ஜோகோவிச் சம்பவத்தை வைத்து ஒரு ஜோக்!

By சானா

செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஜனவரி முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா சென்றார். அந்நாட்டுக்குள் நுழைய, தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் எனும் நிபந்தனையிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு விசா மறுக்கப்பட்டது, அவர் நீதிமன்றத்தை நாடியது, அந்த உத்தரவு ரத்துசெய்யப்பட்டது, பின்னர் மீண்டும் அவரது விசா ரத்துசெய்யப்பட்டது எனத் தொடர்ந்த களேபரங்களின் முடிவில், அவர் அந்தப் போட்டியில் பங்கேற்க முடியாமல் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற நேர்ந்தது.

தடுப்பூசிக்கு எதிரான கருத்து கொண்ட ஜோகோவிச்சுக்கு இது தேவைதான் என ஒரு சாராரும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் என்ன, அவர் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார் என்று ஒருசாராரும் பேசிவருகின்றனர். ஜோகோவிச் விவகாரத்தை அடிப்படையாக வைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் பல ஜோக்குகளில் ஒரு ஜோக்கைத் தழுவி எழுதப்பட்ட கற்பனை உரையாடல் இது:

ஹெலன்: “ஹலோ சார்! எப்படி உள்ள வந்தீங்க? நீங்க உள்ள போகக் கூடாது!”

ஜோகோ: “ஏன் மேடம்? என்னாச்சு?”

ஹெலன்: “ஏன்னா நீங்க தடுப்பூசி போட்டுக்கலை.”

ஜோகோ: “ஆனா நான் நல்லாத்தானே இருக்கேன். உடம்புக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே!”

ஹெலன்: “அது விஷயம் இல்லை.”

ஜோகோ: “அதுசரி, இந்தா இப்ப ஒருத்தருக்கு உள்ளே போக பெர்மிஷன் கொடுத்திருக்கீங்களே, அந்தாளுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் சலுகை?”

ஹெலன்: “சலுகையெல்லாம் இல்லைங்க. அவர் தடுப்பூசி போட்டுக்கிட்டவர்.”

ஜோகோ: “ஆனா, ஆளு பார்க்க நோயாளி மாதிரி தெரியிறாரே? அவருக்குத் தொற்று இருக்கும்ல?”

ஹெலன்: “பரவாயில்லை. இங்கே எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கிட்டவங்கதான். அதனால ஒரு பிரச்சினையும் இல்லை.”

ஜோகோ: “என்னது? அப்படீன்னா இங்கே இருக்கிற எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கிட்டவங்களா?”

ஹெலன்: “ஆமாம். ஏன் கேட்கிறீங்க?”

ஜோகோ: “அதான் எல்லாரும் தடுப்பூசி போட்டிருக்காங்கள்ல... அப்ப நான் உள்ள வர்றதுல ஒரு பிரச்சினையும் இருக்காதுல்ல?!”

ஹெலன்: “ம்க்கும். நீங்க உள்ளே போய் எல்லாருக்கும் தொற்று பரவவச்சிட்டீங்கன்னா என்ன பண்றது?”

ஜோகோ: “இது என்ன கதையா இருக்கு! எனக்குத்தான் ஒரு பிரச்சினையும் இல்லைன்னு சொல்றேன். அவங்களும் தடுப்பூசி போட்டிருக்காங்க... அப்புறம் என்னதான் பிரச்சினை?”

ஹெலன்: “சிம்பிள். ஏன்னா நீங்க தடுப்பூசி போட்டுக்கலை.”

ஜோகோ: “சரியாப்போச்சு போங்க. அதான் அவங்க எல்லாரும் தடுப்பூசி போட்டிருக்காங்கள்ல?”

ஹெலன்: “இருந்தாலும், அவங்களுக்கு உங்களால தொற்று வந்திடுச்சுன்னா என்ன பண்றது? சொன்னா கேளுங்க சார்!”

ஜோகோ: “அப்ப அவங்க போட்ட தடுப்பூசிக்கு என்னதான் அர்த்தம்?”

ஹெலன்: “தடுப்பூசி அவங்களைப் பாதுகாக்குது சார். பேசிக்கே தெரியாம ஏன் பேசுறீங்க?”

ஜோகோ: “இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க மேடம். தடுப்பூசி போட்டுக்கிட்டவங்களால கோவிட் பரவாதா?”

ஹெலன்: “யார் சொன்னது? தடுப்பூசி போட்டுக்காதவங்ககிட்ட இருந்து எப்படிப் பரவுமோ அப்படித்தான் தடுப்பூசி போட்டுக்கிட்டவங்க கிட்ட இருந்தும் பரவும்.”

ஜோகோ: “என்னாங்க நீங்க... ஒரேயடியா குழப்புறீங்களே! சரி விடுங்க... நான் நல்லாத்தான் இருக்கேன்.”

ஹெலன்: “சரி... அதுக்கென்ன?”

ஜோகோ: “இப்ப நீங்க உள்ளே போக பெர்மிஷன் கொடுத்தீங்களே... அந்தாளு நோயாளிதானே?”

ஹெலன்: “ஆமா... அதுக்கு?”

ஜோகோ: “அப்புறம்... உள்ள இருக்கிற எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்கன்னு சொன்னீங்க இல்லையா?”

ஹெலன்: “ஆமா. கண்டிப்பா!”

ஜோகோ: “அப்புறம் ஏங்க... நான் மட்டும் உள்ளே போகக்கூடாதுன்னு அடம் பிடிக்கிறீங்க?”

ஹெலன்: “மறுபடியும் முதல்ல இருந்தா? அய்யா... நீங்க தடுப்பூசி போட்டுக்கலை. அதான் மேட்டரு!”

ஜோகோ: “யார் ஊசி போட்டுக்கிட்டாங்க... யார் போடலைன்னு நான் கேட்கலை மேடம்!”

ஹெலன்: “சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்காகச் சொன்னேன். அது உங்ககிட்ட இருக்குதுங்களா?”

ஜோகோ: “கிண்டலா? சரி என்ன பண்ணித் தொலைக்கிறது. சரி. நான் மாஸ்க் போட்டுக்கிறேன்.”

ஹெலன்: “நல்ல விஷயம்தான். மூக்கு வரைக்கும் மறைச்சு இறுக்கமா போடுங்க முதல்ல.”

ஜோகோ: “போட்டாச்சு... போட்டாச்சு. இப்ப போகட்டுமா மேடம்?”

ஹெலன்: “வாய்ப்பில்லை ராஜா!”

ஜோகோ: “என்ன இது அக்கிரமமா இருக்கு. அதான் மாஸ்க் போட்டுக்கிட்டேன்ல?”

ஹெலன்: “அது முக்கியம் இல்லை இப்போ!”

ஜோகோ: “நேத்து நான் மாஸ்க் போட்டுக்கிட்டு இங்கே வந்தேன்.”

ஹெலன்: “ஓ... அதுவும் எனக்குத் தெரியுமே?”

ஜோகோ: “அதான் தெரியுதுல்ல?! இப்ப மாஸ்க் போட்டுக்கிட்டு உள்ளே போறேன். ‘தடுப்பூசி போடலை... அதனால உள்ளே போகாதே’ன்னு சொன்னா தகராறு ஆகிப்போய்டும்... ஆமா!”

ஹெலன்: “ஏன் டென்ஷனாகுறீங்க? அடங்குங்க பாஸ்!”

ஜோகோ: “அப்படீன்னா மாஸ்க்குக்கு ஒரு மரியாதையும் இல்லை... அப்படித்தானே?”

ஹெலன்: “யார் சொன்னது? மாஸ்க் போட்டுக்கிறது நல்லதுதான்.”

ஜோகோ: “ஆனாலும் நான் உள்ளே வர முடியாது. அதானே நீங்க சொல்ல வர்றீங்க?”

ஹெலன்: “கரெக்ட்டா பாயின்ட்டைப் புடிச்சிட்டீங்க. ஆமா... நீங்க உள்ளே போக முடியாது?”

ஜோகோ: “அதான் ஏன்ங்கிறேன்...”

ஹெலன்: “ஏன்னா நீங்க தடுப்பூசி போட்டுக்கலை!”

ஜோகோ: “தேவுடா! ஆனா, மாஸ்க் போட்டுக்கிட்டா கிருமியெல்லாம் கிட்ட வராதுன்னு சொல்வாங்களே?”

ஹெலன்: “இருக்கலாம். இருந்தாலும் கரோனா வைரஸ் அதையெல்லாம் கணக்குல வச்சுக்காது!”

ஜோகோ: “பேசிப் பேசி டயர்டாகிட்டேன். அதான் மத்தவங்கள்லால் தடுப்பூசி போட்டிருக்காங்கள்ல?”

ஹெலன்: “தெரியும் சார். இருந்தாலும் அவங்களுக்கும் நோய் தொத்திக்கிடும்!”

ஜோகோ: “நாந்தான் ஒரு பிரச்சினையும் இல்லாம கல்லுக்குண்டான் மாதிரி இருக்கேனே?!”

ஹெலன்: “இருந்தாலும் உங்களுக்கும் தொற்று வரும் சார். நீங்க உங்களைப் பாதுகாத்துக்கணும்ல. அதனாலதான் உள்ளே வர வேண்டாம்னு சொல்றேன்.”

ஜோகோ: “ரைட்டு விடு! நான் கைக்காசு போட்டு செலவு பண்ணி கரோனா டெஸ்ட் எடுத்து எனக்குத் தொற்று இல்லைன்னு ப்ரூவ் பண்றேன். அப்புறம் உள்ளே வரலாம்தானே? என்னை நீங்க பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்காதுல்ல?”

ஹெலன்: “இது ஓகே தான். உங்களுக்குத் தொற்று இல்லைங்கிறது ப்ரூவ் ஆகிடும். அவங்களுக்கும் உங்களால தொற்று வராது.”

ஜோகோ: “இருங்க இருங்க... எனக்குத் தொற்று வராம பாதுக்கணும்னு நீங்க விரும்புறதால்ல நான் நினைச்சேன். நீங்க சொல்றதைப் பார்த்தா, எனக்குக் கரோனா இல்லைன்னு ப்ரூவ் பண்ணிட்டா நான் உள்ளே போகலாம்... அப்படிப் போனா தடுப்பூசி போட்டுக்கிட்டவங்களுக்குத் தொற்று வராதுங்கிற மாதிரில்ல இருக்கு... ஏன் இப்படிப் போட்டு இம்சை பண்றீங்க?”

ஹெலன்: “ஏன்னா, நீங்க தடுப்பூசி போட்டுக்கலை. தடுப்பூசி போட்டுக்கிட்டவங்களுக்கு உங்க மூலமா வைரஸ் பரவி அவங்களுக்குத் தொற்று வந்துடக் கூடாது. அதனாலதான்...”

ஜோகோ: “அப்படீன்னா... எனக்குத் தொற்று வரக்கூடாதுன்னு நீங்க என்னைப் பாதுகாக்க நினைக்கலை. அப்படித்தானே?”

ஹெலன்: “எனக்கு எதுவுமே தெரியாது சார். நான் என் கடமையைச் செய்றேன்.”

ஜோகோ: “நல்லா செய்றீங்க கடமையை! லைட்டா தலையைச் சுத்துது. முடிஞ்சா நல்ல ஃபைவ் ஸ்டார் ஆஸ்பிட்டலா பார்த்து அட்மிட் பண்ணிடுங்க. பில்லை உங்க நாட்டு பிரதமர் செட்டில் பண்ணிடட்டும்!”

(மனிதர் மயங்கிச் சரிகிறார்!)

ஓவியங்கள்: வெங்கி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE