பெண்களின் அதிகாரத்தில் லாஃபோர்டு!

By சுஜாதா எஸ்

இந்தியாவில், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். முற்போக்கு சிந்தனைகள் நிறைந்ததாகச் சொல்லப்படும் தமிழ்நாட்டில், இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு சாத்தியமாகியுள்ளது. பெண்கள் தொடர்பான விஷயங்களில், கிட்டத்தட்ட இந்தியாவை ஒத்திருக்கும் இங்கிலாந்து. அங்குள்ள லாஃபோர்டு, சுமார் 100 ஆண்டுகளாகப் பெண்களின் தலைமையில் வழிநடத்தப்பட்டு வருகிறது என்றால், ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

முக்கியமான பொறுப்புகளைப் பெண்கள் ஏற்று நடத்தும் இடத்தில், என்னவிதமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று பிபிசி மேற்கொண்ட ஆய்வில், லாஃபோர்டு கிராமம் உலகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது.

லண்டனிலிருந்து 89 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் இயற்கை வளம் மிக்க அழகிய கிராமம், லாஃபோர்டு. இங்குள்ள, பெரிய வீடுகளும் பழங்காலக் கோட்டைகளும் பள்ளிகளும் தேவாலயங்களும் பழமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. இங்கே 4,300 மக்கள் வசிக்கிறார்கள். தலைமை ஆசிரியர், தேவாலய குரு, அஞ்சல் துறை அதிகாரி, வரி வசூலிப்பவர், ஆசிரியர்கள் என இங்கு பல பொறுப்புகளில் பெண்களே பிரதானமாக அமர்ந்திருக்கிறார்கள். நமக்கு இது ஆச்சரியமாக இருந்தாலும், லாஃபோர்டு மக்களுக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்கள் 1925-ம் ஆண்டிலிருந்தே முக்கியமான பொறுப்புகளைப் பெண்கள் திறம்படச் செய்துவருவதைப் பார்த்து வருகிறார்கள்.

ஒரே நேரத்தில், இரண்டு பொறுப்புகளைத் திறமையாகக் கையாண்டு வருபவர் சாலி மோரீஸ். இவர், லாஃபோர்டு கிராமத்தின் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் செயின்ட் மேரீஸ் தேவாலயத்தின் குருவாகவும் இருக்கிறார். “நான் 11 ஆண்டுகளாக தேவாலய குருவாகச் செயல்பட்டு வருகிறேன். ஆரம்பத்திலிருந்தே தேவாலயத்தில் பெரும்பாலான வேலைகளைப் பெண்களே செய்துவந்தார்கள். அதனால் அங்கு குருவாகச் செயல்படுவதில், எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால், பிற பொறுப்புகளைப் பெண்கள் செய்வதை இயல்பாக எடுத்துக்கொண்ட இந்த மக்கள், குருவாக ஒரு பெண் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொள்வதிலிருக்கும் மனத்தடையை உணர்கிறேன். ஆனாலும் நான் செய்யும் பல பணிகளை மக்கள் பாராட்டியிருக்கிறார்கள். காலத்துக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்கும்போது, அவர்கள் தங்கள் கருத்துகளை மென்மையாகவே வெளிப்படுத்துகிறார்கள். பெண்கள் குறித்து மக்கள் இவ்வளவு தூரம் மாறியிருப்பதே பெரிய விஷயம். பல நூற்றாண்டுகளாக ஊறிக்கிடக்கும் நம்பிக்கைகளை முற்றிலும் மாற்றுவது என்பது எளிதானதல்ல” என்கிறார் சாலி மோரீஸ்.

ஆணும் பெண்ணும் சமம் என்ற சிந்தனை தன்னுடைய குடும்பம் மூலம் தனக்கு வந்திருக்கலாம் என்கிறார் இவர். பாட்டிகள் உட்பட பல பெண்கள் இவர் குடும்பத்தில் படித்தவர்களாகவும் திறமை மிக்கவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில், பெரும்பாலானவர்கள் வருமானத்துக்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது சாலியின் பாட்டி வேலை செய்து பணம் ஈட்டி, ஒரு வீட்டை வாங்கினார் என்பதிலிருந்து தன் முன்னோரின் திறமையை அறிந்துகொண்டதாகச் சொல்கிறார் சாலி.

“நீங்கள் ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்று நினைத்தால், செய்து முடித்துவிடுங்கள். பாலினம் தடையாக இருக்குமோ என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். நாங்கள் யோசிப்பதில்லை. லாஃபோர்டு முழுவதும் பெண்களே பிரதானமாக பல முக்கிய பொறுப்புகளை வகித்து செயலாற்றி வருவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இங்கே ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம்” என்று சிரிக்கிறார் சாலி மோரீஸ்.

கூக்லியாமி

அஞ்சல் துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்று, தற்போது லாஃபோர்டு கவுன்சிலின் தலைவராக இருக்கும் கூக்லியாமி, “பெண்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இங்குள்ள ஆண்களுக்கு இருக்கிறது. அதனால் லாஃபோர்டுக்கு அருகே ரயில் நிலையமும் இருப்பதால், பெண்களைப் பற்றிய கவலைகள் ஏதும் இல்லாமல் ஆண்கள் வேலைக்காக வெளியேறிச் சென்றுவிடுகிறார்கள். ஆண்கள் வெளியேறிவிடுவதால், இருக்கும் வேலைகளைப் பெண்கள் சுதந்திரமாகச் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதாக நினைக்கிறேன். எனக்கு ஆறு பேத்திகள். அவர்கள் வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பிஎக்ஸ் பிளாஸ்டிக்ஸில் வேதியியல் ஆராய்ச்சியாளரக மார்கரெட் ராபர்ட்ஸைச் சந்தித்தேன். அவர், பிறகு இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சராக அறியப்பட்டார்” என்று பெருமிதத்தோடு சொல்கிறார்.

மேகி வூட்ஸ்

லாஃபோர்டு கவுன்சிலின் துணைத்தலைவரான மேகி வூட்ஸ், “நான் சக்திமிக்க பெண்களால் வளர்க்கப்பட்டேன். என் அத்தை அந்தக் காலத்திலேயே அஞ்சல் துறை அதிகாரியாக இருந்தார். என் பாட்டி தொழில் செய்துவந்தார். இன்னொரு அத்தை தேவாலயத்தை நடத்திவந்தார். அதனால் எனக்கு இயல்பாகவே பொறுப்பேற்றுக்கொள்வதில் ஆர்வம் வந்துவிட்டது” என்கிறார்.

லாஃபோர்டில் ஒன்றுக்கு இரண்டு ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் பணியாற்றும் பத்து ஆசிரியர்களில் ஒன்பது பேர் பெண்களாக இருக்கிறார்கள்.

லாஃபோர்டில் வேலை செய்யும் பெண்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம் இருப்பதால், அவர்களால் இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் தைரியமாகச் சென்று வேலை செய்ய முடிகிறது. அதேநேரம், பெண்களே பெரும்பாலான பொறுப்புகளைச் செய்வதால், லாஃபோர்டு ஆண்களின் மனநிலையில் எதிர்மறையான எண்ணம் எதுவும் உருவாகாமல் இருப்பதும் பெண்கள் இங்கே கோலோச்சுவதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

உண்மைதானே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE