மரபணு மாற்ற உணவுகள்: நடிகர் கார்த்தி கடும் எதிர்ப்பு

By செ. ஏக்நாத்ராஜ்

மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகளுக்கு நடிகர் கார்த்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மக்களிடம் ஆன்லைன் வழியாக கருத்து கேட்டு வருகிறார்கள். இதற்கு, மரபணு மாற்றம் கூடாது என்று ஒருசாரார் இணையவழிக் கையெழுத்து இயக்கத்தை துவக்கியுள்ளார்கள். இதை நடிகர் கார்த்தி ஆதரித்து கையெழுத்திட்டுள்ளார். தனது ஆதரவினை டிவிட்டர் வாயிலாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது கருத்தினை விரிவான பதிவாக வெளியிட்டுள்ளார்.

”உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதனால் அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சி தடைபடுதல், உடலுறுப்பு சேதம், இனப்பெருக்கப் பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடியை ஏற்பதில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்தபோதிலும் இப்படியான உணவுப் பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதால், இந்தியாவிலும் அவற்றைப் பயிரிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

பொதுமக்கள் மற்றும் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட வலுவான ஆதாரங்களின் காரணமாக மரபணு மாற்றத்துக்கு ஆளான கத்தரி, கடுகு போன்றவை இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது ஏன் என்று புரியவில்லை.

இப்படியான உணவுகள் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அறிய எந்த மாதிரியான சோதனைகள் பின்பற்றப்படும் என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. யார், எப்படி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை. எனவே மக்கள் நலனைக் காக்க, இவை குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக, நாம் ஒன்றிணைவோம். இந்த மனுவில் கையெழுத்திடுவோம்” என்று தனது பதிவில் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் இந்தப் பதிவுக்கு இணையத்தில் ஏராளமானோர் ஆதரவு தெரிவிப்பதுடன், கையெழுத்திட்டும் வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE