கருக்கலைப்புக்கான சட்ட அனுமதி கோரி, கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடி வந்த கொலம்பிய நாட்டுப் பெண்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில், பிப்ரவரி 21-ம் தேதி நாடு முழுதும் பச்சை வண்ணக் கைக்குட்டைகளை அசைத்து பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
பல நாடுகளில், தவிர்க்க இயலாத சில காரணங்களுக்காக நிபந்தனைகளுடன் கூடிய கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் கத்தோலிக்க மதம் கருக்கலைப்பைக் குற்றமாகக் கருதுவதால், தண்டனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. அதனால், அங்கே பல ஆண்டுகளாகப் பெண்கள் கருக்கலைப்புக்கான உரிமையைக் கேட்டுப் போராடி வருகிறார்கள்.
தாயின் உயிருக்கு ஆபத்து, கருவில் குறைபாடு, பாலியல் பலாத்காரம் மூலம் உருவான கரு ஆகிய மூன்று காரணங்களுக்காக மட்டுமே கொலம்பியாவில் கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று காரணங்களைத் தவிர்த்து, கருக்கலைப்பு செய்பவர்களுக்கு 16 மாதங்கள் முதல் 54 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள், இப்படியான கருக்கலைப்புக்காகச் சிறைத்தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இவ்வளவு கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் இருந்தாலும் கொலம்பியாவில் கருக்கலைப்பு செய்வது குறையவில்லை. அந்த நாட்டில் ஆண்டுக்கு 4 லட்சம் கருக்கலைப்புகள் நடக்கின்றன. இவற்றில் 10 சதவீதம் மட்டுமே சட்டபூர்வமான கருக்கலைப்புகள். மீதி 90 சதவீதம் வெளியில் தெரியாமல், போதுமான மருத்துவ உதவிகள் இல்லாமல் செய்யப்படுகின்றன. இது, பல நேரங்களில் பெண்களின் உயிருக்கே ஆபத்தாகவும் முடிந்துவிடுகிறது. அதனால்தான் கருக்கலைப்பு தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கொலம்பியப் பெண்கள் போராடி வருகின்றனர்.
புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் கொலம்பியப் பெண்ணான அலெஜான்ட்ரா, “கீமோ தெரபி எடுத்துக்கொள்வதால் எனது கர்ப்பத்தைக் கலைக்க முடிவு செய்தேன். ஆனால், அதற்காகப் புற்றுநோய் மருத்துவர், மனநல மருத்துவர், மருத்துவ நிபுணர் என்று பலரையும் சந்தித்து என் நிலையை விளக்க வேண்டியிருந்தது. இதற்கு மூன்று வாரங்கள் தேவைப்பட்டன. நான் என் உடல்நிலை குறித்துக் கவலைப்படுவதா, கருக்கலைப்பை நினைத்து கவலைப்படுவதா என்று குழப்பமான மனநிலையில் இருந்தேன். அதற்காகத்தான் கருக்கலைப்பு தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்கிறோம்” என்கிறார்.
’ஒரு கருவைச் சுமப்பதா, கலைப்பதா என்பது பெண்ணின் விருப்பம் சார்ந்தது. சட்டத்தைக் கொண்டு தடை செய்வது மனித உரிமை மீறல்’ என்பதை வலியுறுத்தி, கொலம்பியா தேசத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வந்ததன் காரணமாக, 2006-ம் ஆண்டு கொலம்பியாவில் மேலே குறிப்பிட்ட மூன்று காரணங்களுக்காகக் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுவதாகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த அனுமதியே பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. எனினும், பெண்கள் முழுத் தடையையும் நீக்க வேண்டும் என்று போராடினார்கள்.
மெக்சிகோவில், கருக்கலைப்புக்கு அபராதமோ தண்டனையோ விதிப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, அர்ஜெண்டினாவில் 14 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது, பெரும்பாலான நாடுகள் கருக்கலைப்பை அனுமதிக்கின்றன. கருக்கலைப்புக்கு முற்றிலும் தடைவிதித்துள்ள ஒரே ஐரோப்பிய நாடு மால்டா மட்டுமே.
தற்போது, 24 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் சட்டம் கொலம்பியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட காலத்தில் கருக்கலைப்புச் செய்ய வேண்டுமென்றால், பழைய கட்டுப்பாடுகளே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“கருக்கலைப்புக்கான முழுமையான தடையை நீக்க வேண்டும் என்றுதான் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் 24 வாரங்கள் வரைதான் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இது எங்களுக்கான முதல்கட்ட வெற்றி என்பதால் எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வாக்குரிமை போராட்டத்துக்குப் பிறகு, பெண்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரலாற்று வெற்றி இது. முற்றிலும் தடை நீக்கம் வரும்வரை போராடிக் கொண்டுதான் இருப்போம்” என்கிறார்கள் கொலம்பியப் பெண் உரிமைப் போராட்டக்காரர்கள்.
இந்தியாவில், மருத்துவக் காரணங்களுக்கான கருக்கலைப்புச் சட்டம் 1971-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தச் சட்டத்தில் பாதுகாப்பாகவும் சட்டபூர்வமாகவும் கருக்கலைப்புச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தப்பட்டன. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள், பாலுறவில் பாதிக்கப்பட்டவர்கள், கருத்தடைச் சாதனங்களின் தோல்வி உட்பட இன்னும் பல காரணங்களுக்காகக் கருக்கலைப்பு செய்வதற்கான காலம் 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது. 24 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் குற்றமாகவே கருதப்படுகிறது.