சிந்திக்கத் தவறிவிட்டோம் சிந்தாமணி மருத்துவத்தை!

By என்.சுவாமிநாதன்

சித்த மருத்துவத்தைத் தான் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறை என நம்மில் அநேகம் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், “சித்த மருத்துவத்துக்கும் முன்னோடி சிந்தாமணி மருத்துவம்” என்கிறார் மருத்துவர் புட்பராசு. சிந்தாமணி மருத்துவத்தின் பிதாமகன் இலங்கையை ஆண்ட இராவணன் என்பதும் இவர் சொல்லும் கூடுதல் தகவல்.

இந்தி நூல்கள்

குழித்துறையைச் சேர்ந்த புட்பராசு, இதுகுறித்து கூடுதல் விளக்கம் கேட்டதும் உற்சாகம் ததும்ப பேசத் தொடங்கினார். “இது முற்றிலும் தனித்தமிழ் மருத்துவம். தமிழர்களின் முதல் மருத்துவம் மனோன்மணி மருத்துவம். இரண்டாம்கட்ட மருத்துவம் தான் சிந்தாமணி மருத்துவம். இதில் பிறமொழி கலப்பே இருக்காது. இவற்றுக்குப் பின்னால் வந்த மூன்றாம் கட்ட மருத்துவம் தான் சித்த மருத்துவம். இதைக் கூர்ந்து படித்தால் சமஸ்கிருத கலப்பு இருப்பது தெளிவாகத் தெரியும். ஆனால் சித்தாவைத் தெரிந்த அளவுக்கு அதற்கு முந்தைய இரு தனித்தமிழ் மருத்துவங்களும் மக்களுக்குத் தெரியவில்லை. சிந்தாமணி மருத்துவம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதன் முன்னோடியே இராவணர் மன்னர்தான்” என்றார் புட்பராசு.

அவரிடம், “எல்லோரும் இராவணன் என்று தானே சொல்லக் கேட்டிருக்கிறோம்... ஆனால், நீங்கள் அதீத மரியாதை கொடுத்து இராவணர் ஆக்கிவிட்டீர்களா?” என்று கேட்டதற்கு,

“அகத்தியனை அகத்தியர் என்கிறோம். போகனை போகர் என்கிறோம். அவர்களுக்கு இணையாக தமிழ் மருத்துவக் குறிப்புகளை இந்த உலகுக்குத் தந்து சிந்தாமணி மருத்துவத்தின் முன்னோடி இராவணனை, இராவணர் எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். எனது நூல்களிலும் அப்படியே அவர்பெயரை குறிப்பிட்டிருக்கிறேன்” என்றார்.

புட்பராசு

“சீதையைக் கடத்தியவர், அடுத்தவர் மனைவி மீது மோகம் கொண்டவர் என்றே இராவணரைச் சித்தரிக்கிறார்கள். தமிழ் பண்பாட்டில் பிறர் மனைவி மீது கொண்ட மோகத்துக்கு மன்னிப்பே இல்லை. அதனாலேயே அப்படி ஒரு குற்றத்தை இராவணர் மேல் சுமத்தி, அவரது தமிழ் மருத்துவப் பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். இராவண மருத்துவமான சிந்தாமணி மருத்துவத்தையும் மக்கள் தவறாக நினைத்துக்கொள்ளும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இராவணரைக் கெட்டவராக ரத்தத்திலேயே ஏற்றிக்கொண்டு விட்டதால், அவர் மருத்துவம் எழுதியிருக்கிறார் என்பதையே யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அவரின் தனிப்பட்ட குணநலன்களை மதிப்பீடு செய்ய விரும்பவில்லை. அதேநேரம் அவரது மருத்துவத் திறனைப் புறந்தள்ள முடியாதல்லவா?” என்று ஆதங்கப்படுகிறார் புட்பராசு .

புட்புராசு தனது இல்லத்தில் ஆடுகளுடன் சேர்த்து கழுதைகளையும் வளர்க்கிறார். கழுதைப்பாலும், ஆட்டுப்பாலும் சிந்தாமணி மருத்துவத்துக்கு மிக அடிப்படையானது என்பதால் அவற்றை வளர்க்கிறாராம்.

“பத்து அறிஞர்களுக்குரிய மூளை இராவணருக்கு இருந்ததால் தான் அவர் பத்து தல ராவணர் எனப்படுகிறார். வட இந்தியாவில் ராவணர் எழுதிய மருத்துவ நூல்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அட்டையில் அவரது படத்தையே போட்டே விற்பனை நடக்கிறது. தமிழர்களுக்குத்தான் அதன் மகத்துவம் தெரியவில்லை” என்றுசொல்லும் புட்பராசு, தனது வம்சத்தின் 6-வது தலைமுறையாக சிந்தாமணி மருத்துவத்தைத் தொழில் முறையாகச் செய்துவருகிறார். அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற இவரிடம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து சிந்தாமணி மருத்துவம் படித்துச் செல்கிறார்களாம். தனக்குப் பின்னாலும் இந்த மருத்துவம் தழைக்க வேண்டும் என்பதற்காக தனது மகன்களுக்கும் சிந்தாமணி மருத்துவத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார் புட்பராசு. இப்போது அவர்களும் இந்த மருத்துவ முறைப்படி சிகிச்சையளித்து வருகிறார்கள்.

இராவணர்

தொடர்ந்து நம்மிடம் பேசிய புட்பராசு, “இராவணர் அந்தக் காலத்தில் இந்த மருத்துவக் குறிப்புகளையெல்லாம் செம்புப் பட்டயத்திலும், தாழி ஓலையிலும் எழுதியிருக்கிறார். ‘நல்ல நூல் எதிர் ஏறும்; கெட்ட நூல் தண்ணீரில் அடித்துவிட்டுப் போகும்’ என்ற மூடநம்பிக்கையில் அதில் பலகுறிப்புகளை தண்ணீரில் போட்டு வீணாக்கிவிட்டார்கள். தமிழ் மண்ணின் மருத்துவமான சிந்தாமணி, கேரளத்தில் பரவிய அளவுக்கு தமிழகத்தில் செழிக்கவில்லை. அதனால், சிந்தாமணி மருத்துவத்தின் பெரும்பகுதியை கேரளத்தில் ஆயுர்வேதத்தில் சேர்த்துவிட்டார்கள்.

வட இந்திய மருத்துவமான ஆயுர்வேதத்தில் இல்லாத சிகிச்சைகள் எல்லாம் கேரள ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் சிந்தாமணி மருத்துவக் கலப்புதான். எனவே, இனியாவது சித்த மருத்துவக் கல்லூரிகளில் சிந்தாமணி மருத்துவத்தைப் பாடமாக சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இராவணர் பெயரில் ஆயுர்வேத மருத்துவமாக திரிக்கப்பட்டு, வட இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் புத்தகங்களை தமிழாக்கம் செய்ய வேண்டும். அதைத் தமிழ் மருத்துவர்கள் அனைவரும் படிக்க வேண்டும்.

அதேபோல், சிங்களத்தில் இருக்கும் சிந்தாமணி மருத்துவக் குறிப்புகளையும் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும். இதை அரசுதான் செய்யமுடியும்; தனி நபரால் முடியாது. நான் அப்படியொரு முயற்சியைத் தொடங்கி ஏகப்பட்ட பணம் செலவுசெய்து கைவிட்டேன். இராவணர் மருத்துவம் குறித்து 7 புத்தகங்களும் எழுதியிருக்கிறேன். இந்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சைகூட செய்யமுடியும். அலோபதியில்கூட நோய் வந்த உடன்தான் தீர்வு காணமுடியும். இந்த மருத்துவத்தில், ஒருவருக்கு இரத்த அழுத்தம் வரும் என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கமுடியும். சிந்தாமணி மருத்துவத்தால், கோமாவில் படுத்தவர்களைக்கூட மீட்கமுடியும் என்று குறிப்புகளை எழுதிவிட்டுப் போயிருக்கிறார் இராவணர்” என்றார்.

புட்பராசு

இராவண மருத்துவத்தைப் பற்றி விலாவாரியாகப் பேசிய புட்பராசு, பெண்கள் மீது இராவணன் கொண்டிருந்த மதிப்பைப் பற்றியும் பேசினார். “பெண்களுக்கான நோய்கள், அதைப் போக்கும் தீர்வுகள் பற்றி மட்டுமே இராவணர் 43 ஆயிரம் பாடல்களை எழுதியிருக்கிறார். அதிலெல்லாம் பெண்களை அன்னை, தங்கை என உயர்வாகவே எழுதியிருக்கிறார். திடீரென பாம்பு கடித்துவிட்டால் சித்தமருத்துவம் வாய்வழியாக மருந்துகொடுக்க அறிவுறுத்தும். ஆனால், சிந்தாமணி மருத்துவம் ரத்தத்தில் மருந்துகொடுக்கும். அப்போது பாம்பின் விஷத்தை விட, மருந்து வேகமாக வேலைசெய்யும். இப்படி ஒரு மருத்துவக் களஞ்சியமாகவே இருக்கிறது இராவணரின் குறிப்புகள்.

இராவணர் சீதையைக் கடத்தியதாகச் சொல்லப்படுவதை எல்லாம் ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு, அவரின் மருத்துவ அறிவைப் பொதுவெளியில் நாம் விவாதிக்க வேண்டும். ஏனென்றால், அது நம் தமிழ் மண் தவறவிட்ட பெருங்கலை’’ என்று நிறைவாக முடித்தார் புட்பராசு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE