ஏக்கருக்கு ரூ.10,000 முழு மானியமாக வழங்க வேண்டும்!

By கரு.முத்து

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் விவசாயத்துக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மீன்வளத் துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, விவசாயத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்ற சில மாநிலங்களில் வழங்குவதுபோல விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10,000 ரூபாய் முழு மானியமாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

அவர் மேலும் பல கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் அமைச்சரிடம் முன்வைத்திருக்கிறார். அவற்றில் சில:

காவிரி டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள பாசன வடிகால் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். மார்ச் மாதமே தூர்வாரும் பணிகளையும், பராமரிப்பு தலைப்பின்கீழ் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு கட்டுமானங்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதையும் கட்டாயமாக்கிட வேண்டும்.

ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களை பின்பற்றி வேளாண்மைய ஊக்கப்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10,000 முழு மானியத்தில் ஊக்க நிதியாக அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் நிலவுடமை பதிவேடுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதோடு, நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் தற்போதைய நிலையைக் கணக்கில் கொண்டு அளவை உயர்த்தி செயல்படுத்திட வேண்டும்.

சட்டப்பேரவை மேலவை உருவாக்கப்பட்டால், அதில் விவசாயிகளுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும். மேலும் வேளாண் சார்ந்த துறைகளுக்கான ஆலோசணைக் குழுக்களில் அரசியல் தலையீடு இன்றி விவசாயிகளை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும்.

உழவர் சந்தைகள் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்பட வேண்டும். நடப்பாண்டு குடிமராமத்து திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். விவசாயிகள் நீர்நிலைகளில் மண்ணை எடுத்து தன் வயல்வெளிகளில் சமன்படுத்திக் கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

கிராமங்கள் தோறும் உற்பத்திப் பொருள் அதற்கான அளவை கணக்கில் கொண்டு, சேமிப்பதற்கான கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கரும்பு உற்பத்தியை மீண்டும் பெருக்குவதற்கு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி, தொகுப்பு முறையில் வழங்க வேண்டும்.

விவசாய கழிவுப் பொருட்களில் இருந்து, அதை மூலப்பொருளாக கொண்டு காகிதம் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழிற்சாலைகளை உருவாக்கிட வேண்டும். வைக்கோல், கரும்பு சக்கை உள்ளிட்ட பொருட்களை மூலப்பொருளாகக் கொண்டு கிராமங்கள் தோறும் விவசாயிகள் பங்களிப்போடு கூட்டுறவு மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வேளாண் தொழில் பூங்காக்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக விவசாயிகள் பங்களிப்புடன் கூட்டுறவு வாகன இயந்திர வாடகை மையங்களை உருவாக்கிட வேண்டும்.

இயற்கை உர உற்பத்திக்கான அடிப்படை கட்டமைப்புகளையும் தொழில்நுட்பத்தையும் கிராமங்கள் தோறும் உருவாக்கிட வேண்டும். அதற்கான வகையில் கால்நடை, மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தக் கூட்டுப் பண்ணையங்களை உருவாக்கிட வேண்டும்.

நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், கிராமப்புறத்தில் நீர்நிலைகளில் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்த வழிவகுக்க வேண்டும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிற பணிகள் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான வகையில் மாற்றம் செய்து செயல்படுத்திட முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டுக்கென தனி வேளாண் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முன்வர வேண்டும். தென்னையில் நீரா பானம் தயார் செய்ய அனுமதி வழங்கிட வேண்டும். பனைமரத்தில் கிடைக்கக்கூடிய பதநீரைக் கொண்டு கருப்பட்டி பனங்கற்கண்டு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்களையும் தயார் செய்வதற்கான புதிய தொழில் நுட்பத்தை உருவாக்க வேண்டும். பதநீர் விற்பனை மற்றும் பனை உற்பத்தி பெருக்கத்துக்கு கதர் கிராமத் தொழில் வாரியத்தை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.

விவசாயிகளால் வளர்க்கப்படும் தேக்கு, சந்தனம், செம்மரம் போன்ற விலை உயர்ந்த மரங்களை வளர்ப்பவர்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும். அதை அவர்கள் விருப்பத்துக்கு சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 அம்சங்கள் அடங்கிய ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை பி.ஆர்.பாண்டியன் அமைச்சரிடம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE