பிளாஸ்டிக் உண்ணும் காட்டு யானை: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி @ பந்தலூர்

By ஆர்.டி.சிவசங்கர்

பந்தலூர்: தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி. நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அண்டை மாநில சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாகவே உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர்.

குறிப்பாக, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலிருந்து நெலாக்கோட்டை ஊராட்சி வழியாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

காட்டு யானைகள் ஆங்காங்கே உணவு தேவைக்காக சாலைகள் மற்றும் கிராமப் பகுதிக்குள் அதிக அளவில் நடமாடி வருகின்றன. நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பிதர்காடு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களை ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதில் மெத்தனம் காட்டி வருவதால் சாலையோரங்களில் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.

இந்நிலையில், இரவில் அப்பகுதிக்கு வந்த ஒற்றை யானை அந்த கழிவுகளை இழுத்து போட்டு சாலையில் உண்டது. இந்த காட்சியை அந்த பகுதியாக வந்த வாகன ஓட்டிகள் ஒளிப்பதிவு செய்து அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யானை பிளாஸ்டிக் கழிவு உண்பது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, நெலாக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE