மதுரை: மதுரையில் பெய்து வரும் தொடா் மழையால் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு மருத்துவமனையில் 25 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கடும் வெயிலைத் தொடா்ந்து பெய்யும் கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், சாலை உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் தொற்று பரவும் அச்சமும் மக்களிடம் உள்ளது. இதனிடையே டெங்கு போன்ற காய்ச்சலுக்கென மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொசு வலை உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் இந்த வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
குறிப்பாக வென்டிலேட்டர், மானிட்டர், மூச்சுக் கருவிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் பாதிப்புடன் வரும் குழந்தைகள், நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீா், ஒஆர்எஸ் ஆகியவையும் வழங்க மருத்துவ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக மாவட்டத்தில் நவம்பா், டிசம்பா் மாதங்களில் தான் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரிக்கும். ஆனால், தற்போது கோடை மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், தாழ்வான மற்றும் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர், கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சலை பரப்ப வாய்ப்புள்ளது. இதனால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனாலும், காய்ச்சல் பாதித்து யார் வந்தாலும், உடனடியாக சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என, அரசு மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.
» திமுக பிரமுகர் கொலை வழக்கில் உறவினர் கைது @ திருவிடைமருதூர்
» ‘‘எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்... ’’ - ரேபரேலியில் சோனியா காந்தி உருக்கம்