அமராவதி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த புலி - வனத்துறையினர் மீட்டு சிகிச்சை

By எம்.நாகராஜன்

உடுமலை: அமராவதி வனப்பகுதியில் படுகாயத்துடன் சுற்றித் திரிந்த புலியை மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்குப் பின் மீண்டும் பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. இப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசிக்கின்றன. இந்த நிலையில் அமராவதி வனப் பகுதியில் படு காயத்துடன் நடக்க முடியாமல் சுற்றித் திரிந்த 9 வயது ஆண் புலியை வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிகிச்சை அளித்த பின்பு மீண்டும் அந்தப் புலி வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

இது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறையினர், "அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட மஞ்சம்பட்டி வனப் பகுதியில் வேட்டை தடுப்புக் காவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புலி ஒன்று உடலில் காயங்களுடன் நடக்க முடியாமல் இருந்ததை கண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். புலியின் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் சுருக்குக் கயிறு ஒன்று மாட்டி இருந்ததையும் அதனால் புலியின் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு அதனால் அது நடக்க முடியாமல் தவித்து வருவதையும் வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராம சுப்பிரமணியம் மருத்துவ குழுவினருடன் சென்று புலியை கண்காணித்தார். இதைத் தொடர்ந்து இன்று கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். உடனடியாக கூண்டில் அடைக்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது உடலில் சிக்கியிருந்த கயிற்றையும் அகற்றினர். ஒரு நாள் முழுவதும் கூண்டில் வைத்த புலியின் உடல் நிலையை வனத்துறை கண்காணித்தனர். புலி ஆரோக்கியத்துடன் இருந்ததால் மயக்கம் தெளிந்த உடன், புலியை மீண்டும் கூண்டிலிருந்து வெளியேற்றி வனப்பகுதிக்குள் விடுவித்தோம்.

அப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். புலிக்கு நோய் தொற்று ஏதும் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்வதற்காக புலியின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவுகளுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE