‘இனத்தையே ஒப்படைச்சவங்க இட்லி போட்டிருக்க மாட்டாங்களா?’

By சானா

“ஏம்ப்பா... இந்த மனுசங்க ஓட்டு போடுற மாதிரி நாங்களும் ஓட்டு போடுறதுக்கு ஏற்பாடு செஞ்சா நல்லா இருக்கும்ல...” என்று பாச்சாவின் ஆள்காட்டி விரல் கறையை ஆசையாகப் பார்த்தபடி கேட்டது பறக்கும் பைக். “போற போக்கைப் பார்த்தா, பைக், கார், ட்ரோனுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுத்தாதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் போல. வாட்ஸ்அப்ல வரலாறு படிச்சு வாய்கிழியப் பேசுறவங்கள்ல பாதி பேரு, வாக்குச்சாவடி பக்கமே வர மாட்டுறாங்கடா மெட்டல் மண்டையா!” என்று சலித்துக்கொண்டான் பாச்சா.

“மேயரையெல்லாம் மறைமுகத் தேர்தல்ல தேர்ந்தெடுக்குறதால மக்களுக்கு ஓட்டுப்போட மனசு வரலை போல” என்று பறக்கும் பைக், பளிச்சென சொல்ல, “இப்படியெல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சிட்டியா?” என்று அகலக் கண் திறந்து ஆச்சரியப்பட்டான் பாச்சா. “ஹி...ஹி. வழக்கம்போல டைம் பாஸுக்காக சீமான் பேட்டி பார்த்தேன். இது சீமான் சிந்தனைதான்” என்று சிரித்தது பைக்.

ஆக, சீமானிலிருந்தே தொடங்கியது அன்றைய பேட்டியும்.

“சே குவேரான்னு ஒரு ஆளு சிறப்பா ஏதோ சொன்னார்னு சொன்னியே... அதென்னப்பா அது?” என்று சீனியர் தம்பி ஒருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் சீமான். அந்தத் தம்பி, வாட்ஸ்அப்பிலிருந்து ஒரு வாசகத்தை வையகத்துக்கே கேட்கும்படி வாசிக்க, அதை அப்படியே உள்வாங்கி சிறப்பு சத்தம் சேர்த்து செவ்வாய் கிரகத்துக்கே கேட்கும்படி சீற்றமாகப் பேசிப் பார்த்துக்கொண்டார் சீமான்.

“என்ன சார் ப்ரஸ் மீட்டைப் பொதுக்கூட்டம் மாதிரியும், பொதுக்கூட்டத்தை ஸ்டாண்ட்-அப் காமெடி மாதிரியும் நடத்துறீங்கன்னு சமூக வலைதளங்கள்ல சரமாரியா விமர்சனங்கள் வருதே?” என்று கேட்டபடி அவர் முன் ஆஜரானான் பாச்சா.

ஏகே 47 சுட பயிற்சி எடுக்கும் நேரத்தில் இடையூறு செய்ய எதிரி வந்துவிட்டதுபோல எரிச்சலடைந்த சீமான், “அதெல்லாம், செந்தமிழ்ல இந்த செந்தமிழன் பேசுறது மாதிரி ஏத்த இறக்கமா பேசத் தெரியாதவங்க சொல்ற பேத்தல்கள் தம்பி. நான் பேசுறதைக் கேட்டு மோடியே தாடிவச்ச சர்தார்கிட்ட என்னைப் பத்தி சொல்லி, அவர் தேடிவந்து பார்த்துட்டுப் போனார் தெரியுமா?” என்றார் ஏக டெசிபலில்.

“அதுதான் தெரிஞ்ச கதையாச்சே... அவரும் பாதி சர்தார் மாதிரி பஞ்சாப் சிங்குகளுக்கு விருந்து வச்சு உங்களை மாதிரியே கதைகதையா பேசுனார்னு நியூஸ் வந்துச்சு. அதுல மீதி சர்தார் டெல்லில இருந்து கிளம்பிவந்து உங்க கிட்ட டீலிங் பேசுனாலும் பேசுவாங்க...” என்று பாச்சா பகடியாகச் சொன்னதைப் பாசத்துடன் ஏற்றுகொண்டு, பக்கத்தில் இருந்த தம்பிகளிடம் கண் ஜாடை காட்டி கலகலப்பானார் சீமான்.

அடுத்து, “ஆமைக்கறியில ஆரம்பிச்சு மான்கறியில வந்து நிக்கிறீங்கன்னு அடுத்தடுத்து ஆயுதங்களை வீசுறாங்களே, ஏன் இப்படி கறி இட்லி, கரடிப் புட்டுன்னு ஃபுடி யூடியூபர்கள் மாதிரி அசைவ ஐட்டமாவே எடுத்து விடுறீங்க?” என்று கேட்ட பாச்சாவைப் பார்த்து, புஹா புஹாவெனப் புன்னகைத்த சீமான், “ஏன் வேணும்னா பால் பனியாரம், பச்சரிசி கொழுக்கட்டைனு பேசட்டுமா? சும்மா ஏதாச்சும் பேசிட்டு இருக்கக் கூடாது” என்று மூக்கை நிமிண்டிக்கொண்டு மூளையைக் கசக்கினார். சிந்தனையைக் கலைத்து சிலிர்த்த உடல்மொழியுடன், “இனத்தையே வழிநடத்துற தகுதி எனக்குத்தான்னு இறுதிமூச்சு விடும்போது என் தலைவர்கள் சொன்னதுக்கு, என்கிட்ட ஆதாரம் இருக்கு. இனத்தையே என்கிட்ட கொடுத்தவங்க இட்லி கொடுத்திருக்க மாட்டாங்களா? இதையெல்லாம் சிந்திக்கணும் நீங்க” என்று சீமான் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த தம்பிகள் சிந்தனைவயப்பட்டனர்.

“தமிழன் மட்டும்தான் ஆங்கிலத்துல கையெழுத்து போடுறான்னு ஆதங்கத்தோட சொல்லிட்டு, கம்பேரிஸனுக்கு கப்னு ஜெர்மனி, பிரான்ஸுன்னு தாவிடுறீங்களே... விட்டா தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவுல வேற ஸ்டேட்டே இல்லைன்னு ஸ்டேட்மென்ட் விடுவீங்க போல?” என்று பாச்சா அடுத்த கேள்வி கேட்டதும், சிந்தனையைக் கலைத்து சீறத் தொடங்கினர் சீமானின் தம்பிகள்.

அடுத்து அண்ணாமலை.

‘வெள்ளிக் கொலுசு மணி... வேலான கண்ணுமணி’ எனும் பாடலைக் கேட்டபடி, வெற்றிக் களிப்பில் இருந்தார் வேல் புகழ் கட்சித் தலைவராம் அண்ணாமலை.

“தமிழ்நாட்டுல தனியா களம் கண்டுட்டீங்க... இதை எப்படி ஃபீல் பண்றீங்க?” என்று ரியாலிட்டி ஷோவில் கேட்பது போல, அசமந்தமாகச் சிரித்தபடி மைக் நீட்டி அண்ணாமலையிடம் கேட்டான் பாச்சா.

“கோயம்பத்தூர்ல பாத்தீங்களாண்ணா... முன்ன மாதிரி வளர்ச்சி இல்லீங்க. அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க. மோடி ஜி இந்தியப் பொருளாதாரத்தை எங்கேயோ கொண்டுபோய்ட்டாருங்க. ஆனா, பாருங்க... தமிலக(!)த்துல ஒரு பகுதி இன்னமும் தன்னிறைவு அடையாம இருக்குதுங்க” என்று தம் கட்டினார் அண்ணாமலை. அவர் பேசப்பேச, மைக் மக்கர் செய்தது. “இப்படித்தாங்க எங்க குரல் மக்கள் மத்தியில போய்ச் சேரக் கூடாதுன்னு எதிர்க்கட்சிகள் சதி பண்ணுது” என்று அசராமல் சொன்ன அண்ணாமலையிடம், “தமிழகத்துல திமுகதானே ஆளுங்கட்சி. நீங்க எதிர்க்கட்சின்னு சொல்றீங்களே?” என்று கேட்டான் பாச்சா.

“அகில இந்திய அளவுல சிந்திக்கிறதால நாங்க எப்பவுமே அகண்ட பார்வையோடதாங்க எல்லாத்தையும் பார்க்கிறோம். ஆனாலும், நீங்க சொன்னதுபோல, தமிழ்நாட்டுல நாங்க தாங்க நயம் ஒரிஜினல் எதிர்க்கட்சி” என்று அகலச் சிரித்தார் அண்ணாமலை.

‘எடப்பாடி கேட்டா ஏகக் கடுப்பாயிடுவார்’ என்று நினைத்துக்கொண்ட பாச்சா, “அ.ராசா உங்களை சைபர்னு சொல்றார்... செல்லூர் ராஜூ உங்களை வளர்ற கட்சின்னு வாருறார்... உங்களைப் பத்தி நல்லவிதமா பேச ஆளு இல்லையா தமிழ்நாட்டுல?” என்றான் பாச்சா.

“அஞ்சு மாநில தேர்தல்ல மோடி ஜி பிஸியா இருக்கார். அது முடிஞ்சதும் தமிழ்நாட்டுக்கு... ஸாரி தமிழகத்துக்கு அவரைக் கூப்பிடுறோம். சர்தார் ஜிக்களை அழைச்சு சப்பாத்தி விருந்து வச்ச மாதிரி பச்சைத் தமிழர்களை அழைச்சு பச்சரிசி பொங்கல் செஞ்சு கொடுக்கப்போறோம். அப்புறம் பாருங்க ஜல்லிக்கட்டு வீரரேன்னு எங்க ஜியைத் தமிழ் மக்கள் தலையில தூக்கிவச்சுக் கொண்டாடுவாங்க... தாமரை அப்புறம் தாறுமாறா வளருதா இல்லையான்னு பாருங்கண்ணா” என்று பணிவுடன் சொன்னார் பாஜக தலைவர்.

“திமுக திரைக்கதை வசனக் கட்சின்னு நீங்க சொன்ன நியூஸுக்குக் கீழே மோடி ஜியோட விதவித கெட்டப் பத்தி கழக ஆதரவாளர்கள் கன்னாபின்னான்னு கமென்ட் பண்ணிருக்காங்க கவனிச்சீங்களா?” என்று கேட்ட பாச்சாவைக் கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பிவைத்தார் அண்ணாமலை.

அடுத்து உதயநிதி.

“அடுத்து ‘நெஞ்சுக்கு நீதி’ல நடிச்சிட்டீங்க(!) போல. அதை வாசிச்சிருக்கீங்களா?” என்று பொத்தாம்பொதுவாகக் கேட்டான் பாச்சா.

“என்னங்க கேட்கிறீங்க நீங்க? ஸ்க்ரிப்ட் வாசிக்காம யாராவது ஸ்க்ரீன்ல நடிப்பாங்களா?” என்று கள்ளமில்லாமல் சிரித்தார் உதயநிதி.

“சார், அது உங்க தாத்தா எழுதுன புத்தகம்” என்று பாச்சா சொன்னதும், “பின்னே தாத்தா எழுதாத சினிமா ஸ்கிரிப்ட் இருக்கா என்ன?” என்று உவகையுடன் புன்முறுவல் செய்தார் உதயநிதி.

“சரி விடுங்க... கடனேன்னு சினிமாவுல நடிச்சிட்டு இருந்தீங்க... காமெடி படமா இருந்தாலும் கலைஞர் பேரன்னு நினைச்சு கண்கலங்க மக்கள் பார்த்தாங்க. இப்பல்லாம் பிரச்சாரத்துக்குப் போன இடமெல்லாம் நகைக்கடன் என்னாச்சுன்னு கேட்டு மக்கள் பீதி கிளப்பிட்டாங்க போல” என்று பாச்சா கேட்டதும், உதயநிதி போலீஸ் கெட்டப் அணியத் தொடங்க, பாச்சா பதறியபடி பை பை சொன்னான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE