வால்டர் காஃப்மன் ஜெர்மனியில் பிறந்த ஓர் இசைக் கலைஞர். இசை நடத்துநர். இசை அறிஞர், கல்வியாளர், சுதந்திரச் சிந்தனையாளர். நாஜிக்களின் பிடியிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தவர். பிரிட்டிஷாரின் ஆளுகையிலிருந்த இந்தியாவில், பம்பாய் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் இயக்குநராக 1937 முதல் 1946 வரை பணியாற்றினார். 1937 முதல், அனைத்திந்திய வானொலி நிலையத்தின் ஆகாஷ்வாணியில் இன்றைக்கும் ஒலிக்கும் ‘சிக்னேச்சர்’ இசைக் கோவையை உருவாக்கிய மேதையும் இவர்தான். அதுதான் இன்றளவும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் திருப்பள்ளி எழுச்சி!
பாம்பே சேம்பர் மியூசிக் சொசைட்டியை மெஹில் மேத்தா (சூபின் மேத்தாவின் தந்தை) உடன் இணைந்து தோற்றுவித்தவரும் வால்டர் காஃப்மன்தான். பல இந்திய இசை மேதைகளின் சாதனைகள் மேற்குலகின் காதுகளை எட்டியதற்கு, வால்டர் காஃப்மன் உருவாக்கிய இந்த அமைப்பு பெரும் பங்களித்ததை வரலாற்றின் பக்கங்களில் உணர முடியும். இந்தித் திரையுலகிலும் தடம் பதித்தவர். ‘ஜாக்ரண்’ (1936), ‘தூஃபானி டார்ஸான்’ (1937), ‘ஏக் தின் கா சுல்தான்’ (1945) போன்ற படங்களின் இசைக்கோவையில் இவரது பங்கும் உண்டு.
பல ஆண்டுகள் ஆகாஷ்வாணியில் பணியாற்றிய வால்டர் காஃப்மன் பின்னர் லண்டன், கனடா எனப் பயணித்து கடைசியில் அமெரிக்காவில் செட்டில் ஆனவர். ப்ளூமிங்டனில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் பேராசிரியராக 1957 முதல் 1984 வரை பணியாற்றினார். 1984 செப்டம்பர் 9-ல் காலமானார்.
இந்தியர் அல்லாத இவரின் இசையை, ஆகாஷ்வாணியில் கேட்டுத்தான் நம் ஒவ்வொருவரின் பொழுதும் புலர்கிறது!
வசீகரிக்கும் முகப்பு இசை கேட்க:
https://www.youtube.com/watch?v=rriIgkeWn0I
ஒன்றியத் தீ; ஒன்றிய இசை!
குடியரசு தின விழா பேரணிகளில் மாநிலம் சார்ந்த அலங்கார ஊர்த்திகளுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவுக்கான முக்கியத்துவம் விழா முடிந்ததும் நம்முடைய ராணுவப் படைகள் அவர்களின் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வுக்கும் இருக்கும். இந்த நிகழ்வு ஜனவரி 29 அன்று நடக்கும். இந்த நிகழ்வை ஒட்டி, முப்படைகளைச் சேர்ந்த வாத்திய இசைக் கலைஞர்கள் சுதந்திரத்தின் மேன்மையை விளக்கும் பாடல்களை இசைப்பர். கடந்த ஆண்டு வரை இப்படி வாசிக்கப்படும் பாடல்களில் இடம்பெற்ற ஒரு பாடல் ‘அபைட் வித் மீ' என்னும் பாடல். ‘என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நீ என்னுடன் இருப்பாய்...’ என்று இறையிடம் மன்றாடும் இந்தப் பாடலை எழுதியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்றி பிரான்சிஸ். கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், இதை கிறிஸ்தவப் பாடல் என்கிறார்கள். ஆனால், மரணத்தை எந்த நொடியிலும் முத்தமிடும் தருணத்தில் இருக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் இந்தப் பாடல், இதுநாள் வரையில் நெகிழ்ச்சியான பாடலாகத்தான் இருந்திருக்கிறது. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான இந்தப் பாடல், இனிமேல் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வில் ஒலிக்காது. கடந்த ஆண்டில் ஒலித்த இந்தப் பாடலின் காணொலி இது.
இந்தப் பாடலுக்குப் பதில், ‘ஹே மேரே வதன் கே லோகோ' எனும் பாடலை இசைக்கவுள்ளனர். இதை எழுதியவர் ராமச்சந்திர நாராயண்ஜி திரிவேதி. இந்திய - சீன போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்காக எழுதப்பட்ட பாடல் இது. லதா மங்கேஷ்கர் பாடிய இப்பாடல் 1963-ம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவில் முதன்முறையாகப் பாடப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான போரில் தன்னுயிரை ஈந்தவர்களின் நினைவாக ஏற்றப்படும் அணையா விளக்கு ஆங்காங்கே எரியக் கூடாது, ஒன்றிய அணையா விளக்காக ஒரே இடத்தில்தான் எரிய வேண்டும் என்றார்கள். அப்படியென்றால் இதுவும் சரிதான், ஒன்றிய தீ; ஒன்றிய இசை!
‘அபைட் வித் மீ’ இசையைக் கேட்க: https://www.youtube.com/watch?v=4A5Igc-ihlI
‘நினைந்தாலே’ இனிக்கும்!
நினைத்தாலே இனிக்கும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘நினைந்தாலே இனிக்கும்’ என்பது சரியா? சரிதான். இறைவன் நம்மைப் பற்றி நம்முடைய துயர்களைப் பற்றி ஒரு நொடி நினைந்தாலும் போதுமே... அந்த ஒரு நொடி கரிசனம் நம்முடைய ஆயுளுக்கும் போதுமே! அதைப் படிப்படியாக உயர்ந்த ரசனையுடன் கூடிய தமிழ் வார்த்தைகளில் பெரியசாமி தூரன் வடித்திருக்கும் பாடல்தான், ‘நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ' எனும் பாடல்.
தமிழுக்கும் அறிவியலுக்கும் பாலமாக இருந்தவர்களில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஆளுமை தூரன். அறிவியல் கலைக் களஞ்சியத்தையும் குழந்தைகள் கலைக் களஞ்சியத்தையும் தூரனின் கொடை என்றே சொல்லலாம். பாரதியாரின் பன்முக அறிவு விசாலத்தை ஆழமாக ஆய்வுசெய்து எழுதியிருக்கும் தூரனின் நூல்கள், பாரதியைப் பற்றிய புதிய தரிசனத்தை நமக்கு அளிக்கக் கூடியவை.
தூரனின் பாடல்களைப் பாடாமல் கர்னாடக இசை நிகழ்ச்சிகளை அந்தத் துறையில் கோலோச்சிய இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட பலரும் முடித்ததில்லை என்பதே, தூரனின் சாகித்ய வளமைக்குப் பெரும் சான்று.
‘முரளிதர கோபாலா’, ‘கலியுக வரதன்’, ‘தாயே திரிபுரசுந்தரி’ பாடல்களின் வரிசையில் போற்றத்தக்க தூரனின் இன்னொரு பாடல், ‘நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ'. இந்தப் பாடலுக்கு பிரபல கிளாரிநெட் கலைஞர் சங்கர் துக்கர் இசை அமைத்து, வித்யா வாக்ஸும் வந்தனாவும் பாடியிருக்கும் இந்தக் காணொலியை ஓர் ஆடியோ விஷுவல் ட்ரீட் என்றே சொல்லலாம்.
ஸ்டிரிங்ஸ், கிளாரிநெட், தபேலா, கஞ்சிரா, டிரம்ஸ் எனப் பல வகையான வாத்தியங்களின் சேர்ந்திசையோடு, பாடகிகளின் குரலிசையும் சேர்ந்து ஜுகல் பந்தி அனுபவத்தைத் தருகிறது இந்தப் பாடல். சரஸ்வதியின் துணையோடு மகாலட்சுமிக்கு ஓர் இசை விண்ணப்பம்!
கேட்டு உருக: https://www.youtube.com/watch?v=ky9SatRoyCY&list=PLaSbrmJ_v-8q048GoexL78CneTlQ3N91x&index=10