நான் மிஸ்டர் லோக்கல்...

By ரிஷபன்

“மிஸ்டர் லோக்கல்”னு யாரோ சத்தமா கூப்பிட்டாப்ல இருந்துச்சு. திரும்பிப் பார்த்தா, பக்கத்து சீட்டு அண்ணாச்சி நமுட்டுச் சிரிப்போட இருந்தார்.

“என்னையா கூப்பிட்டீங்க”ன்னு கேட்டதும் பெருசா சிரிச்சாரு. ஆபிஸ்ல எனக்கு வச்சிருக்கிற நிக் நேம் அது.

ஆபிசுக்கு ஏதாச்சும் பர்ச்சேஸ் செய்யணும்னா, டவுனுக்குப் போயிட்டு வரச் சொல்வாங்க. லோக்கல் பர்ச்சேஸ்னு சொல்வோம். இதுவே, சிவகாசிக்குப் போய் பிரின்டிங் மேட்டர்னா நான், நீன்னு பத்து பேர் கெளம்பிருவாங்க. போவுற வழில சொந்த பந்தம் இருந்தா, ஆபிஸ் செலவுலயே ஆபிஸ் கார்ல போய் முடிச்சுக்குவாங்க. வெளியூர் மேட்டர்னா நம்ம நினைப்பே வராது.

ப சீ அண்ணாச்சி, கொஞ்சம் பாடி பில்டரா இருக்கிறதால அடக்கி வாசிப்பேன். காமெடின்னு அவரு எது சொன்னாலும் சிரிச்சு மழுப்பிருவேன்.

“டவுனுக்குப் போவணுமா”னு அப்பாவியா கேட்டேன். “ரெண்டு நாள்ல பட்ஜெட் மீட்டிங் வருதுல்ல... லிஸ்ட் போட்டு வச்சிருக்காங்க. ஒங்களைத்தான் அனுப்பணும்னு பாஸ் உத்தரவு”ன்னாரு.

எப்படியும் முப்பது நாப்பது பேர் கலந்துக்குவாங்க. டிபன், காபி சாப்பாடுன்னு அமர்க்களப்படும். வந்தவங்களுக்கு மொமென்டோங்கிற பேர்ல பரிசுப் பொருள் தருவாங்க. வழக்கமா வாங்கற மூணு நாலு ஷாப்ல போய் அள்ளிப் போட்டுக்கிட்டு வரணும்.

அட்டெண்டர் லிஸ்ட்டைக் கொண்டு வந்து கொடுத்தாரு. ஷாப்புக்கு போன் போட்டு தகவல் சொல்லிட்டேன். காரும் வந்துருச்சு. ப சீ அண்ணாச்சி திடீர்னு குழைஞ்சாரு. “போவுற வழில என்னை எறக்கி விட்டுருங்க”ன்னு.

மாட்டேன்னு சொல்ல முடியாது. சொன்னா, நீயா சுமந்துக்கிட்டுப் போவுறன்னு லா பாயின்ட்ல அடிப்பாரு. தலையாட்டுனதும் அண்ணாச்சி திரும்பிப் பார்த்து இன்னொரு அம்மிணிட்ட, “கெளம்புங்க”ன்னாரு. “அவங்களும், வரட்டுமான்னு கேட்டாங்க. சரின்னு வாக்கு கொடுத்துட்டேன்”னாரு.

“ரெண்டு பேர் தானே”ன்னு சந்தேகமாக் கேட்டேன். என்னை பஸ்ல வான்னு சொல்லிட்டு கூட்டமா போயிருவாங்களோன்னு பயம் வந்துருச்சு. ப சீ அண்ணாச்சி பஹ பஹன்னு சிரிச்சாரு. அம்மிணிட்ட, “நான் சொல்லல. காமெடி நல்லா பண்ணுவாருன்னு”ன்னு ரசிச்சுச் சொன்னாரு.

என்னை முன் சீட்டுல டிரைவரோட ஒக்கார வச்சுட்டு, பின் சீட்டுல அம்மிணிகூட ஒக்காந்தாரு. கார்ல எடம் பிடிக்கிறவரை இருந்த பாடி லாங்வேஜ் ஒக்காந்ததும் மாறிடுச்சு. கெத்து காட்ட ஆரம்பிச்சாரு.

“லைட்டா ஏதாச்சும் சாப்டுட்டு போவோம். சூடா காபி குடிச்சா நல்லா இருக்கும்”னாரு. “ரொம்ப லேட் ஆக்கிராதீங்க”ன்னு டிரைவர் அதட்டுனாரு. “நீயும் வாப்பா”ன்னு டிரைவரையும் இழுத்தாரு.

டிபன், காபி முடிஞ்சதும் டிரைவரை அவரோட டூட்டி டைம் என்ன, எவ்ளோ பிள்ளைங்கன்னு பேச்சு கொடுத்துக்கிட்டே அம்மிணிக்கு ஜாடை காட்டிட்டு காருக்குப் போயிட்டாரு. சர்வர் பில்லைக் கொண்டு வந்தப்போ நான் மட்டும்தான் இருந்தேன்.

வெளியே வந்தா, அண்ணாச்சி யாரையோ டவுனுக்குப் போவணுமான்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தாரு. “ஒங்க காரா”ன்னு அவரு கேட்டதும், “நம்ம கார் மாதிரிதான்”னு அடிச்சு விட்டாரு. ஆபிஸ் காரை டவுன் பஸ்ஸு ரேஞ்சுக்கு மாத்திருவாரோன்னு பயம் வந்துச்சு. அண்ணாச்சி விசாரிச்ச ஆளு எதிர் திசைல போவணுமாம். நல்ல வேளை கொண்டு போய் விட்டுட்டு போவலாம்னு அண்ணாச்சி கேட்கல!

டவுனுக்கு முதல் கடைக்குப் போயாச்சு. வசதியா ஒரு ஸ்டூல்ல என்னை ஒக்கார வச்சு, “ஸாருக்கு லெமன் ஜூஸ் கொடுப்பா ஜில்லுன்னு”ன்னு உத்தரவு போட்டாரு. “செக் பண்ணி பில்லை சரி பார்த்துட்டு வரேன்”னு தானாவே பொறுப்பு எடுத்துக்கவும் இவரைப் போய் தப்பா நினைச்சிட்டோமேன்னு கலங்கிட்டேன்.

அம்மிணியும் அண்ணாச்சியுமா போனாங்க. திரும்பி வரப்போ ரெண்டு பேர் கையிலயும் ஒரு ஷாப்பர் பேக் இருந்துச்சு. “ரெண்டு மூணு ஐட்டம் வீட்டுக்கு வாங்க வேண்டி இருந்துச்சு. அதான்...”னு இழுத்தாரு.

பில்லுக்கு பணம் கட்ட அவரே போனாரு. ஆபிஸ் பணத்தை என்கிட்டேர்ந்து வாங்கிக்கிட்டு. “வழக்கமா கொடுக்கிற தள்ளுபடியைவிட கூடுதலா அஞ்சு பர்சென்ட் பேசி வாங்கிட்டேன்ல”ன்னு பீத்திக்கிட்டாரு.

அடுத்த ரெண்டு கடையிலயும் இதே கூத்து தான். இங்கே டீ கொண்டு வரச் சொன்னாரு. “பல்க்கா வாங்கறோம்ல... ஒரு டீயாச்சும் கொடுக்கட்டுமே”ன்னு அலட்டுனாரு.

அம்மிணிட்ட திரும்பி, “மூணாவது மாடில தான் நீங்க தேடுற ஐட்டம் இருக்கு. வரீங்களா, பார்த்துட்டு வருவோம்”னு லிஃப்ட்ல கூட்டிக்கிட்டு போயிட்டாரு. இங்கேயும் டிஸ்கவுன்ட் எக்ஸ்ட்ராவா வாங்கினதைச் சொல்லிக் காட்டுனார்.

நாலஞ்சு பில்லைக் கையில் கொடுத்தாரு. “எங்க ஐட்டம்க்கு பணம் நாளைக்கு ஆபிஸ் வந்ததும் கொடுத்துடறோம். மொத்தமா பில்லு போட்டாத்தான் ஒரே டிஸ்கவுன்ட்னு கடைக்காரர் சொல்லிட்டாரு”ன்னு விளக்கம் கொடுத்தாரு.

கார்ல பின்னாடி எல்லா சாமானையும் ஏத்திட்டு, நடு சீட்டுல அம்மிணி கூட ஒக்காந்தாரு. “அப்டியே எங்களை வீட்டுல ட்ராப் பண்ணிட்டு போயிருங்க”ன்னு சொன்னதும் டிரைவர் ஏதோ முனகுனாரு.

அண்ணாச்சி பட்டுன்னு நூறு ரூபாயை அவர் கையில் வச்சு அழுத்துனாரு. “பாவம். நாம ஏதாச்சும் கவனிச்சாத்தானே அவருக்கும் ஒதவி”ன்னு சொல்லி, அம்மிணியைப் பார்த்தாரு. அம்மிணி தம் பங்கு அம்பது ரூபாயை நீட்டவும் லபக்குன்னு வாங்கி பையில் சொருகிக்கிட்டாரு.

ரெண்டு பேர் வீட்டுலயும் இறக்கி விட்டப்போ, சவடாலா இறங்கிப் போனாங்க. ப்ளான் பண்ண நேரத்தை விட, ஒன்றரை மணி நேரம் இந்த அலைச்சல்ல கூடவே ஆயிருச்சு. திரும்பற வழிலதான் என் அபார்ட்மென்ட். பெருமூச்சு விட்டுக்கிட்டே ஆபிஸ் போனேன். எல்லாத்தியும் இறக்கி வச்சு பஸ்ஸைப் பிடிச்சு வீட்டுக்கு வரும்போது, ராத்திரி பத்து மணி.

மறுநாள் பாஸ் முறைச்சுப் பார்த்தாரு. “பில்லுல சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஐட்டம்ஸ் இருக்கே”ன்னு. விளக்கம் கொடுத்தா இன்னும் உக்கிரம் ஆயிட்டாரு.

“அதெல்லாம் ஒங்க பாடு. கரெக்டா ஆபிஸ் பணத்தைக் கணக்கு காட்டி மீதியைக் கொடுத்துருங்க. ஆடிட்ல அசிங்கமா கேள்வி வரும்”னு மிரட்டி விட்டாரு. நொந்து நூடுல்ஸாகி சீட்டுக்கு வந்தேன்.

“பாஸுன்னா அப்படித்தான். சம்பளம் வாங்கிட்டு ஒங்களுக்குத் தர வேண்டியதைக் கொடுத்துடறேன். ஓக்கேவா”ன்னு, ப சீ அண்ணாச்சி அலட்டிக்காம சொன்னாரு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE