இசை வலம்: இந்திப் பாடலின் மெட்டில் கல்கி எழுதிய பாடல்!

By ரவிகுமார் சிவி

கர்னாடக இசை மேடைகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிவருபவர் சங்கீதா சிவகுமார். கர்னாடக இசையின் செழுமையை உள்வாங்கி சிறப்பாகப் பாடுவதுடன், அதை முறையாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் குருவாகவும் நிறைவான பணியைச் செய்துவருபவர். அண்மையில் அமரர் கல்கியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ' எனும் பாடலை சங்கீதா பாடியிருக்கிறார்.

கல்கி எழுதி 1944-ல் வெளிவந்த ‘மீரா' திரைப்படத்தில் நாயகியாகத் தோன்றியதோடு, இனிமையான குரலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல் அது!

ஏதோ பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது... வந்தோமா, பாடினோமா என்றில்லாமல் ஓர் அரிய வரலாற்றுத் தகவலையும் இந்தக் காணொலியில் பதிவு செய்திருக்கிறார் சங்கீதா. கல்கி கிருஷ்ணமூர்த்தி அந்நாளில் ஒலித்த ஓர் இந்திப் பாடலைக் கேட்டிருக்கிறார். அந்தப் பாடலைப் பாடியவர் ரிஹானா தாப்ஜி. காந்தியின் மீது அபரிமிதமான மரியாதையையும் அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்திய இஸ்லாமியப் பெண் அவர். அதோடு, அவர் கிருஷ்ணனின் பக்தையும்கூட. அந்தப் பாடலின் மெட்டை உள்வாங்கி கல்கி தமிழில் எழுதியிருக்கும் படைப்புதான் `மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியிருக்கும் `பிருந்தாவனத்தில்' எனத் தொடங்கும் அந்தப் பாடல்.

பசுக்களின் கூட்டம் சூழ்ந்திருக்க கண்ணனின் மேனி முழுவதும் தூசுகள் படர்ந்திருப்பதைப் பார்த்து, வானவர்கள் புவியை வியந்து பேசுகின்றனராம்... என்ன ஒரு நயமான கற்பனை! கல்கியின் அந்தக் கற்பனையைச் சேதாரப்படுத்தாமல் எம்.எஸ் பாடியிருப்பதைப் பின்பற்றி சங்கீதாவும் நிறைவோடு நம் செவிகளுக்கு விருந்து படைத்திருக்கிறார். பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளை மனதில் நினைத்து பாடலைக் கேட்கும்போது நம்மிடமும் ஓர் ஏக்கம் எட்டிப் பார்க்கும்!

கண்ணன் புகழ்பாடும் கானம் கேட்க: https://www.youtube.com/watch?v=HNjhA2lKynA

தனயனைப் பாடியவரின் தந்தைப் பாட்டு!

மகா சிவராத்திரியை ஒட்டி சிவ ஆலயங்களில் பக்தியின் அடர்த்தியை மக்களின் மனத்தில் விதைக்கும் பலவிதமான இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடந்தன. இந்தக் காணொலியில் கர்னாடக இசை வானில் பிரகாசிக்கும் இளம் நட்சத்திரமான அபிஷேக் ரகுராம், வயலின் வாத்தியக் கலைஞர் கணேஷ் பிரசாத் மற்றும் மிருதங்க வித்வான் பத்ரி சதீஷ்குமார் ஆகியோரோடு இணைந்து, முத்துசுவாமி தீட்சிதர் சிவபெருமானின் கருணையைப் பேசும் அரிதான கீர்த்தனையைப் பாடியிருக்கிறார்.

அபீதகுசாம்பா சமேதராய் வீற்றிருக்கும் அருணாசலநாதரை எப்போதும் நினைக்கிறேன். நினைத்த கணத்திலேயே அருளை தரக்கூடிய பாதங்களை உடையவர், கோடானு கோடி சூரியனுக்கு ஒப்பானவர், கருணைக்கு ஆதாரம், தேவர்களுக்கு அரண், தேஜோமயமான லிங்கவடிவானவர், திருக்கையில் மான், ஆதி அந்தம் அளவிட முடியாதவர், நந்தியை வாகனமாகக் கொண்டவர், வீரமான குருகுஹனிடம் அன்பாக இருப்பவர், ஒளிவீசும் தன் கேசத்தில் கங்கையை முடிந்திருப்பவர், அருட்பிரகாசத்தால் சூரிய, சந்திர, அக்னியையும் மங்கச் செய்யும் அருணாசல ஈஸ்வரனை வணங்கிப் போற்றுகிறேன் எனும் அர்த்தத்தில் முத்துசாமி தீட்சிதர் படைத்திருக்கும் மிகவும் அரிதான கீர்த்தனை இது.

முத்துசுவாமி தீட்சிதர் இந்தக் கீர்த்தனையை சாரங்கா எனும் ராகத்தில் அமைத்திருப்பார். அந்த ராகத்தின் சஞ்சாரங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் இந்தக் காணொலியில் நம் செவிகளுக்கு தரிசனப்படுத்தி இருக்கிறார் அபிஷேக் ரகுராம்.

இசையே சிவம் என உணர: https://www.youtube.com/watch?v=WV6OF0XMIjg

ஏ.கே.பி.பிராண்ட் தீர்மானம்!

இப்போதெல்லாம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் அதில் ஒலிக்கும் பாடல்களில் பாரம்பரியமான கர்னாடக இசையின் தன்மைகளை ஏதாவது ஒரு பாட்டிலாவது வெளிப்படுத்தி சிறப்பு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. மக்களிசையான கானா, சொல்லிசை எனப்படும் ராப், ஹிப்ஹாப், நாட்டுப்புற இசை, குத்துப்பாட்டு போன்ற வகைமைகளோடு பெரும்பாலான பாடல்கள் ஒலித்தாலும், கர்னாடக இசையில் அமைந்த பாடல்களையும் சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் இசையமைப்பாளர்களிடம் தென்படுகிறது. நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் இருப்பவர்களும் அதற்கு ஒத்துழைத்து சாத்தியப்படுத்துவது, வெகுஜன வணிகச் சந்தையைக் குறிவைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் வரவேற்க வேண்டிய விஷயம்.

அப்படியொரு விஷயத்தை அருமையாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.தமன். மகேஷ் பாபு நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிக்கும் `சர்க்காரு வாரி பாட்டா’ எனும் திரைப்படத்தின் `கலாவதி’ எனும் பாடலை கலாவதி என்னும் ராகத்திலேயே அமைத்திருக்கிறார் தமன். இந்தப் பாடலில்தான் கர்னாடக இசையை மாசிடோனியாவின் சிம்பனி இசையோடு நாகசுவர, தவில் இசையை ஊடுபாவாக நெய்து கொடுத்திருக்கும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பாடலின் காணொலியை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கின்றனர். பாடலின் உருவாக்கம், நாயக நாயகியின் தோற்றம், தொழில்நுட்பம் போன்ற முக்கியத்துவங்களைத் தாண்டி அதில் நாகசுவரம் வாசித்திருக்கும் துரை பாரதி, கோடை இடி போல் தவில் வாசித்திருக்கும் ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் ஆகியோரின் பங்களிப்பு நம்மை ஈர்த்தது. அதிலும் ஏ.கே.பியின் தனிப்பட்ட பாணியில் ஒலிக்கும் `தீர்மானம்’ கேட்பவர்களை `அடடே’ போடவைப்பது.

அரிதாகவே திரைப்பாடல்களில் தன்னுடைய தவில் இசையை அளிக்கும் ஏ.கே.பி-யிடம் இது குறித்துப் பேசினோம்:

“ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாட்டு முழுவதும் நான் வாசித்த தவில் இசை நிறைந்திருக்கும். இளையராஜா இசையமைத்த 1,000-வது திரைப்படமான `தாரை தப்பட்டை’ படத்துக்காக தவில் வாசிக்க கூப்பிட்டிருந்தார். ‘என்ன வாசிக்கணும்?’ என்றேன். ‘மூன்று நிமிடத்துக்கு ஒரு தனியாவர்த்தனம் வாசியுங்கள்’ என்றார். ‘உங்கள் அபிப்ராயம் என்ன?’ என்றேன். ‘நீங்கள் வாசிப்பதுதான் எங்களின் அபிப்ராயம்’ என்றார். இதெல்லாம் என் மீதும் என்னுடைய இசையின் மீதும் நம்பிக்கை வைத்து இளையராஜா போன்றவர்கள் சொல்லும் வார்த்தை. இந்தப் படத்திலும் அப்படியான ஒரு பாடலுக்கு வாசித்திருக்கிறேன். இசையமைப்பாளர்களின் விருப்பம் முக்கியம். அவர்களுக்கு வேண்டியதை என்னுடைய பாணியில் கொடுப்பேன். அப்படி நிகழ்ந்ததுதான் இந்தப் பாடலில் தவில் வாசித்தது. எல்லா இசையிலும் கணக்கு ஒன்றுதான். ஸ்டைல் தான் வேறுபடும்!” என்கிறார் பத்மஸ்ரீ விருதுபெற்ற பெரும் கலைஞரான ஏ.கே.பி.

https://www.youtube.com/watch?v=Vbu44JdN12s

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE