இந்த விருது அடுத்த ஆட்டத்துக்கான டானிக்!

By ம.சுசித்ரா

கரோனா பெருந்தொற்றுப் பரவல் உலகை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலத்தில், ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோதும் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. 2021 மார்ச் 7 அன்று ஸ்மிருதி மந்தனாவும் அவரது அணியினரும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மீண்டும் கால்பதித்தனர். ஓராண்டு கழித்து வந்தால் என்ன! இறங்கி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார், இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனர் ஸ்மிருதி. 22 சர்வதேசப் போட்டிகளில் 855 ரன்கள் குவித்தார். 38.86 சராசரி ரன் ரேட்டுடன் ஒரு சதம், 5 அரை சதம் அடித்தார்.

இந்நிலையில், அட்டகாசமான ஆட்டத்துக்காக ஸ்மிருதி மந்தனா ஐசிசியின் 2021-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார். அவருக்கு ‘ரேச்சல் ஹேகோ ஃப்ளின்ட்’ கோப்பை வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை ரேச்சல் ஹேகோ ஃப்ளின்ட்டுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஐசிசியால் 2006-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் உயரிய விருது இது.

இதற்கு முன்னதாக, ஐசிசி வழங்கும் இதே கோப்பையுடன் பிசிசிஐ வழங்கும் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை பட்டத்தையும் 2018-ல் ஸ்மிருதி வென்றார். அப்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 66.90 ரன் ரேட்டில் 669 ரன்கள் குவித்திருந்தார். 2020-ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 போட்டியில், 130.67 ரன் ரேட்டுடன் 622 ரன்கள் குவித்து தரவரிசையில் இடம்பெற்றிருந்தார். 2021-ம் ஆண்டின் மகளிர் கிரிக்கெட்டின் சிறந்த கிரிக்கெட்டர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில், இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், தென்னாப்பிரிக்காவின் லிசெல் லீ மற்றும் அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோருடன் ஸ்மிருதியும் இடம்பெற்றிருந்தார்.

ஸ்மிருதி மந்தனா

2-வது இந்தியப் பெண்!

‘ரேச்சல் ஹேகோ ஃப்ளின்ட்’ விருதைப் பெறும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இதற்கு முன்னதாக, இந்திய வீராங்கனை ஜுலான் கோசுவாமிக்கு 2007-ல் ஐசிசியின் சிறந்த ஆட்டக்காரர் விருது கிடைத்தது.

”நெருக்கடி சூழ்ந்த 2021-ல் சிறப்பாக விளையாடியதற்காக தனக்கு ஐசிசி போன்றதொரு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அமைப்பு விருது வழங்கியதில் பெருமகிழ்ச்சி” என ஸ்மிருதி தெரிவித்துள்ளார். “மேற்கொண்டு தனது ஆட்டத்தின் தரத்தை உயர்த்தவும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு மென்மேலும் பங்களிக்கவும் இந்த விருது உத்வேகம் தரும்” என்றும் குறிப்பிட்டார்.

அண்ணனுடன் நெட் பிராக்டீஸ்!

25 வயதான ஸ்மிருதி கடந்து வந்த பாதையைப் பார்வையிடுவது, அவரது சாதனையின் மகத்துவத்தை நமக்கு மேலும் புலப்படுத்தும். 1996 ஜூலை 18 அன்று மும்பையில், மார்வாடி குடும்பத்தில் ஸ்மிருதி மந்தனா பிறந்தார். அங்கிருந்து மகாராஷ்டிரத்தின் சாங்கிலி பகுதிக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாவும் அண்ணன் ஷ்ரவனும் கிரிக்கெட்டில் பேரார்வம் கொண்டவர்கள்.

அண்ணன் ஷ்ரவன் சாங்கிலி மாவட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார். இதைப் பார்த்துப் பார்த்து குழந்தைப் பருவத்திலேயே ஸ்மிருதிக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் துளிர்த்தது. 9 வயதில் மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்கத் தேர்வானார். 11 வயதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விளையாடினார். இப்படி அண்ணனை உற்றுக் கவனித்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த ஸ்மிருதிக்கு, இன்றுவரை நெட் பிராக்டீஸின்போது அண்ணன் ஷ்ரவன் பந்துவீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.

இடது கை ஆட்டக்காரரான ஸ்மிருதி, இயல்பில் வலது பழக்கம் உடையவர்தான். மகாராஷ்டிரத்துக்கும் குஜராத்துக்கும் இடையில் 2013-ல் வடோதராவில் நடந்த மேற்கு மண்டலப் போட்டியில் இரட்டை சதம் அடித்து, முதன்முதலில் தடம் பதித்தார். 2014-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் இறங்கினார். அதன்பின் ஸ்மிருதி உலகை அண்ணாந்து பார்க்க வைத்த 3 அபாரமான ஆட்டங்களின் விவரங்கள் இதோ:

அதிரடி ஆட்டக்காரர் அவதாரத்தில்...

72 பந்துகளில் 90 ரன்கள் - 2017

2017-ல் நடந்த மகளிர் உலகக் கோப்பைப் போட்டியின் முதல்நாள் அது. 20 வயதான ஸ்மிருதி முதல் பந்திலேயே 4 ரன்கள் அடித்து மைதானத்தை அதிரவைத்தார். அடுத்தடுத்து அடித்து ஆடி, 11 நான்குகள், 6 ஆறுகள் என 72 பந்துகளில் 90 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு அதிரடி வெற்றியை உறுதிப்படுத்தினார்.

55 பந்துகளில் 83 ரன்கள்

2018-ல் ஆஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவிய, ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அது. பதற்றமான சூழலையும் தனது இடது கையால் அசாத்தியமாகக் கையாண்டார் ஸ்மிருதி. பந்து சுழன்று வந்தாலும் ஈட்டிபோல பாய்ந்து வந்தாலும் அசராமல் 9 நான்குகள், 3 ஆறுகள் அடித்தார். 50 ரன்கள் குவித்த பிறகும் வேகம் குறையாமல் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். 20 ஓவர்களில் இந்தியா 167 ரன்கள் குவித்தது. அதில் சரி பாதியை அடித்துக் கொடுத்த பெருமை ஸ்மிருதியையே சேரும்.

61 பந்துகளில் 102 ரன்கள்

இங்கிலாந்து மான்செஸ்டர் பெருநகரத்தைச் சேர்ந்த ‘லங்காஷையர் தண்டர்’ மகளிர் அணி என்றால், பலருக்கும் சிம்ம சொப்பனம்தான். அப்படிப்பட்ட அணியுடன், 2018-ல் நடந்த டி20 போட்டியில் ஆடிய ஸ்மிருதி அவர்களை கதிகலங்க வைத்தார். 12 நான்குகள், 4 ஆறுகள் அடித்து அமர்க்களப்படுத்தினார். டி20 போட்டியில் ஸ்மிருதியின் முதல் சதம் இந்த ஆட்டத்தில்தான் அமைந்தது.

இலக்கை நோக்கி...

இதுவரை 62 ஒருநாள் போட்டிகளிலும், 84 டி20 போட்டிகளிலும் ஸ்மிருதி விளையாடியுள்ளார். இதில் ஒருநாள் போட்டிகளில் 2,337 ரன்களும், டி20 போட்டிகளில் 1,971 ரன்களும் சேர்த்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மிருதி 325 ரன்களைச் சேர்த்துள்ளார். இத்தனை சாதனைகளைப் படைத்திருக்கும் ஸ்மிருதி, ஐசிசியின் 2021-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றிருப்பது, நியூசிலாந்தில் இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐசிசி பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்ற தனக்கும் தனது அணியினருக்கும் உற்சாகம் ஊட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

விருதுகள், சாதனையாளர்களை அடுத்தகட்டத்துக்கு ஊக்குவிக்கும் டானிக் என்பதற்கு ஸ்மிருதி சிறந்த உதாரணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE