ஜனவரி 18: கலகக் கலைஞர் எஸ்.பாலசந்தரின் பிறந்ததினம்!

By சந்தனார்

தமிழ் சினிமாவிலும், கர்னாடக இசையுலகிலும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்திய கலையுலக மேதை வீணை எஸ்.பாலசந்தரின் பிறந்தநாள் இன்று.

1927 ஜனவரி 18-ல் சென்னை மயிலாப்பூரில், சுந்தரம் அய்யர் - செல்லம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தவர் பாலசந்தர். அவரது தந்தை சுந்தரம் அய்யர், இசைக் கலைஞர்களின் புரவலராக இருந்தவர். அவரது வீட்டுக்கு ஏராளமான இசைக் கலைஞர்கள் வருவது வழக்கம் என்பதால், குழந்தைப் பருவத்திலிருந்தே பாலசந்தருக்கும் இசையார்வம் தொற்றிக்கொண்டது. பாபநாசம் சிவன் போன்ற இசை மேதைகளிடம் இசை கற்றுக்கொண்டாலும், சுயம்புக் கலைஞராகவே அவர் பரிணமித்தார். கேள்வி ஞானத்தில்தான் தனது இசையார்வம் முகிழ்த்ததாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

குடும்பமே கலைக் குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் பாலசந்தர். 1934-ல் மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் தயாரான ‘சீதா கல்யாணம்’ எனும் திரைப்படம்தான் அவரது முதல் படம். திரைமேதை சாந்தாராம் தயாரிப்பில் உருவான அந்தப் படத்தில் ராமர் வேடத்தில் நடித்தது பாலசந்தரின் சகோதரர் எஸ்.ராஜம். அக்கா ஜெயலட்சுமி சீதாவாக நடித்தார். தந்தை சுந்தரம் அய்யர், ஜனகராக நடித்தார்.

இப்படி ஆரம்பித்த பாலந்தரின் திரையுலகப் பயணம், பின்னாட்களில் புதுமையான கதைகளுடன் கூடிய திரைப்படங்களைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்கும் அளவுக்கு அவரை உயர்த்தியது. பாலசந்தர் நடித்து இயக்கிய ‘என் கணவர்’ திரைப்படம் 1948-ல் வெளியானது. அதற்கு முன்னதாகவே, ‘இது நிஜமா?’ திரைப்படத்தில் நாயகனாக பாலசந்தர் நடித்திருந்தார். கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே இரட்டை வேடம் அவருக்குக் கிடைத்தது. சிவாஜி நடிப்பில் அவர் இயக்கிய ‘அந்த நாள் ’(1954) திரைப்படம் அவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது. அகிரா குரோசாவாவின் ‘ராஷோமோன்’ திரைப்படத்தின் கதைசொல்லல் உத்தியின் பாதிப்பில் பாலசந்தர் உருவாக்கிய அந்தப் படம், அதன் திரைக்கதை நேர்த்திக்காக இன்று கொண்டாடப்படுகிறது.

பாலசந்தர் 4 வயது சிறுவனாக இருந்தபோது ஒரு இசைக் கலைஞர் அவருக்குக் கொடுத்த தாள வாத்தியமான கஞ்சிரா, பாலசந்தரின் இசைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ‘சீதா கல்யாணம்’ திரைப்படத்தில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாகவே நடித்திருந்தார் பாலசந்தர். 10 வயதிலேயே ஹார்மோனியம் இசைத்துப் பாடும் அளவுக்குத் திறன் பெற்றார். பின்னாட்களில் வீணை எஸ்.பாலசந்தர் என்றே அழைக்கப்படும் அளவுக்கு மிகச் சிறந்த வீணைக் கலைஞராக உருவெடுத்தார்.

பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கே.ஜே.யேசுதாஸ் தமிழில் பாடி முதலில் ஒலிப்பதிவான ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ பாடல், பாலசந்தரின் ‘பொம்மை’ படத்தில் இடம்பெற்றதுதான். இசை, நடிப்பு, நடனம், ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு எனத் திரைக் கலையின் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவர் அவர். திரைப்பட உருவாக்கத்தில் பல புதுமைகளைச் செய்தார். சென்னையில் உலகத் திரைப்பட விழாக்களுக்குத் தொடக்கப்புள்ளி வைத்தவர்களில் பாலசந்தரும் ஒருவர். திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கும் நட்சத்திரக் கிரிக்கெட்டும் அவரது முயற்சியில் சென்னையில் நடத்தப்பட்டது.

கர்னாடக இசையுலகில் பாலசந்தர் நிகழ்த்திய கலகங்கள் புகழ்பெற்றவை. இசை விமர்சகர் சுப்புடுவுடன் அடிக்கடி மோதினார். பாலமுரளி கிருஷ்ணாவைச் சீண்டினார். சுவாதி திருநாள் குறித்து சர்ச்சை கிளப்பினார்.

எல்லாவற்றையும் தாண்டி, அபாரமான பகடித் தன்மையும், போர்க்குணமும் கொண்ட பாலசந்தர், தனித்தன்மை கொண்ட சுயம்புக் கலைஞராகவே தமிழ்த் திரையுலகிலும், இசையுலகிலும் முத்திரை பதித்தார்.

சங்கீத கலாசிகாமணி, பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட பாலசந்தர், 1990 ஏப்ரல் 13-ல் மறைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE