தனது குரலால் சாகாவரம் பெற்ற லதா மங்கேஷ்கர்!

By எஸ்.சுமன்

’சாஹித்’ திரைப்படத்துக்கான இசையமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அதன் பாடல்களை கேட்க ஆரம்பித்தார் தயாரிப்பாளர் சஷாதர் முகர்ஜி. ஒரு பாடலுக்கு அவரது முகபாவனை மாறியது. அருகிலிருந்த இசையமைப்பாளர் குலாம் ஹைதரிடம் ’இந்த புதிய பாடகியின் குரல் முற்றிலும் வேறாக இருக்கிறதே. ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?’ என்று கேட்டார் சஷாதர்.

அவர் கேட்டத்திலும் பொருள் இருந்தது. சமகாலத்திய பாடகர்களின் மத்தியிலான பாஞ்சாபிய பாவனையிலான குரலைவிட, அந்தப் பாடலில் ஒலித்த புதிய பாடகியின் குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. அதே வேளை உயிரை உருக்குவதாயும், உள்ளாக ஊடுருவி ஆதுரமாய் வருடுவதாயும் தென்பட்டது. குழம்பிய தயாரிப்பாளரை தேற்றிய இசையமைப்பாளர் குலாம் ஹைதர், ’ஒரு நாள் இந்த பாடகியின் குரலுக்காக, இந்த உலகமே அவரது காலடியில் கிடக்கப்போகிறது பாருங்கள்’ என்றார். உண்மைதான். பின்னாளில் லதா மங்கேஷ்கர் என்ற அந்த பாடகியின் குரலுக்காக ரசிகர்கள் அவரை கடவுளாய் தொழுதனர்.

குலாம் ஹைதர் இசையில் ’மஜ்பூர்’ படத்துக்கான ‘தில் மேரா தோடா’ என்ற அந்தப் பாடல் வெளியானபோது பம்பாய் திரையுலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது. அதுமட்டுமல்ல, அதே வருடத்தில் வெளியான ‘சந்தா ரே ஜா’ பாடல் பட்டிதொட்டியில் எல்லாம் பரவியது. யாரந்த பாடகி என்று எல்லோரும் விசாரிக்க ஆரம்பித்தனர். ’அந்தாஸ்’, ’பர்ஸாத்’ படங்கள் லதா மங்கேஷ்கரின் குரலுக்காகவே பேசப்பட்டன.

ஐம்பதுகளின் திரையிசையை லதா மங்கேஷ்கரின் காந்தர்வக் குரல் ஆழ உழதபோது, குலாம்ஹைதரின் தீர்க்கதரிசனம் பலித்தது. அடுத்து வந்த முக்கால் நூற்றாண்டுகளில் பல்லாயிரம் பாடல்களை பாடிய லதா மங்கேஷ்கரின் குரலுக்காக ரசிகர்கள் தவமிருந்தனர். இன்று அந்த காந்தர்வக் குரல் ரசிகர்களின் காதுகளில் எதிரொலிக்க, குரலுக்கு சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர் விடைபெற்றிருக்கிறார்.

தீனாநத் மங்கேஷ்கர் என்ற நாடக குரலிசைக் கலைஞருக்கு 5 குழந்தைகள். அவர்களில் மூத்தவரான லதா மங்கேஷ்கர் பிறந்தபோது, மத்தியப் பிரதேசம் இந்தோரில் குடும்பம் வசித்தது. தந்தையுடன் சேர்ந்து சிறு வயதிலேயே நாடக மேடைகளில் பாட ஆரம்பித்து விட்டார் லதா. தந்தையின் எதிர்பாரா மரணத்தை அடுத்து, குடும்பத்தின் பாரம் மூத்த வாரிசான லதாவின் பிஞ்சு முதுகில் விழுந்தது.

பூனாவில் வசித்தபடி நாடக மேடைகளுக்கும், திரை நிறுவனங்களுக்குமாக வாய்ப்பு தேடி அலைந்தார். திரைப்படங்களில் லதா மங்கேஷ்கர் அடியெடுத்தது பாடகியாக அல்ல; நடிகையாக! ஒரு சில மராத்தி திரைப்படங்களில் பாடக நடிகையையாக தனது கலை வாழ்வைத் தொடங்கினார் லதா மங்கேஷ்கர்.

அப்போதைய சினிமாவில் வசனங்களைவிட பாடல்களே ஆக்கிரமித்திருந்தன. முணுக்கென்றால் பாட ஆரம்பித்துவிடுவார்கள். எனவே முதன்மை நடிகர்களுக்கு குரல்வளமே பிரதானம்; நடிப்பெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

உலகப் போர்களின் உபயத்தில் ஏராளமான மின்னணு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. போர்கள் முடிந்ததும், நடைமுறை வாழ்க்கை சார்ந்து அவற்றின் உபயோகங்கள் மடைமாற்றம் செய்யப்பட்டன. இந்த வரிசையில் வந்த ’மைக்ரோஃபோன்’ திரையிசைக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

இத்துடன் பல்வேறு தடங்களில் ஒலிகளை பதிவுசெய்யும் நுட்பங்களும் படிப்படியாக அறிமுகமாகின. இவையனைத்தும் திரையிசையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. கதைக்கும், காட்சிக்கும் உவப்பான குரலில் பதிவு செய்யப்பட்ட இசைப்பாடலுக்கு, நடிகர்கள் வாயசைத்தால் போதுமென்ற நிலையும் வந்தது. கூடவே, திரையில் நிழலாடிய நட்சத்திரங்களுக்கு நிகராக, பின்னணியில் பாடும் குரல்களை ரசிகர்கள் கண்டுகொள்ள ஆரம்பித்தனர். இசைக்கும் குரலுக்கும் கட்டுண்ட ரசிகர்களுக்கு லதா மங்கேஷ்கரின் குரல் அமுதூட்டியது.

70 மற்றும் 80களில் லதாவின் குரல் கொடி பாலிவுட்டில் உயரப் பறந்தது. 90களில் திரைப்படங்களுக்கு பின்னணி பாடுவதைவிட அயல் தேசங்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்தார். அந்தளவுக்கு லதா குரலுக்கு ஏங்கியவர்கள் உலகமெங்கும் நிறைந்திருந்தனர்.

அவற்றுக்கு இடையே, அவர் பாடிய ’ஹம் ஆப்கே ஹெய்ன் கௌன்’, ’தில்வாலே துல்ஹனியா லே ஜயங்கே’ போன்ற படங்களின் பாடல்களுக்காக லதா இன்றைய தலைமுறையினரால் அதிகம் கொண்டாடப்படுகிறார். லதா மறைவை அடுத்து, அவரது நினைவைப் போற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல்களே எதிரொலிக்கின்றன.

கின்னஸ், பால்கே, பத்ம விருதுகள் தொடங்கி ஏராளமான கௌரவங்கள் அலங்கரித்தபோது, ’புதியவர்களை, வளர்ந்து வருவோரை விருது கொடுத்து ஊக்குவியுங்கள்’ என விருதுகளை புறக்கணிக்கவும் ஆரம்பித்தார். 90 வயதானபோதும் அவரது குரலுக்கு மட்டும் வயதாகவே இல்லை.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கும் லதா மங்கேஷ்கரின் தமிழ் பாடல்களும் தனித்துவம் வாய்ந்தவை. சத்யா திரைப்படத்தின் ‘வளையோசை கலகலவென’ , ஆனந்த் திரைப்படத்தின் ‘ஆராரோ ஆராரோ’, என் ஜீவன் பாடுது திரைப்படத்தின் ’எங்கிருந்தோ அழைக்கும்’ போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE