச்சேன். நீ ஞாபகப்படுத்திட்டே. வா போவோம். பவா செல்லத்துரையைவிட படு சுவாரசியமா கதை சொல்றவராச்சே அண்ணன்” என்றான் பாச்சா.

தம்பிகளுக்கு முன் அமர்ந்து தானதர்மத்தின் தாத்பரியம் குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் தமிழர் தலைவராம் சீமான்... அது வந்து அதாவது, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளராம் சீமான்!

“அதென்ன சார், அப்படி பெருந்தன்மையா ஆட்சி நாற்காலியைத் திமுகவுக்குப் பிச்சையா போட்டுட்டதா சொல்லியிருக்கீங்க?! ஆட்சியைப் பிடிக்கத்தானே அகில உலக அளவுல அவ்ளோ பெரிய கட்சியை நடத்திட்டு இருக்கீங்க... நாம் தமிழருக்குப் போக மிச்ச சொச்சவங்களுக்குத்தான் நாற்காலின்னு நறுக்குன்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே?!” என்று நகைக்காமல் கேட்டான் பாச்சா.

“நான் தலைவனானதுக்கு அப்புறம்தான் இப்படியெல்லாம் என்கிட்ட கேட்கிறாங்க. சின்ன வயசுல கடைவீதியில கட்டிப்புரண்டு சண்டைபோட்ட ஆளுப்பா இந்த சீமான். சும்மா எதையாச்சும் பேசி சிங்கத்தைச் சீண்டாதே! சிக்குனே....” என்று சீறினார் செந்தமிழன்.

“என்ன கேள்வி கேட்டாலும் சின்னதா ஒரு கதை சொல்லி, பேச்சையே திசைதிருப்புற கலையை எங்க சார் கத்துக்கிட்டீங்க?” என்று பாச்சா பகடி செய்ததும், புஹா புஹாவெனச் சிரித்த சீமான், சட்டென முகத்தை மாற்றி சீரியஸானார்.

“உக்ரைன் போரை உலக நாடுகளைவிட ரெம்ப உக்கிரமா கவனிச்சிட்டு இருக்கேன். ஏகே ஃபோர் நாட் செவன் துப்பாக்கியை எடுக்காமலேயே சுடுறது எப்படின்னு எப்பவோ கத்துக்கிட்ட ஆளு நான். என்கிட்ட எகத்தாளம் பேசாதே!” என்று புருவம் நெறித்து ‘விக்ரம்’ கமல் போல வெறித்தனமாகப் புன்னகைத்தார்!

“இன்னிக்கு இத்தோட நிறுத்திக்கிருவோம்” என்று பறக்கும் பைக்கே பாச்சாவை அழைத்துக்கொண்டு பறக்கத் தொடங்கியது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE