கமுதி
டீக்கடை ஒன்றில்...
“ஏம்பா... நம்ம பேரூராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி இருக்கு?”
“வேற யாரு... எங்க கட்சிதான்!”
“நீயெல்லாம் ‘எங்க கட்சி’ன்னு சொல்லிக்காதே. நேத்து வரை தோத்த கட்சில இருந்தே. இன்னிக்கு ஜெயிச்ச கட்சிக்கு மாறிருக்கே... நாளைக்கு நீ எந்தக் கட்சிக்கு போவியோ யார் கண்டா?!”
(கடையில் அனைவரும் சிரிக்க, கட்சிக்காரர் முறைக்கிறார்)
- எம்.கல்லூரி ராமன்,
கரிசல்புலி
தஞ்சாவூர்
தர்பூசணி வியாபாரியும், வாடிக்கையாளரும்...
“என்னப்பா... மருந்து அடிச்சிருக்கியா..?”
“அதென்ன அப்படி கேட்டுட்டீங்க. மருந்துக்குக்கூட மருந்து அடிக்காத இயற்கையான தர்பூஸ்ங்க!"
“யோவ்! தள்ளாடிட்டு நிக்கிறியே... தண்ணி அடிச்சிருக்கியான்னு கேட்டேன். பெரிய ஓபிஎஸ் மாதிரி இயற்கையானது, செயற்கையானதுன்னு ஓவர் அலம்பல் பண்றியே!”
- பா து பிரகாஷ்,
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
காய்கறி சந்தையில்...
“என்னண்ணே முருங்கைக்காய் விலை குறையவே இல்லையே?!”
“குறையிற நேரத்துல உக்ரைன் போர் வந்திடுச்சே... என்ன பண்றது?!”
“சந்தையில விக்கிற காய்கறிக்கு சர்வதேச அளவுல பில்டப் குடுக்கிறீங்களே... நியாயமா?”
“இதுக்கே அசந்துட்டா எப்படி? அமெரிக்கா போர்ல இறங்குறதுக்குள்ள கிடைச்ச விலைக்கு வாங்கிட்டுப் போயிடுங்க... இல்லைன்னா ஒரு காய் அம்பது ரூபா ஆகிடும்!"
- தே.ராஜாசிங்ஜெயக்குமார்,
தஞ்சாவூர்