‘தாமரை உள்ளே வந்துடுச்சு...’ தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தாறுமாறு!

By சானா

பகல் காட்சியாக ‘வலிமை’ பார்க்கச் சென்றிருந்தனர் பாச்சாவும் பறக்கும் பைக்கும். முடிந்ததும், படத்தின் வில்லனாம் ‘சாத்தானை’விட பல மடங்கு வேகத்தில் பாச்சாவைச் சுமந்தபடி சர்ரென பறந்துகொண்டிருந்தது பைக். “இப்படி ‘தல’தெறிக்கிற மாதிரி பறந்துபோறியே... இதுல ஏதாச்சும் குறியீடு இருக்கா?” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்டான் பாச்சா. “அட அவரே ‘தல’ பட்டத்தைத் துறந்துட்டார். நான் படத்துல பைக்கர்கள் தந்த உத்வேகத்துல பரவசமாப் பறக்குறேனப்பா... கொஞ்சம் தண்ணி கிடைச்சாலும் தாமரையா மலருறதுதானே தமிழ்நாட்டுல ட்ரெண்டு!” என்றது பைக்.

அகக்குறிப்பாக, சிம்பிளாகச் சொன்னால்... சிம்பாலிக்காக அண்ணாமலையைத்தான் பைக் சொல்கிறது என்பதை உணர்ந்து கமலாலயத்தை நோக்கிப் பயணித்தான் பாச்சா.

“அமெரிக்க அதிபர்கிட்ட இருந்து வாழ்த்து வந்திருக்கு”, “ரஷ் ஹவர்ல கூட ரஷ்ய அதிபர் ரகசியமா வாழ்த்து அனுப்பியிருக்கார்” என்று தாறுமாறு சந்தோஷத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள். அவர்களுக்கு மத்தியில் தாமரை இலை மீது தண்ணீர் படாத மாதிரி தன்னடக்கத்துடன் அமர்ந்திருந்தார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அண்ணாமலை (தகவல் பிழையெல்லாம் இல்லை. அவர் அப்படித்தானே காட்டிக்கொள்கிறார்!)

“என்ன சார், மூணாவது பெரிய கட்சி யார்ங்கிற போட்டியில சீமான் கட்சியைச் சிதறவிட்டுட்டீங்க போல... வாழ்த்துகள்!” என்றபடி வம்பைத் தொடங்கினான் பாச்சா.

புஷ்டியை முறுக்காமல் புருவத்தை மட்டும் நெறித்துக்கொண்ட முன்னாள் ஐபிஎஸ், “புரியுதுங்கண்ணா. தம்பிகள் கட்சிகூட தாமரை கட்சியைக் கம்பேர் பண்ணி கலாய்க்கிறீங்க. ஆனா, நாங்க அகில இந்திய ஆளுங்கட்சிங்கிறதை மறந்துடாதீங்கண்ணா. பாரதிய ஜனதா கட்சியைத் தமிலக(!) மக்கள் மூன்றாவது பெரிய கட்சியா ஏத்துக்கிட்டாங்க. இனி அவங்க பாடு எங்க பாடு. உங்களுக்கு என்னங்கண்ணா?” என்று ஆக்ரோஷத்தையும் அடக்கத்துடனேயே வெளிப்படுத்தினார்.

“ஆனாலும் சீமான் பத்திப் பேசுனா சீற்றமடைஞ்சுடறீங்களே? ரெண்டு கட்சிக்கும் டஃப் ஃபைட்டு போல” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் பாச்சா. அவனைவிட அதிகமாகச் சிரித்த அண்ணாமலை, “அவர் பேசுறதையெல்லாம் கேட்டு மீம்ஸே இல்லாம மீண்டும் மீண்டும் சிரிக்கிற ஆளுங்கண்ணா நாங்கள்லாம். எங்க கட்சியைப் பார்த்து யாராச்சும் சிரிக்கிறாங்களா சொல்லுங்க. சும்மா சொல்லுங்க” என்றார்.

தேர்தல் ஆணையம் ‘தெளிவு’படுத்திய மேட்டரைத் தெரிந்தே தவிர்த்துவிட்டு, “ஆனா, தம்பிகளும், சங்...கப் பரிவார ஆட்களும் திமுகவை வச்சு சமூகவலைதளத்துல சரிசமமா சட்டையர் (Satire) பண்றாங்க. பரஸ்பரம் பாராட்டிக்கிறாங்க... நீங்க இப்படிச் சொல்றீங்களே?” என்று அடுத்த வெடியைக் கொளுத்திப் போட்டான் பாச்சா.

அப்போது சிரிப்பைத் தொலைத்து சீரியஸாகவே சீரியஸானார் அண்ணாமலை. “அதெல்லாம் விடுங்கண்ணா. தாமரை உள்ள வந்துடும் உள்ள வந்துடும்னு மூணுகண்ணனைக் காட்டிக் குலந்தைங்களை(!) பயமுறுத்துற மாதிரி தமிலக (!) மக்களை அச்சுறுத்திட்டு இருந்தாங்க. நாங்க இப்ப தில்லா, கெத்தா, ஸ்டைலா நெஜமாவே வந்துட்டோம். இனி இந்தத் தீய திராவிட கும்பல் என்ன பண்ணுவாங்க?” என்று தன்னைத்தானே ட்ரோல் செய்துகொள்வது தெரியாமல் பேசும் தங்கமான மனிதராகப் பேசினார் தமிழக பாஜக தலைவர்.

அருகில் இருந்தபடி அதிருப்தி முகம் காட்டிய பைக், “இப்படி இவரே கன்னாபின்னானு கலாய்ச்சுக்கிட்டா, நாம எப்படி நம்ம ‘வேலையை’ப் பண்றது?” என்று பாச்சாவின் காதை ரத்தம் வரக் கடித்தது. அதைச் சற்றே ‘ஆஃப்’ செய்துவிட்டு அடுத்த கேள்விக்குத் தாவிய பாச்சா, “அதெல்லாம் சரி, கொஞ்சமே கொஞ்ச இடங்கள்ல ஜெயிச்சிட்டு கோட்டையையே பிடிச்ச மாதிரி கொண்டாடுறது கொஞ்சம் அதிகமா இருக்குன்னு அதிமுககாரங்களே வருத்தப்படுறாங்களாம்... தெரியுமா சார்?” என்று கேட்டான்.

“அடடா! அவங்களைவிட ஒரு விசுவாசமான... அடிமட்டத் தொண்டனை மதிக்கிற கட்சி இல்லீங்கண்ணா. கேட்ட சீட்டைக் கொடுக்க முடியாதுன்னு அவங்க கேட் போட்டதாலதான், நாங்க தனியா நின்னு ஓட்டு கேட்டு தமிலகத்தையே திரும்பிப்பார்க்க வச்சிருக்கோம். அதுக்காகவே அவங்களுக்கு ஆயிரம் நமஸ்காரம்” என்றார்.

“ஆமாமா... ஜெயிலுக்குப்போன ஜெயக்குமாருக்கு ஆதரவா நீங்க ஜெனியூனா கேள்வி கேட்கும்போதே தெரியும் சார்” என்ற பாச்சா, “காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணின்னு கலாய்ச்சிருக்கீங்களே... திமுக கூட்டணிலயே அவங்க தொடர்ந்து இருக்கிறதால கூட்டுண்ணின்னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்தானுங்களே?” என்றான்.

“அது சரிதானுங்களே! அவங்க சகலத்துலயும் சமரசம் பண்ணிக்கிட்டு திமுகவுக்கு சாமரம் வீசுறாங்க. நாங்க தனியா நின்னுதானே தன்னம்பிக்கையைக் காட்டியிருக்கோம்” என்றார் அண்ணாமலை.

“அப்ப இவ்வளவு நாள் அதிமுக கூட கூட்டணியில இருந்தது அரசியல் பயிற்சிக்காகன்னு எடுத்துக்கலாம்ங்களா?” என்று பாச்சா பதவிசாகக் கேட்க, பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமை காத்திருந்த பாஜகவினர், பாச்சாவை நோக்கிப் பாய, அங்கிருந்து அகல வேண்டியது அவசியமானது!

அடுத்து கமல்ஹாசன்.

‘விக்ரம்’ படத்துக்கான படப்பிடிப்பில் படபடப்புடன் காணப்பட்டார் பஞ்சதந்திரன்!

“என்ன சார், பிக் பாஸ்ல இருந்து தற்சமயத்துக்கு வெளில வந்திருக்கீங்க... இனி அரசியல்ல ஆழமா இறங்குவீங்கன்னு பார்த்தா, ஷூட்டிங்ல அகில இந்திய ஆர்ட்டிஸ்ட்களைக் காக்க வைக்கக்கூடாதுன்னு கழண்டுக்கிட்டதா காரணம் சொல்லியிருக்கீங்களே? அப்படீன்னா உங்களை நம்பி அரசியலுக்கு வந்தவங்களுக்கு அடுத்த படத்துல நடிக்க சான்ஸ் கொடுப்பீங்களா?” என்று கேப்பே இல்லாமல் கேட்டுக்கொண்டே போனான் பாச்சா!

“தரணியெங்கும் புகழ்பரப்பும் தன்னிகரற்ற தமிழகத்தின் அவல(!) நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கமலஹாசன் கட்சியைத் தொடங்கினான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அழுக்கே இல்லாமல் அரசியல் நடத்த பழுத்த அறிவு கொண்ட பண்பாளர்களுடன் நான்...” என்று கமல் பேசும்போது, கூட இருந்த பைக் குனிந்துகொண்டு கொட்டாவி விடுவதை கவனித்த பாச்சா, “டக்னு சொல்லுங்க சார். ஏன் தோத்தீங்க, இந்த தடவையும்?” என்றான் பட்டென.

“இந்தத் தேர்தல் முடிவை நான் ஏற்கவில்லை என்பதை ஏற்கெனவே எடுத்து இயம்பியிருக்கிறேன். எனவே, ஐ மீன்... எனி வே இந்தத் தேர்தல் தோல்வி எங்களை ஒன்றும் செய்யாது. இங்கு ஆபாச அரசியல் நடக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்...” என்று அவர் சொல்லும்போதே, ‘நேத்து ராத்திரி யம்மா’ பாடலின் ரிங்டோன் பாச்சாவின் செல்போனிலிருந்து நேரம்காலம் தெரியாமல் அடித்தது.

அந்த நேரத்தில், வில்லனின் அடியாட்களை விரட்டியடித்துத் துவைக்கும் காட்சி வர, பாச்சாவுக்குக் கொடுக்க வேண்டிய ‘பஞ்ச்’களை ஃபைட்டர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார் பாபநாச நாயகன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE