நிழற்சாலை

By காமதேனு

நவீன போர்க்களம்

தேடுதலுக்கு கூகுள்

வீடியோவிற்கு யூடியூப்

தகவலுக்கு வாட்ஸ்-அப்

என மருவிய உலகினில்

‘டார்கெட்' என அழைக்கப்படுகிறார்கள்

துப்பாக்கி முனையில்

குறிவைக்கப்படும்

மனிதர்கள்!

- ரகுநாத் வ

காலத்தின் ரகசியம்

நிழற்படம் எடுத்துக்கொண்டால்

பிரிந்துவிடுவோம் என்றே

சமாதானம் சொல்வாள்

அம்மா...

அண்ணனின் கிரகப் பிரவேசம்

மாரியம்மன் கோயில் தேரோட்டம் என

எல்லோரும் சேர்ந்தெடுத்துக்கொண்ட

நிழற்படங்களில்

எப்போதும்

இல்லாதிருந்த அம்மா

பின்னொரு நாள்

நிஜமாகவே இல்லாமல் போனபோது

அவளுக்கென நிழற்படமும்

இல்லாமலே போயிருந்தாள்.


மழைநின்ற பகல் ஒன்றில்

அட்டாலியில் கிடைத்த

அம்மாவின் உடைமைகளில்

பழுப்பேறிய ஓரங்களின்

சட்டகத்துக்குள்

சரியச்சரிய மல்லிகை மணக்க

இளஞ்சிரிப்பு இழையோட

யாரோ ஒருவருடன் நின்றுகொண்டிருந்த அம்மா

அவ்வளவு அழகாக இருந்தாள் நிழற்படமாய்.

- கார்த்திகா

அறுபட்ட நெருப்பிழை

இறந்துபோன இவனுக்கு

45 வயதிருக்கும்

குழந்தையில்லை என்ற ஏக்கம்

இவனைக் கொன்றிருக்குமா

தெரியவில்லை...

ஆளுக்காள் பேசினார்கள்

வாயில் வந்ததை

வீடு வீடாப் பிச்சையெடுக்கிறவனுக்குக்கூடக்

குழந்தையிருக்கிறது என்பது அதில்

நெருப்புத்தொடர்

இவனை இழந்த அவள் அழுகையை நிறுத்தி

வெளியே பார்த்தாள்

சிறுவர்கள் சிலர் நெய்ப்பந்தம்

பிடித்துக்கொண்டிருந்தார்கள்

குழந்தையில்லாத எவனுக்கோ

சிறுவயதில்

நெய்ப்பந்தம் பிடித்திருப்பான்

இறந்துபோன இவனும்.

- ஹரணி

மொழியற்ற உரையாடல்

வெயிலேறிய மதியங்களின் மீது

ஓய்வாய் சுருண்டு படுத்திருக்கும்

பாழடைந்த வீட்டின் கதையை

அங்கேயே

வசிக்கும் பறவை

முதலில்

இடதும் வலதும்

தலையைத்

திருப்பிக் கேட்கிறது

பிறகு அரைமனதாய்

மொழிபெயர்த்துக் கூவுகிறது

எப்போதாவது வீட்டைக் கடக்கும்

வழிப்போக்கனின்

காதுகுடைந்து

விழுகிறது

இறகுகளாலானதொரு

காலத்தின் சொல்.

-ந.சிவநேசன்

ரத்தம் பூசப்பட்ட வானம்

பரபரப்பாக விற்பனையாகின்றன

இறப்புச் செய்திகள்

பிணங்களின் மேலமர்ந்து

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு

அழைப்பு விடுக்கப்படுகிறது

தலைக்கு மேல் சீறிப்பாயும்

ராக்கெட்டுகளை

ஆச்சரியமாகப் பார்க்கிறான்

அப்பாவிச் சிறுவன்


சமாதானப் புறாவின்

இறகுகளெங்கும்

இறுகிக் கிடக்கிறது

துப்பாக்கிமுனையிலிருந்து வழிந்து

தோய்ந்த இரத்தம்.

-பா.சிவகுமார்

அருள் பெறும் இறை

நின்றுகொண்டேயிருக்கிறது

கால் வலிக்காதா என

கேள்வி எழுப்பியபடி

கடவுளின் மீதும்

கருணை மழை பொழிகிறார்கள்

குழந்தைகள்.

- மு.முபாரக்

தாயன்பு

மலைக்கோவில் அடிவாரத்தில்

கழுத்துமணிகளை ஆட்டியபடி

பொழுதுக்கும் பக்தர்களை

ஆசிர்வதித்து

சின்னக் குழந்தைகள்

அருகில் வரும்போதெல்லாம்

ஆகப் பெரிய தும்பிக்கையை

மயிலிறகாக்கி

தலையில் ஒத்தியெடுக்கிறது

காட்டில் தொலைத்த

தன் கன்றினை நினைத்தபடி

அந்தக் கோயில் யானை.

- காசாவயல் கண்ணன்

பார்க்காத பக்கம்

ரசனையை உடற்செல்

ஒவ்வொன்றிலும் நிரப்பி

இயற்கைக்கு நன்றி சொல்லவென

தூரங்கள் கடக்கிறேன்

பனி முக்காடிட்ட மலைகளும்

பூத்துக் குலுங்கும் மரங்களும்

மெல்லக் கவியும் இரவும்

நிலவொளியுமாய்ப் பருகி முடித்த களைப்பில்

வீடு சேர்கையில்

கொல்லையில் கேட்பாரற்றுப்

பூத்திருந்தது ஒரு சாமந்தி.

- கி.சரஸ்வதி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE