சிறகை விரி உலகை அறி-39:முகவரி சொல்லும் வரலாறு

By சூ.ம.ஜெயசீலன்

பண்டைய நாகரிக நிலத்தில் மகிழ்ந்து, நீல வானில் கூடிப் பறந்த பறவையில் கலந்து, வியர்வையைத் துடைத்த காற்றில் கரைந்து ஏதென்ஸ் விமான நிலையம் திரும்பினேன்.

அடுத்து, போலந்து நாட்டின் கிராக்கோ நகருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். நேரடி விமானம் ஏதுமில்லை. இத்தாலி அல்லது ஹங்கேரி சென்று அங்கிருந்து அடுத்த விமானத்தில் செல்ல வேண்டும். சும்மா இறங்கிச் செல்வதற்குப் பதிலாக, அந்நாட்டின் தலைநகரை ஒரு நாள் பார்த்துச் செல்ல நினைத்தேன். இத்தாலிக்கு ஏற்கெனவே சென்றுள்ளதால், ஹங்கேரிக்கு பயணச்சீட்டு வாங்கியிருந்தேன். ஏதென்ஸில் இரவு 10.25-க்கு புறப்பட்டால், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டுக்கு இரவு 11.25-க்குச் சென்றுவிடலாம்.

அருங்காட்சியகத்தின் உள்ளே...

கண்கள் இரவைக் குடித்திருந்த பொழுதில், ‘விமானம் தாமதம்’ என்றார்கள். அதிகாலை ஒரு மணிக்குள் வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்த தங்குமிடத்துக்கு உடனே அறிவித்தேன். மூன்று மணிநேரம் தாமதாக புறப்பட்ட விமானம் அதிகாலை 2.30-க்கு புடாபெஸ்ட் சேர்ந்தது. பேருந்தில் ஏறி, தங்குமிடத்தின் அருகில் இறங்கினேன். விளக்கொளிகள் பேசிக்கொள்ளும் பொழுதில் அமைதியாக நடந்தேன்.

மனித வாசம் தேடி வாசலில் நின்ற இளம்பெண்கள் இருவர், “உள்ளே வாங்க சார்” என சொல்லில் சுவை வடிய அழைத்தார்கள். விழிகளில் புன்னகையைப் போர்த்திவிட்டு கடந்தேன். அதே தெருவில் இருந்த என் விடுதிக்குச் சென்றபோது அதிகாலை 4 மணி. ஆழ்ந்து உறங்கி 7 மணிக்கு எழுந்தேன். காலையிலேயே தங்குமிட கணக்கை நேர் செய்தேன். வரவேற்பாளரிடம் 2 யூரோ கொடுத்து, பொருள் வைக்கும் அறையில் பையை வைத்துவிட்டு புறப்பட்டேன்.

உட்புற குவிமாடம்

நன்கொடை தந்த நல்மகன்

அரசியலறிஞரும் செல்வந்தருமான ஃபெரங்க் சிகிமி (Ferenc Szechenyi), “என் அன்பான தாய்நாடு மற்றும் மக்களின் நன்மைக்காக, என்றென்றைக்கும் திரும்பப் பெற இயலாதபடி, என்னிடம் உள்ள பொக்கிஷங்களை தானம் வழங்க முடிவு செய்துள்ளேன்” என்று 1802-ல் அறிவித்தார். அன்பளிப்பை அரசர் ஏற்றுக்கொண்டார். 11,884 அச்சு புத்தகங்கள், 1156 கையெழுத்துப் பிரதிகள், 142 வரைபட தொகுப்புகள் மற்றும் வேலைப்பாடு மிக்க சிற்பங்கள் மற்றும் 2019 தங்க நாணயங்கள் கொண்ட நன்கொடையை வைத்து, 1802-ல் தேசிய நூலகம் தொடங்கப்பட்டது. அதுவே பின்நாளில், ஹங்கேரி தேசிய அருங்காட்சியகமாக மாறியது. பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதிய கட்டிடம் 1837-ல் தொடங்கி, பத்து ஆண்டுகளில் நிறைவு பெற்றது.

சுதந்திர புரட்சியின்போது, மார்ச் 15, 1848-ல் இந்த அருங்காட்சிய வளாகத்தில்தான், சாண்டோர் பெடோபி புரட்சிகர உரை நிகழ்த்தினார். ஹங்கேரி பாராளுமன்றம் கட்டப்படுவதற்கு முன்பாக, மேலவை மற்றும் கீழவை இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் இங்குள்ள அரங்கத்தில் நடந்துள்ளன.

முகப்பில் ஜானஸ் அரானியின் சிலை

ஹங்கேரி தேசிய அருங்காட்சியகம்

அருங்காட்சியகத்தை, 6 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். அவை (1) தொல்பொருள், (2) வரலாற்றுக் களஞ்சியம், (3) நாணய சேகரிப்பு, (4) ஹங்கேரியன் வரலாறு சார் காட்சிக் கூடம், (5) வரலாறு சார் நிழற்படங்கள் (6) மத்திய தகவல் தளம் ஆகியவை.

அருங்காட்சியக முகப்பிலேயே, ஹங்கேரி கவிஞர் ஜானஸ் அரானியின் (Janos Arany) சிலை என்னை வரவேற்றது. அருங்காட்சியகத்துக்குள் பிரம்மாண்டமான முற்றம் இருந்தது. ‘வலதுபக்கமாகச் சென்று பார்த்துவிட்டு இடதுபுறமாக வெளியே வரவேண்டும்’ என்கிற குறிப்பை வாசித்தேன். நுழைவுச்சீட்டு பெற்று அரங்கில் நுழைந்ததும், மெல்லிய ஒளி, கலையரங்குக்குள் செல்லும் உணர்வை அளித்தது.

தாமிர காலத்தைச் சேர்ந்த மண்ணாலான தாழிகள்

வரலாற்றுப் பாதை

தகவல் பலகையில், ‘தற்போதைய ஹங்கேரி நிலப்பகுதிக்கு முதல் மனிதன் (Homo erectus) வந்தபோதே, இயற்கையின் ஆற்றல்களுள் ஒன்றான நெருப்பை கையாளத் தெரிந்திருந்தான். அக்கால மனிதர்கள், ஆற்றங்கரையோரம் சேகரித்த கூழாங்கல் அல்லது தட்டையான எலும்புகளை வைத்து எளிமையான ஆயுதங்கள் செய்து பயன்படுத்தினார்கள்’ என்கிற தகவல் இருந்தது. தன் நாட்டின் முதல் மனிதரையும் அவர்களின் ஆற்றலையும் தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்வது நெகிழச் செய்தது.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எலும்புகள்

தாமிர காலத்தைச் சேர்ந்த மண்ணாலான தாழிகள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. தாழிகளின் தலைப்பகுதியில் கண்கள் மற்றும் மூக்கு போன்ற அடையாளங்கள் இருக்கின்றன. தலைகள் இல்லாத அல்லது தலைகள் மாற்றக்கூடிய வகையிலான இத்தாழிகள் அகழாய்வில் கிடைத்தவையாகும்.

புதிய கற்காலத்தில், புனிதச் சடங்குகளுக்கான புனித இடங்கள் மக்களின் அன்றாட வாழ்விடங்களில் இருந்து தனியாக இல்லை. தங்களின் அன்றாட வாழ்வை நிர்ணயிக்கும் மறுவுலக சக்திகளுடன் இணைந்தே வாழ்ந்தார்கள் என்கிறது அகழாய்வு.

இறந்தவர்களை வீட்டின் அடியில் அல்லது கட்டிடங்களைச் சுற்றியிருந்த குழிகள் அல்லது கால்வாய்களில் தொடக்கத்தில் புதைத்திருக்கிறார்கள். புதிய கற்காலத்தின் கடைசியில்தான், வசிக்கும் வீடுகளும், கல்லறைகளும் தனித்தனி இடங்களில் உருவாகத் தொடங்கியதை அகழாய்வுகள் நிரூபிக்கின்றன.

புனித ஜார்ஜ்

புனித ஜார்ஜ்

‘பறவை நாகத்தை வீழ்த்தும் புனித ஜார்ஜ்’ என்கிற குறிப்புடன் கம்பீரமான சிலையை அருங்காட்சியகத்தில் பார்த்தேன். கிறிஸ்தவரான ஜார்ஜ், கி.பி.3-ம் நூற்றாண்டில் உரோமை பேரரசர் டயோக்ளியஸ் ஆட்சியில் படைத் தளபதியாக விளங்கியவர். கிரேக்க மற்றும் உரோமை கடவுள்களை வழிபட மறுத்த ஜார்ஜை, கொடூரமாகத் துன்புறுத்திய பேரரசர், அவரை கொலையும் செய்தார் என்கிறது கிறிஸ்தவ பாரம்பரியம்.

இஸ்லாமிய தரவுகள் சில, ஜார்ஜை இறைவாக்கினராக கருதுவதுடன், ‘இயேசுவின் கடைசி சீடருடன் தொடர்புடைய மக்களுக்கு மத்தியில் ஜார்ஜ் வாழ்ந்தார். அப்பல்லோவுக்கு சிலை எடுக்கப்படுவதை எதிர்த்தார். கொடும் துன்புறுத்தலுக்கு ஆளான ஜார்ஜ், மரண வாயிலில் இருந்து பலமுறை தப்பினார். நெருப்பு மழையால் நகரை கடவுள் அழித்தபோது, ஜார்ஜ் மறைசாட்சியானார்’ என்கின்றன (காண்: A to Z of prophets in Islam and Judaism, p.313).

பறவை நாகம் ஒன்று, மக்களைத் துன்புறுத்தி தினமும் ஆடு மாடுகளை இரையாகக் கேட்டது. காலப்போக்கில், மனிதர்களையும் கேட்டது. தனி ஆளாகச் சென்ற ஜார்ஜ், பறவை நாகத்தை கொலை செய்து மக்களைக் காத்தார் என்கிறது புராணக்கதை. இச்சிலையும் அதையே பிரதிபலிக்கிறது.

மத்திய கால கலைப் பொருட்கள்

தொல்பொருள்

388 இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த விலங்குகளின் எலும்புகள், இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளில் கார்பாத்தியன் படுகையில் (Carpathian Basin) வாழும் ஒவ்வொரு பெரிய பாலூட்டி இனங்களின் எச்சங்களும், ஹங்கேரியர்கள் உட்பட, இப்பகுதியில் வாழ்ந்த பிற மக்கள் பயன்படுத்திய வீட்டு விலங்குகளின் எச்சங்களும் இங்கே உள்ளன.

மத்திய காலத்தின் தொடக்கத்தில் நிகழ்ந்த பாரிய புலம்பெயர்வு (கி.பி.476-800) ஐரோப்பிய வரலாற்றில் இருண்ட காலம் அல்லது புலப்பெயர்வு காலம் எனப்படுகிறது. இக்காலத்தில், ஹங்கேரியன் நிலப்பகுதியில் கிடைத்த பொருட்கள் ‘புலம்பெயர்வு கால சேகரிப்புகள்’ எனும் தலைப்பில் உள்ளன. ஜெர்மானிய-சார்மேசான் சேகரிப்புகள், ஹங்கேரியன் வெற்றிகொண்ட பொருட்கள், மத்திய கால கல் சிற்பங்கள், அட்டோமன் ஆட்சி (1529-1699), மத்திய காலத்தின் பிந்தைய பகுதி (1301-1711), கோயில் மணிகள் போன்ற தலைப்புகளிலும் அகழாய்வு பொருட்களும், பழங்கால பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன.

வரலாற்றுக் களஞ்சியம்

மரச்சாமான்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள், பூட்டு, அச்சு, சமகால சான்றிதழ்கள், ஆவணங்கள், பொம்மை, வீட்டு உபயோகப் பொருட்கள், சமகால கண்ணாடி மற்றும் பீங்கான், நவீன கண்ணாடி மற்றும் பீங்கான், சமகால தனிநபர் பொருட்கள், நவீனகால நகைகள், நவீனகால வரலாற்று ஆவணங்கள், வெள்ளீயமும் காரீயமும் கலந்த பொருட்கள் (Pewter), அஞ்சல் அட்டை, வரைபடக் களஞ்சியம், போஸ்டர்கள், சமகால மரச்சாமான்கள், நவீன இரும்பு பேழை, சமகால முத்திரை மற்றும் அச்சு, தண்டனை வழங்கும் கருவிகள், தொழில் துறை வரலாறு போன்ற பல்வேறு தலைப்புகளில் சேகரித்து பாதுகாக்கிறார்கள்.

‘ஆடை’ பிரிவில், திருமணம், பெயர் வைப்பது, முதல் நற்கருணை பெறுவது, படுக்கை விரிப்பு, மேசை விரிப்பு என 26 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடைகள் இங்கு உள்ளன. ‘புகை பிடிக்கும் குழாய்’ பிரிவில், மண், பீங்கான், மரம், கடல் நுரை (Sepiolite) போன்றவற்றாலான குழாய்களும் சுருட்டு மற்றும் சிகரெட் சாம்பல் கிண்ணங்களும் உள்ளன.

நாணயங்கள் சேகரிப்பு பகுதி 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியன் வரலாறு சார் காட்சி கூடத்தில், ஓவியங்கள், வரைவியல் ஓவியங்கள் (Graphic) மற்றும் சமகால ஓவியங்கள் இருக்கின்றன. வரலாற்று நிழற்படங்கள் பகுதியில், நகரங்கள் மற்றும் கிராமங்கள் சார் படங்களும், பன்னாட்டு நிலவரம் தொடர்பான படங்களும் உள்ளன.

சுற்றிப் பார்க்கையில், ‘இருந்தால் இப்படியொரு அருங்காட்சியகம் இருக்க வேண்டும்’ என்கிற உணர்வு மேலெழுந்தது. இலை நிறைய உணவு வைத்தவுடன், ‘எதை சாப்பிடுவது எனத் தெரியாமல் திகட்டிவிட்டது’ என்று சொல்வோமே, அப்படியான ஓர் உணர்வு அருங்காட்சியகத்தைவிட்டு வெளியே வந்தபோது இருந்தது.

(பாதை நீளும்)

பாக்ஸ்

புனித ஜார்ஜ் கோட்டை

இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர், தங்களுக்கான முதல் கோட்டையை சென்னையில் கட்டத் தொடங்கினார்கள். 1640, ஏப்ரல் 23 புனித ஜார்ஜ் திருவிழாவின்போது கட்டி முடித்தார்கள். இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர் புனித ஜார்ஜ் பெயரை இக் கோட்டைக்குச் சூட்டினார்கள். அந்தப் புனித ஜார்ஜ் கோட்டையில்தான், இன்றைக்கு தமிழக சட்டப்பேரவை செயல்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE