சிறகை விரி உலகை அறி - 37: உலகின் தொப்புள் மேல் ஒரு நடைபயணம்!

By சூ.ம.ஜெயசீலன்

ஏதென்ஸில் கடைசி நாள். இரவு 10.25 மணிக்கு விமானம் என்பதால் சிக்கனமாக, காலையிலேயே விடுதியின் கணக்கை நேர் செய்தேன். செங்கதிர் சூரியனை முகத்திலும், கனத்த பையை முதுகிலும் தாங்கியபடி புறப்பட்டேன். டெல்பி தூயகத்தைப் பார்ப்பதற்கு முன்பதிவு செய்திருந்த சுற்றுலாக் குழுவுடன் இணைந்தேன்.

பழங்கால கிரேக்க மக்களை ஒருங்கிணைத்த முக்கிய அருள்தளம் டெல்பி. ஏதென்ஸில் இருந்து 180 கிலோமீட்டர் வடமேற்கே, பர்னாசுஸ் மலையின் இரண்டு பெரிய பாறைகளுக்கிடையே அமைந்துள்ளது. அப்பாறைகள், ஃபைட்ரியாட்ஸ் (Phaidriades) அதாவது ஒளிரும் பாறைகள் எனப்படுகின்றன. மைசீனியன் (கி.மு.1600- 1100) குடியேற்றமும், கல்லறையும் ஒருகாலத்தில் இத்தூயகப் பகுதியில் இருந்ததாகத் தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன. கி.மு 1400 வாக்கில், டெல்பியில், கேயா (Gaea) அல்லது அதீனா தேவதைக்குக் கோயில் இருந்திருக்கலாம் என்றும், வெண்கல யுகத்தின் இறுதியில் பாறை விழுந்து அவை அழிந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தற்போது, ஒலிம்பியா மற்றும் ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் போலவே டெல்பியும் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக விளங்குகிறது.

உலகத்தின் தொப்புள்

கிரேக்க புராணத்தின்படி, சேயுஸ் கடவுள் இரண்டு தங்க கழுகுகளை கிழக்கு மற்றும் மேற்கு திசையில் பறக்கவிட்டார். இரண்டு கழுகுகளும் டெல்பியில் வந்து சந்தித்தன. இந்த இடத்தை, ஒம்ஃபலஸ் (Omphalos) எனப்படும் புனிதக் கல் ஒன்றை போட்டு குறித்துவைத்தார் சேயுஸ். ஒம்ஃபலஸ் என்பதற்கு கிரேக்கத்தில், தொப்புள் என்று பொருள். எனவே, டெல்பி, உலகின் மையம் எனவும், இவ்விடம் முழுக்கவே இறைப்பிரசன்னம் சூழ்ந்திருப்பதாகவும் கிரேக்கர்கள் நம்பினார்கள்.

முதன்முதலில், பூமியின் தேவதையான கேயாவுக்கு டெல்பி சொந்தமாக இருந்தது. கேயாவின் குழந்தை பைதன் (Python), அதாவது பாம்பு, தன் தாயின் இடத்தைப் பாதுகாத்ததுடன், அசரீரி சொல்கின்ற பொறுப்பையும் வகித்தது. பாம்பாகிய பைதனை அப்பல்லோ கொன்றார். அதற்கான பல காரணங்களுள் ஒன்று, அப்பல்லோவின் தாய் லேடோ (Leto), கருவுற்றிருந்தபோது பாம்பு அவளை அதிகம் துன்புறுத்தியது! பைதனைக் கொன்ற அப்பல்லோ, தான் அருள்வாக்கு சொல்லும் நிலையை உருவாக்கினார். புனித இடத்தைப் பாதுகாக்க குருக்களைத் தேடினார்.

அவ்வேளையில் கிரீட் (Crete) தீவிலிருந்து அவ்வழியே சென்ற கப்பலைப் பார்த்த அப்பல்லோ, டால்பினாக மாறி கப்பலைச் சிறைப்பிடித்து, அதிலிருந்தவர்களிடம் கோயிலைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அதன்பிறகே, இவ்விடம் டெல்பி என பெயர் பெற்றது. பைதனை, அப்பல்லோ வெற்றி பெற்றதன் நினைவாகவே, டெல்பியில் பித்தியன் விளையாட்டு தொடங்கியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அப்பல்லோ கோயிலில் இருந்த பெண் குரு பித்தியா (Pythia) வழியாக, கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ள, அந்தக் காலத்தில் முழு உலகம் என்று கிரேக்கர்கள் நம்பியிருந்த, உலகம் முழுவதுமிருந்தும் முக்கியமானவர்கள் டெல்பிக்குச் சென்றார்கள். குறிப்பாக, கி.மு 6 முதல் கி.மு 4-ம் நூற்றாண்டுவரை டெல்பியின் அருள்வாக்கு உச்சத்தில் இருந்தது.

மேற்சொன்ன தகவல்களைச் சுற்றுலா வழிகாட்டி சொல்லி முடித்த சிறிது நேரத்தில், நாங்கள் டெல்பியைச் சென்றடைந்தோம். ஒருகாலத்தில் அரசர்களும், அதிகாரமிக்கவர்களும், பொதுமக்களும் அச்சத்துடனும் பக்தியுடன் நடந்து சென்றிருந்த பகுதியில் குதூகலக் கொண்டாட்டத்துடன் நாங்கள் நடந்தோம்.

ஏதென்ஸ் மக்களின் கருவூலம்

புனிதப் பாதை

அப்பல்லோ தூயகத்துக்குப் போகும் புனிதச் சாலை (The Sacred Way) 200 மீட்டர் நீளமுள்ளது. பாதையின் இருபுறங்களிலும், அரசர்கள், மாகாண தலைவர்கள், வரலாற்று ஆளுமைகள், அரச வம்சங்கள் பலரும் வழங்கிய மதிப்புமிக்க காணிக்கைகள் தனித்தனி கருவூலங்களில் இருந்திருக்கின்றன. தற்போது, கட்டிடங்கள் பல அழிந்துவிட்டாலும், ஏறக்குறைய கி.மு.490-ல் ஏதென்ஸ் நகரத்தினரால் கட்டப்பட்ட கருவூலம் (Treasury of the Athenians) சிதைவுகளுடன் நிற்கிறது. மாரத்தான் போரில் வெற்றி பெற்றதற்காக, அப்பல்லோவுக்கு நன்றி கூறும்விதமாக இதைக் கட்டியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கட்டிடத்தில், வடக்கு மற்றும் மேற்கு திசையில், ஹெர்குலஸின் வெற்றியையும், தெற்கு மற்றும் கிழக்குப் பக்கத்தில் தீசியுஸ் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

அப்பல்லோ கோயில்

அப்பல்லோ கோயில்

இப்புனித பூமியில் அப்பல்லோவின் கோயில் கி.மு. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆண்டின் சில நாட்கள் மட்டுமே பெண் குரு, கடவுளின் அருள்வாக்கு அருளினார். அவ்வேளைகளில், அப்பல்லோ கோயிலின் தூயகத்தில் பெண் குரு அமர்ந்திருந்தார். கடவுளின் சிலையும் ஒம்ஃபலஸ் கல்லும் அருகே இருந்தன. திரை பெண் குருவை மறைத்திருந்தது. உள்ளே செல்ல வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அப்பல்லோவின் ஆண் குருக்கள், தங்களிடம் சொல்லப்பட்ட கேள்விகளையும், சந்தேகங்களையும் பெண் குருவிடம் சொன்னார்கள். திரைமறைவிலிருந்த பெண் குரு, தன்னைக் கடந்த ஆன்மிக நிலையில், பெருமூச்செறிந்து கடவுளின் அருள்வாக்கை உருவகமாகச் சொன்னார். அதைக் கேட்டுவந்து, அதற்கான விளக்கத்தை ஆண் குருக்கள் அளித்தார்கள்.

காலப்போக்கில் நிலநடுக்கம், தீ, போர் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கண்ட கோயிலின் அடித்தளம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. அப்பல்லோ கோயிலுக்குப் பின்னே, பல கோணங்களையுடைய கற்கள் அடுக்கப்பட்டுள்ள சுவர் இருக்கிறது (Polygonal Wall). 90 மீட்டர் நீளம், இரண்டு மீட்டர் உயரத்தில் அப்பல்லோ கோயிலின் அடித்தளமாக அச்சுவர் இருந்துள்ளது.

டெல்பி தியேட்டர்

டெல்பி தியேட்டர்

டெல்பி தியேட்டர்

கி.மு.4-ம் நூற்றாண்டில் முதன் முதலில் கற்களால் கட்டப்பட்டது டெல்பி தியேட்டர். கி.மு.160/159-ல் இரண்டாம் யுமேனிஸ் நன்கொடை கொடுத்து இதைப் புனரமைத்துள்ளார். நாங்கள் பார்த்த தியேட்டர், கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரோமையர்களால் சீரமைக்கப்பட்டதாகும். தியேட்டரை கிடைமட்டமாகப் பிரித்து கீழே 27 வரிசை, மேலே 8 வரிசை கற்களால் இருக்கை அமைத்துள்ளார்கள். இரண்டையும் பிரிக்கும் பகுதியை, மக்கள் நடந்து செல்வதற்காகப் பாதையாக வைத்துள்ளார்கள். 4,200-4,500 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். 1927 மே மாதம், டெல்பி விழாவின்போது, நவீன கிரேக்க வரலாற்றில், பாரம்பரிய கிரேக்க துன்பியல் நாடகம் இத்தியேட்டரில் அரங்கேற்றப்பட்டது. பழங்கால கிரேக்க தியேட்டர் நவீன காலத்தில் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறை.

டெல்பி மைதானம்

மைதானம்

மிக உயரமான இடத்தில் அதாவது தியேட்டருக்கு 50 மீட்டர் உயரத்தில் கி.மு.4-ம் நூற்றாண்டில் இரண்டாவது பாதியில் கட்டப்பட்ட மைதானம் இருக்கிறது. நீள வடிவில், 178 மீட்டர் நீளம் உள்ள இம்மைதானத்தின் இருபுறமும் 12 அடுக்கு வரிசையில் மக்கள் அமர்ந்து பார்க்கும் வசதி இருந்திருக்கிறது. கி.பி. 394-ல் பைசாண்டிய பேரரசர் தியோடோசியுஸ் (Theodosius) பிற தெய்வ வழிபாட்டையும், பான்ஹெலனிக் விளையாட்டுகளையும் தடை செய்த பிறகு கண்டுகொள்ளப்படாமல் போனதால் முழுதும் மண் மூடிப்போனது. தற்போது புரனமைக்கப்பட்டுள்ளது.

தோலஸ் கோயில்

தோலஸ் கோயில்

கி.மு. 380-370-ல் கட்டப்பட்ட வட்ட வடிவிலான கோயில், தோலஸ் (Tholos). எதற்காகக் கட்டப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெளியே 20 டோரிக் தூண்களும், உள்ளே 10 கொரிந்தியன் தூண்களும் இருந்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டில் தீ விபத்தில் அழிந்துவிட்ட கோயிலின் தடயங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

வெண்கலத் தேரோட்டி

கி.பி.1896-ம் ஆண்டு அகழாய்வில், பித்தியன் விளையாட்டில் வெற்றிபெற்ற தேரோட்டியின் வெண்கலச் சிலை ஒன்று கிடைத்தது. செவ்வியல் காலத்தைச் (கி.மு.480-460) சேர்ந்த இச்சிலை, கி.மு.373-ல் நிகழ்ந்த மிகப்பெரும் நிலநடுக்கத்தில் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. முழு உருவ வெண்கலச் சிலை ஏதும் அதுவரை கிடைத்திராத நிலையில், இச்சிலை தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது. கையில் சாட்டையுடன், குதிரையின் இரண்டு பின்னங்கால்கள், வால், கடிவாளத்தில் கோத்துள்ள வார், அனைத்தும் சிலைக்கு அருகில் கிடைத்தன. ஆய்வின் முடிவில், ஆட்சியாளர் பொலிசலஸ் (Polyzalos) தன்னுடைய வெற்றியை அல்லது தன் சகோதரர்கள் ஜெலோ மற்றும் ஹியரோவின் (Gelo and Hiero) வெற்றியை நினைவுகூரும் விதமாக, இச்சிலையை அர்ப்பணித்திருக்கலாம் என்கின்றனர்.

சிலைக்கு அருகில், ‘இயற்கைப் பேரிடருக்கு நன்றி’ என எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால், இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் டெல்பி தூயகத்துள் இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ள வெண்கலச் சிலைகள் எதுவுமே கிடைக்கவில்லை. சில அழிந்துவிட்டன; போசிஸ் (Phocis) பகுதியினர் தங்கள் ஆளுகையில் தூயகத்தை வைத்திருந்தபோது, போர் செலவுக்காகச் சிலைகளை விற்றார்கள், உருக்கினார்கள். பேரரசர்கள் நீரோ மற்றும் கான்ஸ்டன்டைன் தி கிரேட் இருவருமே இங்கிருந்து முக்கியமான பொருட்களைக் கொள்ளையடித்து, ரோமைக்கும் கான்ஸ்டான்டிநோபுளுக்கும் கொண்டு சென்றார்கள். இயற்கைப் பேரிடரால் பாதுகாக்கப்பட்ட இச்சிலை, தற்போது, டெல்பி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

(பாதை நீளும்)

தேரோட்டியின் வெண்கலச் சிலை

இரட்டையர்களின் குராஸ் சிற்பங்கள்

டெல்பி தொல்பொருள் அருங்காட்சியகம்

தற்போதைய டெல்பி நகருக்கும், தொல்பொருள் அகழாய்வு நடக்கும் பகுதிக்கும் நடுவே அமைந்துள்ளது டெல்பி தொல்பொருள் அருங்காட்சியகம் (Archaeological Museum of Delphi). பழங்கால கிரேக்கத்தின் தொன்மையான நாணயங்கள், தங்கம், சிற்பங்கள், காணிக்கைகள், இரும்புப் பொருட்கள், மார்பிள் சிற்பங்கள், அலங்கார வளைவுகள் இங்கே உள்ளன. கி.மு.8-ம் நூற்றாண்டு தொடங்கி பண்டைய காலத்தின் பிற்பகுதிவரை காலவரிசைப்படி அமைத்துள்ளார்கள். கி.மு.6-ம் நூற்றாண்டு சிபிங்ஸ், அருகருகே நிற்கும் இரட்டையர்களின் குராஸ் சிற்பங்கள், தேரோட்டியின் வெண்கலச் சிலை உள்ளிட்டவை வருவோருக்கெல்லாம் வரலாறு சொல்லிக்கொண்டிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE