இன்னிக்கு சிக்குனது நான்தானா..?

By ரிஷபன்

எதிர்வீட்டு அண்ணாச்சி, அப்பப்போ என்னைப் பார்த்தா உணர்ச்சிவசப்படுவார். இன்னிக்கும் கண்ணுல தண்ணி வச்சுட்டு என்னைப் பார்த்தார். “நாளைக்கு என்கூட கொஞ்சம் வர முடியுமா.”

எதுக்குன்னு புரியாம முழிச்சப்போ சொன்னாரு. ஒவ்வொரு மாசமும் மொத ஞாயிறு அன்னதானம் செய்வாராம். வழக்கமா கூட வர அண்ணாச்சிக்கு வேற வேலை வந்துருச்சாம். அதனால என்னைக் கூப்பிடறாராம்.

“இதுல என்ன வந்துச்சு. நல்ல காரியம்தானே. போற வழிக்குப் புண்ணியம்”னு அம்மிணி சம்மனே இல்லாம ஆஜர் ஆனாங்க. அவங்க சொன்னதைப் பார்த்தா, என் அக்கவுன்ட்ல புண்ணியமே இல்லாத மாதிரி ஒரு ஒதறல் வந்துச்சு.

“நம்ம அபார்ட்மென்ட்லயே நிறையப் பேர் இருக்காங்க. நான் ஏன் ஒங்களைக் கூப்பிடறேன், தெரியுமா”ன்னு கேட்டு, அம்மிணியை பார்த்தாரு.

“ஒங்க வீட்டுக்காரருக்கு ஒரு மொகராசி இருக்கு. இங்கே குடி வந்தப்போ ஒங்களைத்தான் மொதல்ல பார்த்தேன். இன்னிய வரை எல்லாமே நல்லா நடக்குது எங்க குடும்பத்துல. எங்கூட்டு அம்மிணி ஒங்களைப் பத்தியேதான் சொல்வாங்க. தங்கமான மனுசங்க. ஒதவின்னு வாயைத் தொறந்து கேட்டா போதும். உசுரைக் கொடுப்பாங்கன்னு” பேசிக்கிட்டே போனாரு.

அம்மிணிக்கு கண்ணு கலங்கிருச்சு. “அக்கா அப்படியா சொல்லுச்சு”ன்னு, டெக்னிக்கா தன்னைத் தங்கையாக்கிக்கிட்டு கேட்டாங்க. எ.வீ அண்ணாச்சி உஷாராகி, அவர் வீட்டு அம்மிணி பக்கத்துல இல்லாத துணிச்சல்ல ஆமான்னு தலையசைச்சாரு. அம்மிணி என்னைத் திரும்பி ஒரு லுக் மட்டும் விட்டாங்க.

அதுக்கு அர்த்தம் புரிஞ்சு தலையாட்டுனேன். அவ்ளோதான். முழு விவரமும் சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. அவங்க ஆபிஸ்ல இதுக்காவ மாசாமாசம் கலெக்ட் பண்றாங்களாம். ஒரு எடத்துல சமைச்சு பொட்டலம் கட்டித் தரச்சொல்லி ஏற்பாடு செஞ்சிருக்காங்க. சாம்பார் சாதம், தயிர் சாதம்னு கட்டி வச்சிருப்பாங்களாம். அதை ஆட்டோல எடுத்துக்கிட்டு நாலஞ்சு இடத்துக்குப் போய் ஆளுங்களுக்குக் கொடுக்கணும். அம்மிணி உடனே, “குடிக்கத் தண்ணி வேணாமா”ன்னு கேட்கவும், “ஒங்க பங்கா இருக்கட்டும்”னு கோர்த்து விட்டார்.

மறுநாள் கரெக்டா சொன்ன நேரத்துக்கு கதவைத் தட்டிட்டாரு. “ஆட்டோ வந்தாச்சு, வரீங்களா”ன்னு.

போகும்போதே வாட்டர் பாட்டில் ஒரு கேஸ் வாங்கிட்டாரு. பணத்தைக் கொடுத்துட்டு வந்து ஆட்டோல உக்கார்ந்தேன். இந்த அன்னதானம் எப்போ ஆரம்பிச்சது எப்படி நடக்குதுன்னு நேத்து சொல்ல விட்டுப்போன தகவலை எல்லாம், அவரு ஆட்டோ சத்தத்தை மீறி சொல்லிக்கிட்டே வந்தாரு. அதுல பாதிதான் எனக்குக் கேட்டுச்சு.

ரெண்டு பெரிய டப்பால பொட்டலங்களைப் போட்டு வச்சிருந்தாங்க. இவரு முன் ஜாக்கிரதையா உள்ளே உக்காந்துக்கிட்டு சீட்டுல ஒரு டப்பாவும் கீழே ஒரு டப்பாவும் வச்சுகிட்டதுல பின் சீட்டுல இடமே இல்லை. ஏற்கெனவே வாட்டர் பாட்டில சீட்டுல வச்சிருந்தாரு. ஆட்டோ பின்னாடியே ஓடி வரச் சொல்லுவாரோன்னு பயத்தோட பார்த்தேன்.

“டிரைவர் பக்கத்துல ஒக்காருங்க. அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரு”ன்னு, எ.வீ அண்ணாச்சி சொன்னதும் டிரைவரை அப்பதான் முழுசா பார்த்தேன். முன் சீட்டுல ஏற்கெனவே அவரு பிதுங்கி வழிஞ்சுக்கிட்டு இருந்தாரு. போனாப் போவுதுன்னு ஒடம்பை குலுக்கி எனக்கு இடம் கொடுக்கிறாப்ல பாவ்லா காட்டுனாரு. ஒரு காலு வெளியே, ஒரு காலு கியர்கிட்டேன்னு அசௌகர்யமா உக்காந்துட்டேன். கைக்குக் கிடைச்ச கம்பியை உயிருக்கு உத்திரவாதமா பிடிச்சுக்கிட்டேன்.

“தோ... கொஞ்ச தூரம்தான். சமாளிச்சுக்குங்க”ன்னு அண்ணாச்சி பின்னாலேர்ந்து குரல் கொடுத்தாரு. என் பொசிஷன்ல இருந்து அவரைத் திரும்பிக்கூட பார்க்க முடியல.

தொண்டை வறட்ட ஆரம்பிச்சுது. மேலே ஏதோ தண்ணி தெளிச்சாப்ல இருக்கவும் கண்ணாடில பார்த்தேன். எ.வீ அண்ணாச்சி ஒரு தண்ணி பாட்டிலை எடுத்து குடிச்சது காத்துல என் மேலேயும் தெளிச்சிருக்குன்னு புரிஞ்சுது.

அம்மா மண்டபம் பக்கம் ஆட்டோவை ஓரங்கட்டுனாரு. “அதா பாருங்க. வரிசையா உக்காந்து இருக்காங்கதானே. ரெண்டு டப்பாவையும் ஒவ்வொருத்தரா கொடுங்க. என்னால எந்திரிக்க முடியாது”ன்னு அண்ணாச்சி சொன்னாரு. அவரு எடுத்துக் கொடுக்கக் கொடுக்க நான் போய் அங்க இருந்தவங்களுக்குக் குடுத்துட்டு வந்தேன்.

மறுபடி ஆட்டோ கிளம்புச்சு. “அவ்ளோதான். நீங்க சூப்பரா செஞ்சீங்க. இனிமே ஒவ்வொரு மாசமும் நீங்கதான்னு முடிவு பண்ணிட்டேன்”னு அண்ணாச்சி சொல்லும்போதே நடுங்கிச்சு.

கம்பியை இறுக்கிப் பிடிச்சுகிட்டேன். காவிரிப் பாலத்துல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடி ஓடிக் கொடுக்க வேண்டியதாச்சு. நடுவுல வந்த பஸ், டூவீலர், மத்த வாகனங்களுக்குக் குறுக்கே உயிரைக் கையில புடிச்சுக்கிட்டு ஓடிப் போனேன்.

“மாசாமாசம் ஃப்ரெண்ட்ஸ் பணம் கொடுக்கிறாங்கதான். ஆனா, அதுவா முக்கியம்? சர்வீஸ் செய்ய யாரும் வர மாட்டேங்கிறாங்க”ன்னு எ.வீ அண்ணாச்சி சொன்னப்போ எப்படிய்யா வருவாங்க, இந்த மாதிரி பயங் காட்டுனான்னு நினைச்சுக்கிட்டேன்.

போன் அடிச்சுது. விடாம அடிக்கவும், “ஏதாச்சும் அவசர அழைப்பா இருக்கப் போவுது. எடுங்க ஸாரு”ன்னு டிரைவர் அதட்டுனாரு.

சிக்னல்ல நிறுத்துனப்போ டக்னு போனை எடுத்துப் பார்த்தேன். அம்மிணி தான். பேசாட்டி மறுபடியும் அடிப்பாங்கன்னு நானே கூப்பிட்டேன்.

“நல்லபடியா போய்க்கிட்டுருக்கா. ஒங்களுக்கு மறக்க முடியாத அனுபவமா இருக்கும். லீவு நாளுன்னு அரை மயக்கத்துல கெடப்பீங்க. உருப்படியா ஒரு காரியம் இன்னிக்கு ஒங்களுக்கு அவரால அமைஞ்சிது”ன்னு சொல்லிக்கிட்டே போகவும், சிக்னல் கிளியராகி ஆட்டோ குலுங்கவும் சரியா இருந்துச்சு. போனை லபக்குன்னு சட்டைப் பையில போட்டுக்கிட்டேன்.

மொத்த பாக்கெட்டும் காலி. தண்ணி பாட்டில் இருக்கான்னு பார்த்தா ஆறு பாட்டில் எ.வீ அண்ணாச்சியே குடிச்சுட்டு பின்னால போட்டுருந்தாரு. “காலி பாட்டில் யூஸ் ஆவும்னு வச்சேன்”னு சிரிச்சாரு.

அபார்ட்மென்ட் வாசல்ல இறங்கும்போது, எ.வீ அண்ணாச்சி கையில ரெண்டு பொட்டலம். “டிரைவருக்குன்னு எடுத்து வச்சேன்”னு கொடுக்கவும் தற்செயலா கீழேவந்த அம்மிணி, அவரைக் கையெடுத்துக் கும்பிட்டாங்க.

“அடுத்த மாசமும் ஒங்க வீட்டுக்காரரை அனுப்புங்க”ன்னு சொல்லிட்டு நடந்தப்போ, அம்மிணி சிலிர்த்துக்கிட்டு என்னைப் பார்த்தாங்க. “போவீங்க தானே!”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE