போட்டி பேரணி தொடங்கிய தமிழக விவசாயிகள்!

By கரு.முத்து

கர்நாடகத்தில் மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று பேரணி தொடங்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே புதிதாக மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக முதல் கட்டமாக நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் உருவாகும் என்பதால் தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகள் இதனை அனுமதிக்கக்கடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

மேகேதாட்டுவில் உடனடியாக அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் கர்நாடகத்தில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த பேரணிக்கு போட்டியாகவும், மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மேகேதாட்டுவில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக தமிழக விவசாயிகள் இன்று பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் நடத்தும் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தின் காவிரி உரிமையைப் பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தியும் பேரணியாக புறப்பட்டு மேகேதாட்டு பகுதியை முற்றுகையிடுவது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (ஜனவரி 18 ) காலை திட்டமிட்டபடி பேரணி தொடங்கியது. திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 300 பேருடன் தொடங்கிய பேரணியை மும்மதத்தலைவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

திருவாரூர் ரயில் நிலையம் அருகில் இருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் வாகனப்பேரணி புறப்பட்டது. இது தஞ்சாவூர் திருச்சி, நாமக்கல் வழியாக இன்று இரவு சேலத்தை அடைகிறது. ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த மாவட்ட விவசாயிகள் சார்பில் பேரணி நடைபெறுகிறது. நாளை 19-ம் தேதி ஓசூர் வழியாக மேகேதாட்டு பகுதியை அடைந்து அங்கு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE