தனக்குச் சோறில்லை என்றாலும்...

By கரு.முத்து

தனக்குப் பார்வை இல்லாது போனாலும் தான் வாழும் இந்த சமூகத்துக்கு, தன்னாலானதைச் செய்துவிடவேண்டும் என்ற சமூக அக்கறையோடு இருக்கிறார் கிருபாகரன். இளம் வயதில் பார்த்து ரசித்த இந்த உலகத்தை, இனியொருமுறை தன்னால் தரிசிக்க முடியாது போனாலும் சமூகம் விழிப்புணர்ச்சியோடும், மலர்ச்சியாகவும் இருக்கவேண்டும் என்று மெனக்கிடுகிறார் இந்த பார்வை மாற்றுத் திறனாளி.

முத்துப்பேட்டை தபால் அலுவலகம் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே ஒரு ஓரமாய் நிற்கும் கிருபாகரன், பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், மது ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசாங்கம் சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் முனைப்பில். இருக்கிறார். யாரையோ வைத்து கடிதத்தை எழுதி முடித்துவிட்டவர், நிறைவாக, அருகிலிருந்த மாணவர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் பிரதமர் அலுவலக விலாசத்தைச் சொல்லி எழுதச் சொல்லிக் கொண்டிருந்தார்.

கிருபாகரனுக்கு வயது 35. எம்ஏ வரை படித்திருக்கிறார். அடுத்ததாக பிஎச்.டியையும் பார்த்துவிடும் ஆர்வம். ஆனால் அதற்குப் பொருளாதாரம் குறுக்கே தடைபோட்டு நிற்கிறது. அதனால் படிப்பு ஆர்வத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு, முத்துப்பேட்டை நகரில் வீதிவீதியாகச் சென்று ஊதுபத்தி விற்றுக் கொண்டிருக்கிறார். இந்த வருமானம் இவரின் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு போதுமானதாக இருக்கிறது. கிருபாவுக்கு அன்பான மனைவி, ஆசை மகன், மகள் என அழகான குடும்பமும் இருக்கிறது.

பெங்களூருவில் டிப்ளமா படிக்கும்போது பழக்கமான ருத்ரம்மாவை, இருவீட்டார் சம்மதத்துடன் கரம்பிடித்தார் கிருபா. தற்போது மனைவியும் மகளும் பெங்களூருவில் இருக்கிறார்கள். மகனும் இவரும் முத்துப்பேட்டை அருகே, நொச்சியூர் சமத்துவபுரத்தில் வசிக்கிறார்கள்.

குடும்பத்தினருடன்...

சமத்துவபுரத்தின் பழுதடைந்த வீட்டில், கிருபாகரனின் வயதான தாய், கணவனால் கைவிடப்பட்ட பார்வையற்ற தங்கை, அவரது மூன்று பிள்ளைகள், மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன், அவரது மனைவி உள்ளிட்டோர் முடங்கியிருக்கிறார்கள். கிடைக்கும் வேலையைச் செய்து அம்மா கொண்டுவரும் சொற்பத்தொகை, மாதா மாதம் கிடைக்கும் அரசின் உதவித்தொகை, அக்கம் பக்கத்தார் தரும் மீந்துபோன உணவுகள், பழைய துணிமணிகளை வைத்துத்தான் இந்தக் குடும்பத்தேர் நகர்கிறது.

இத்தனை கஷ்டம் இருந்தாலும் அதெல்லாம் கிருபாகரனை முடக்கிவிடவில்லை. காலையில் எழுந்ததுமே, ஊதுபத்தி பாக்கெட்டுகளை சுமந்துகொண்டு பஸ்பிடித்து முத்துப்பேட்டைக்கு வந்துவிடும் இவர், தனக்கு பழக்கமான பாதையில் நடக்கிறார். அரசு அலுவலகங்கள், கடைகள், வீடுகளில் இவருக்கான வாடிக்கை வியாபாரம் இருக்கிறது. ஊதுபத்தி வியாபாரத்தில் தினமும் 100, 200 சம்பாதிக்கிறார். இதில்லாமல், இரக்கப்பட்டு சிலர் தரும் டிப்ஸ் தனி. இதில் தனக்கான சாப்பாட்டுக்குப் போக மீதியை வீட்டுக்கும் அதில் கொஞ்சத்தை நாட்டுக்கும் செலவு செய்கிறார் கிருபா.

பழுதடைந்த வீடு

முத்துப்பேட்டையில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் மறுமலர்ச்சி சங்கத்துக்கு கிருபாகரன்தான் தலைவர். விழிப்புணர்வும், வேறுவழியும் இல்லாமல் இருக்கிற மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களை ஆற்றுப்படுத்தி, அவர்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை வாங்கித்தருவது என்று சக மாற்றுத் திறனாளிகளுக்காக சக்கரமாய் சுழல்கிறார் கிருபா. இவரது சம்பாத்தியத்தில் இதற்காகவும் கொஞ்சம் கரைகிறது.

இத்துடன் பள்ளி, கல்லுரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுக்கும் இவர், பொதுப் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதிலும் கில்லி. இப்படி இயல்பான மனிதர்களைவிட இன்னும் கூடுதல் சுறுசுறுப்பாக செயல்படும் கிருபாகரனிடம் சமூக ஆர்வலர் வெங்கட்டின் உதவியோடு பேசினோம்.

‘’நாலாம் வகுப்பு படிக்கும்வரை நானும் நார்மலாத்தான் இருந்தேன். ஆனா, அதுக்குப் பிறகுதான் எனக்கு பார்வையில் பிரச்சினை இருப்பதை டீச்சர் கண்டுபிடிச்சுச் சொன்னாங்க. அது கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு சுத்தமாவே பார்வை போயிருச்சு. அதுக்கப்புறம் புதுக்கோட்டை, திருச்சி ஊர்கள்ல இருக்கிற பார்வையற்றோர் பள்ளிகள்ல சேர்ந்து 12-ம் வகுப்புவரை முடிச்சேன். அதுக்கப்புறம் பெங்களூருவுக்குப் போய், பார்வையில்லாதவங்களுக்கான சிறப்பு டிப்ளமா படிச்சேன். அதன்மூலம் பிறர் உதவியில்லாம எப்படி நடமாடுறது என்பதை எல்லாம் உணர்ந்துக்கிட்டேன். அப்பத்தான், என்கூட படிச்ச ருத்ரம்மாவை காதலிச்சு கல்யாணமும் செஞ்சுக்கிட்டேன். படிச்சு முடிச்சு அங்கேயே ஒரு கார்மென்ட்ஸ்ல வேலையும் கிடைச்சுது. குடும்பத்தோட அங்கதான் இருந்தேன். அங்க இருக்கும்போதே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துல தொலைதூரக் கல்வி மூலமா பி.ஏவும், எம்.ஏவும் படிச்சு முடிச்சாச்சு.

கிருபாகரனின் குடும்பத்தினர்

ஆனா, சொந்த ஊரும், வீடும் என்னை விடாம துரத்துனதால ஒரு கட்டத்துல முத்துப்பேட்டைக்கே வந்துட்டேன். பார்வை இல்லாட்டிப் போனாலும், நம்மள சுத்தி இருக்கிற மக்களுக்காக நம்மாள முடிஞ்சத செய்யணும்கிற ஆசை மனசுக்குள்ள அடிச்சுக்குது. அதன்படி என்னால முடிஞ்சத செஞ்சுட்டு வர்றேன். டைம் கிடைக்கிறப்ப பெங்களூருவுக்குப் போய் மனைவி, மகளை பாத்துட்டும் வருவேன்.

இப்பப் போனாலும் எனக்கு பெங்களூருவுல கார்மென்ட்ஸ் வேலை ரெடியா இருக்கு; வெயிலே படமா வேலை பார்க்கலாம். ஆனா, நம்மள நம்பி இருக்கிற இத்தன ஜீவன்களுக்கு யாரு உதவுவா? இதை நெனச்சுத்தான் இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னார் கிருபாகரன்.

கரோனா விழிப்புணர்வு, மது, புகைக்கு எதிரான விழிப்புணர்வு, கல்வி விழிப்புணர்வு, மக்கள் ராணுவம் என்பது பற்றியெல்லாம் தன்னைச் சந்திக்கும் மனிதர்களிடம் சகஜமாக உரையாடுகிறார் கிருபா. இவரது பேச்சும் செயலும் சமூகத்தின் மீதான அக்கறை நிரம்பியதாகவே இருக்கிறது.

மாற்றுத் துணிக்கு ஆதாரமில்லை, அடுத்தவேளை உணவுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை என்றாலும், அதுகுறித்த கவலைகள் ஏதும் கிருபாவின் எண்ணங்களில் தெரியவில்லை. ஆனால் அதேநேரம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும், குடும்பத் தலைவிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தருவதாகச் சொன்ன மாதாந்திர உரிமைத் தொகையை உடனே தரவேண்டும் என்பது போன்ற மற்றவர்களுக்கான கோரிக்கைகள் இந்த மனிதருக்குள் நிறையவே இருக்கின்றன.

மற்றவர்களுக்காக கவலைப்படும் இந்த மனிதாபிமானியின் கவலைகளும் காற்றோடு பறக்கட்டும்; இவரது வாழ்க்கையும் பூத்துக் குலுங்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE