150 இந்திய கிராமங்களை வளர்த்தெடுக்கும் இஸ்ரேல்!

By ஆர்.என்.சர்மா

இந்தியாவின் 8 மாநிலங்களில் 150 பின்தங்கிய கிராமங்களை மிகச் சிறப்பான, தன்னிறைவு பெற்ற கிராமங்களாக்க இஸ்ரேல் அரசு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. வேளாண் தொழில்நுட்பம், மண்வள மேம்பாடு, நவீன உழவுக் கருவிகள், இயற்கை எரு தயாரிப்பு, புதுப்பிக்கத்தக்க சூரிய ஒளி – காற்றாலை மின்னுற்பத்தி, பால்வளப் பெருக்கம், கால்நடை வளர்ப்பு, மீனளம், தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு, தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றில் இந்தியக் கிராம மக்களுக்கு இலவசமாக நேரடிப் பயிற்சி தந்து வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதுடன் கிராம விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் இஸ்ரேல் உதவி செய்யும்.

உலகிலேயே தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பாலைவனத்தைப் பசுஞ்சோலை வனமாக்கி, வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடு இஸ்ரேல். மழை வளமே இல்லாத இடத்தில் கடல் நீரைச் சுத்திகரித்தும், காற்றிலிருக்கும் நீராவியைத் தண்ணீராக மாற்றியும் இஸ்ரேல் இவற்றைச் சாதித்து வருகிறது. இத்தொழில்நுட்பங்களும் கருவிகளும் இந்தியக் கிராமங்களுக்கு வழங்கப்படும். 2022-ம் ஆண்டில் 75 கிராமங்களும் அடுத்த ஆண்டில் எஞ்சிய 75 கிராமங்களும் இவ்வாறு மேம்படுத்தப்படும்.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு முப்பதாண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதத்தில் இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் நவோர் கிலோனை, தலைநகர் டெல்லியில் கிருஷி பவன் என்ற வேளாண் அமைச்சகத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்ற மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதைத் தெரிவித்தார்.

இப்போதே 12 மாநிலங்களில் 29 மையங்களில் இத்தகைய ஒத்துழைப்பை இஸ்ரேல் வழங்குகிறது. இவற்றில் 250 லட்சம் தாவரங்களும் 3,87,000 பழங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 1,20,000 விவசாயிகளுக்குத் தண்ணீர் வளம், சாகுபடித் தொழில்நுட்பங்களை இஸ்ரேலிய நிபுணர்கள் கற்றுத்தருகின்றனர்.

வேளாண் உற்பத்திப் பொருட்களை, மதிப்புக்கூட்டிய பொருட்களாக அடுத்த கட்டத்தில் தயாரித்து விற்பதற்கு உதவிகள் செய்யப்படும். இந்த நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களும் ஆர்வமுள்ள தனியார்களும் கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். விவசாய கூட்டுறவு திட்டங்களை இந்தியாவுடன் இஸ்ரேல் 2008-லேயே தொடங்கிவிட்டது. நுண்ணிய நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள், பயிர்ச் சாகுபடி முறைகள், கறவை மாடுகள் வளர்ப்பு, பராமரிப்பு இந்தியச் சூழலுக்கேற்ற வகையில் கற்றுத்தரப்படுகின்றன. கிடைக்கும் இடத்தில் அடுக்கடுக்காகப் பயிர் வளர இடம் செய்துகொடுக்கும் செங்குத்தான பயிர்ச் சாகுபடி முறைகள், சொட்டு நீர்ப்பாசனம், சாரமற்ற மண்ணை சூரிய ஒளியில் காயவைத்து வளப்படுத்தும் நுட்பம் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. கிராமங்களில் விளைவதைத் திரட்டி நுகர்வு மையங்களுக்கு அல்லது தொழில் நிறுவனங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்பிவைக்கும் விநியோக வழிமுறைகளும் வலுப்படுத்தப்படும். விவசாயத்தில் நவீன அடித்தளக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி விரிவுபடுத்துவது, உற்பத்தியைப் பெருக்குவது, சந்தைப்படுத்துவது ஆகியவற்றுக்கு இந்த ஒத்துழைப்பு கைகொடுத்து வருகிறது.

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்குமான ஒத்துழைப்பு சீன – இந்தியப் போருக்குப் பிறகு 1962-லேயே தொடங்கிவிட்டது. 1965 போரின்போது பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்த எம்-58 ரக 160-மிமீ பீரங்கி குண்டுகளை இஸ்ரேல்தான் வழங்கியது. 1998-ல் பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது அதைக் கண்டிக்காத சில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.

கடந்த இருபதாண்டுகளாக இந்தியாவுக்கு ராணுவ சாதனங்களை விற்கும் நான்கு பெரிய நாடுகளில் இஸ்ரேல் முதலிடத்தில் இருக்கிறது.

1992-ல் 20 கோடி டாலர் மதிப்பில் தொடங்கிய இருதரப்பு வர்த்தக உறவு, 2018-19-ல் 650 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்குப் பெருகிவிட்டது. இதில் ராணுவத்துக்கான வர்த்தகம் சேர்க்கப்படவில்லை. இந்தியாவிலிருந்து அதிகப் பொருட்களை இறக்குமதிசெய்து இந்தியாவுக்கு 180 கோடி அமெரிக்க டாலர்கள் உபரியை வழங்குகிறது இஸ்ரேல். இந்தியாவிடமிருந்து இஸ்ரேல் வாங்கும் பொருட்களில், வைரத்தின் மதிப்பு மட்டும் 40 சதவீதம். ஆசியாவிலேயே இஸ்ரேலுக்கு அதிக வணிகத் தொடர்புள்ள நாடுகள் வரிசையில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது.

மின்சார உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொலைத்தகவல் தொடர்பு, வீடு-மனை வணிகம், தண்ணீர் பயன்பாட்டுத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இஸ்ரேலிய நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்து வருகின்றன. இந்தியாவிலும் இஸ்ரேலிலும் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் பாடுபடும் நிறுவனங்களுக்கு மானிய உதவி செய்யும் திட்டங்களை இஸ்ரேல்-இந்தியா ஆராய்ச்சி வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு நிதியம் என்ற அமைப்பு 2018 ஜூலையில் தொடங்கியது. இஸ்ரேலியத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் ஆர்வம்காட்ட இந்த நிதியம் ஊக்குவிப்பாக இருக்கிறது.

கடந்த இருபதாண்டுகளாக இந்தியாவுக்கு ராணுவ சாதனங்களை விற்கும் நான்கு பெரிய நாடுகளில் இஸ்ரேல் முதலிடத்தில் இருக்கிறது. ஆண்டுதோறும் 100 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு ஆயுதங்கள், சாதனங்கள், தொழில்நுட்பங்களை இஸ்ரேல் வழங்கி வருகிறது. பால்கன் அவாக்ஸ், ஹெரான் சர்ச்சர்-II, ஹராப் டிரோன்கள், பராக் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை இந்தியாவுக்கு விற்கப்படுகின்றன.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களையும் நிரப்பு மையங்களையும் நிறுவவும், மருத்துவமனைகளில் பொருத்தவும் உதவ இஸ்ரேலிலிருந்து நிபுணர்கள் குழு 2020-ல் வந்தது.

இந்நிலையில், இந்திய கிராமங்கள் தன்னிறைவு பெறவும் வளர்ச்சி பெறவும் இஸ்ரேலியத் தொழில்நுட்பங்கள் நம் மண்ணில் கையாளப்பட்டால் விவசாய வருமானம் இரட்டிப்பாவது சாத்தியமே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE