ராமநாதபுரம்: தெலங்கானா மாநில இளைஞர் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிள் பயணம் செய்யும் வழியில் ராமநாதபுரம் வந்தடைந்தார்.
தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் கஜ்வெல் நகர் பகுதியைச் சேர்ந்த நாம்தேவ், அஞ்சம்மாள் தம்பதியரின் மகன் சிவகோடி (26). டிப்ளமோ படித்துள்ள இவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நீர் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிள் பயணம் செய்ய திட்டமிட்டு, இன்று (ஜூன் 20) ராமேசுவரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே நின்ற பொதுமக்கள், இளைஞர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து இளைஞர் சிவகோடி கூறியதாவது, எனது மாநிலத்தில் அவ்வப்போது பல்வேறு நகரங்களுக்கு பொழுதுபோக்காக சைக்கிள் பயணம் செய்வேன். அப்போது தான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து மே 28-ம் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கினேன். ஆந்திரா மாநிலம் நெல்லூர், திருப்பதி வழியாக தமிழகத்தின் வேலூர் மாவட்டம் வந்தடைந்தேன். அங்கிருந்து திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக ராமேசுவரம் செல்கிறேன்.
ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்துக்கு செல்கிறேன். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 50 ஆயிரம் கி.மீ சுற்றுப்பயணம் செய்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன். இந்த சுற்றுப்பயணத்திற்கு ஓராண்டு ஆகும். செல்லும் வழியில் இரவு நேரங்களில் பெட்ரோல் பங்க், கோயில் போன்ற பொது இடங்களில் தங்கிக் கொள்வேன் என்றார்.
» அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனநல பயிற்சி: இணையவழியில் ஜூன் 24-ல் தொடக்கம்
» ‘கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு போலீஸை முடுக்கி விடவேண்டும்’ - சி.பி.ராதாகிருஷ்ணன்