‘பாரதிய ஜல்லிக்கட்டு கட்சி’: அடித்து ஆடும் அண்ணாமலை!

By சானா

நைட் ஷோவில் ‘நாய் சேகர்’ படம் பார்த்துவிட்டு வந்த பாதிப்பில் (!) இருந்தது பறக்கும் பைக். ‘‘அந்தப் படத்துல நாய் மனுஷன் மாதிரி பேசுது. நாயகன் நா(ய்)யகனா மாறிடுறான். என்னா ஒரு கற்பனை... அடடா” என்று தனக்குத்தானே பேசிக்கொண்ட பைக், ‘படத்துல வர்ற மாதிரி நான் பாச்சாவாகவும், பாச்சா நானாகவும் மாறுனா நல்லா இருக்குமா? பேட்டி எடுக்கும்போது என்னென்ன லூட்டியெல்லாம் அடிக்கணும்? பாச்சா சொதப்பும் அளவுக்கு நம்மளால சூப்பரா சொதப்ப முடியுமா?’ என்றெல்லாம் சீரிய சிந்தனைகள் அதன் சிப் மூளையில் சிதறின.

பைக்கின் சிந்தனையைத் தன் சிறு மூளையால் (மொத்தமே அவ்வளவுதான்!) ஸ்மெல் செய்த பாச்சா, “ஏன் இருக்கிற வம்பு பத்தாதா? கற்பனைப் பேட்டிங்கிறதால காயம்படாம தப்பிச்சிட்டு இருக்கேன். அதுலயும் நாய் மாதிரி வாய் வச்சு கன்னாபின்னான்னு காயப்படவைக்க காய் நகர்த்திறியா?” என்று பயந்தான்... ஸாரி பாய்ந்தான். உடனே, கடந்த சில மாதங்களாக கமல் இருப்பதுபோல ‘கப்சிப்’ ஆனது பைக்.

அன்று முதலாமவர் அண்ணாமலை. கட்சியில் சேர விரும்புபவர்களுக்கு நேர்காணல் நடத்தும் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

“சரிங்கண்ணா. உங்க மேல 10 கொலை கேஸ் இருக்குன்னாலும் அதுல எல்லாம் ஜாமீன்ல வந்திருக்கீங்க. அது உங்க அரசியல் தகுதியைக் காட்டுதுங்கண்ணா. ஆனாலும், ஏதோ பெட்டி கேஸ்ல இன்னமும் உங்களைப் போலீஸ் தேடுதாமே? காக்கிச் சட்டைகளால தேடப்படுறவங்களைக் காவிக் கட்சியில சேர்க்கக் கூடாதுங்கிறதுல நாங்க கண்டிஷனா இருக்கோமுங்க. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்று தாமரைக் கட்சியில் சேர வந்த ஒருவருக்குத் தடை போட்டுக்கொண்டிருந்தார், தமிழக பாஜக தலைவர்.

“ஐபிஎஸ்ஸா இருந்த அனுபவத்தை வச்சு ஆளுங்களை ஐடென்டிட்டிஃபை பண்றதுல அசத்துறீங்க. அரசியல் தூய்மைங்கிறது இதுதான் சார்” என்று ஏகத்துக்கும் புகழ்ந்தபடி என்ட்ரி கொடுத்த பாச்சா, “உங்க கணக்குப்படி பார்த்தா ராஜேந்திர பாலாஜிக்கு உடனடியா உங்க கட்சியில பொறுப்பு கொடுத்துடலாம்னு தோணுது. போலீஸால தேடப்படுற நபரா இருந்தவர், உச்ச நீதிமன்றத்துலேயே ஜாமீன் வாங்கி உற்சாகமா வலம் வர்றாரே” என்று எடுத்த எடுப்பில் கடுப்பையும் கிளப்பினான்.

‘போட்’ போட்டோஷூட் மீம்ஸ் வைரலானபோதும் அதை ‘நெகட்டிவ்’வாக எடுத்துக்கொள்ளாமல், கழுவித் துடைத்த கலர் போட்டோ மாதிரி கலகலவென இருந்தவரான அண்ணாமலை இந்த முறையும், டஃப் டாபிக்குடன் டபாய்த்த பாச்சாவை டபுள் பாஸிட்டிவாக எதிர்கொண்டார்.

“அதாவதுங்கண்ணா... தமிலக மக்களுக்கும் தமிலுக்கும் பாரதப் பிரதமர் எவ்வளவோ செய்யணும்னு நினைக்கிறார். ஆனா, அவரோட குணத்தைப் புரிஞ்சுக்காம தமிலக அரசியல் தலைவர்கள் அவருக்கு ‘கோ பேக்’ சொல்லிட்டு இருந்தாங்க. மோடியை டாடியா ஏத்துக்கிட்ட ராஜேந்திர பாலாஜி அவரோட மோஸ்ட் வான்டட் தலைவரா இருக்கார்” என்று ஏதேதோ சொல்லிச் சமாளித்தார் அண்ணாமலை.

“அவருக்கு ஜாமீன் கிடைச்ச வேகத்துலதான் அந்தப் பாசம் அப்பட்டமா தெரியுதே” என்று முணுமுணுத்த பாச்சா, “தமிலகத்தின் ஸாரி... ழகத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுத்தது பாஜகதான்னு படீர்னு ஒரு குண்டைப் போட்டிருக்கீங்களே... இதெல்லாம் திமுக லிஸ்ட்லகூட இருக்காதே” என்று கேட்டான்.

“அப்புறம் என்னங்கண்ணா! ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததே நாங்கதானேங்க? ஒத்துமையா நின்னு போராடுற அளவுக்கு தமிலர்கள் மத்தியில கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துனது நாங்க தானே? அப்ப எங்களுக்குத்தானே அதுல உரிமை ஜாஸ்தி?” என்று அடுக்கடுக்காக அசத்தும் வாதங்களை முன்வைத்தார் அண்ணாமலை.

“விட்டா, ‘பாரதிய ஜல்லிக்கட்டு கட்சி’ன்னு பேரையே மாத்திக்கிடுவீங்க போல இருக்கே...” என்று சிரித்த பாச்சா, “எல்லாம் சரி, பொன்னாருக்கும் உங்களுக்கும் இடையில ஏதோ பொல்லாப்புன்னு நியூஸெல்லாம் வருதுங்களே?” என்றான்.

வழக்கம்போல் வருத்தப்படாத முகம் காட்டிய அண்ணாமலை, “கட்சிக்கு வெளியே இருக்கிறவங்க கிட்டேயே நாங்க பாசமா நடந்துக்குவோம். கட்சிக்குள்ள எதுவா இருந்தாலும் கம்னு பேசாம இருந்துக்குவோம். அடுத்த பிரச்சினை வந்ததும் அதுவா அடங்கிடும்” என்றார்.

“ஆமாமா உங்க கட்சிக்காரங்க காட்டுன பாசத்தைத்தான் பல்லடத்துல நல்லாப் பார்த்தோமே” என்று சொன்ன பாச்சா, சொன்ன வேகத்தில் அங்கிருந்து எஸ்கேப்பானான்.

அடுத்து உதயநிதி.

“அடுத்த மீட்டிங்ல சிசிடிவி கேமராவுக்குப் பதிலா சினிமா கேமராவையே ஃபிக்ஸ் பண்ணுங்க. அப்பத்தான் எல்லாரையும் க்ளோஸப்ல க்ளோஸா வாட்ச் பண்ண முடியும். எவ்வளவு ட்ரிக்ஸா எங்க ஆட்கள்கிட்டேயே, அதுவும் என்னோட ஆஃபீஸ்லயே ஆட்டையப் போடுறாங்க” என்று கழகத்தினருக்குக் கண்டிஷனாக உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார் உதயநிதி.

“ஆமாங்க. ஸ்ட்ரிக்ட்டா ஆக்‌ஷன் எடுங்க. நீங்கள்லாம் இருக்கும்போதே இன்னொருத்தர் இப்படி செய்றது ரொம்ப அதிர்ச்சியா இருக்குதுங்க” என்று சொன்ன பாச்சா, உதயநிதி உர்ரென்று முறைத்ததும் ஷாக்காகி நாக்கைக் கடித்தபடி, “அதாவது, உங்க கண்ணுமுன்னாலேயே திருட்டு நடக்கிறது திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் தானுங்களே” என்று சமாளித்தான்.

“சரி சரி சீக்கிரம் கேள்வியைக் கேட்டு முடிப்பா” என்று உதயநிதி அவசரப்படுத்தியதும், “முன்னாடியெல்லாம் சுறுசுறுப்பா சேப்பாக்கம் தொகுதியில சுத்திட்டு இருந்த நீங்க, இப்பல்லாம் ஷூட்டிங்லதான் அந்தச் சுறுசுறுப்பைக் காட்டுறீங்க போல?” என்று அவரை மேலும் சூடாக்கினான் பாச்சா.

“எனக்கு நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்குப்பா. கலைஞரோட பேரனா இருக்கிற எனக்குக் கலைகளெல்லாம் அத்துபடின்னு காட்டணும். அப்புறம் அரசியல் அரிச்சுவடியிலயும் அரியர்ஸ் வைக்காம பாஸாகணும். அதனால ரெண்டையும் பேலன்ஸ் பண்ண ட்ரை பண்றேன்” என்று ஒரு அமைச்சருக்குரிய அமைதியுடன் பதில் சொன்னார் உதயநிதி.

“சரி, நீங்க அடுத்து அமைச்சரா, துணை முதல் அமைச்சரான்னு கட்சிக்குள்ள பட்டிமன்றமே நடக்குதாமே? எப்பத்தான் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஒரு எண்டு கார்டு போடுவீங்க? தை பிறந்தாச்சு வழி எப்ப பிறக்கும்?” என்று பாச்சா கேட்டதும், எரிச்சலடைந்த இளைஞரணிச் செயலாளர், “ஏன் இப்பவும் நான் நல்ல வழியிலதானே போய்க்கிட்டு இருக்கேன். எத்தனை தடவை சொன்னாலும் ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது... ம்ம்ம்ம்??” என்று அன்னபூரணி அம்மாள் போல ஆவேசம் காட்டினார்.

அடக்க ஒடுக்கமாக அங்கிருந்து திரும்பும் வழியில், “சீமானையும் பேட்டி எடுக்கணும்பா. லிஸ்ட்ல அவர் பேர் இருக்கு” என்று சொன்னது பறக்கும் பைக். “பேசாம இருப்பா. காமெடி படத்துல நடிச்சு ஃபேமஸான உதயநிதியே கடும் கோபம் காட்டும்போது, கராத்தேல கறுப்பு பெல்ட் வாங்குன சீமானெல்லாம் உச்சக்கட்ட உக்கிரமால்ல இருப்பாரு?! தவிர, தப்புத்தப்பா கணக்குகளைப் போட்டுத் தாக்கிட்டு இருக்கிற தம்பிகளைப் பார்த்தா, ரொம்பவே டயர்டாகிடுவோம். அண்ணன் சீமானை அடுத்த வாரம் பார்த்துக்கலாம்!” என்று பைக்கை அடக்கினான் பாச்சா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE