ஈரோடு: பவானிசாகர் முதல் பவானி கூடுதுறை வரை நகராட்சி, பேரூராட்சிகளின் கழிவுகள் மற்றும் காகித, சாய ஆலைக்கழிகளால் பவானி ஆறு தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இதனால், பவானி ஆற்றில் ஆகாயத்தாமரை, ஊணாங்கொடி உள்ளிட்ட தாவரங்கள் வளர்ந்து பவானி கூடுதுறையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, காவிரியுடன் சங்கமிக்கும் பவானி கூடுதுறை வரை 70 கிமீ தூரம், ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு பயணிக்கிறது. சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளைக் கடக்கும் போது, பாசனத்துக்குத் தேவையான நீரையும், கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கான நீரையும் பவானி வாரி வழங்குகிறது. லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக, குடிநீர் ஆதாரமாய் விளங்கும் பவானி ஆறு, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குப்பைகளால் மாசடைந்துள்ளது.
உள்ளாட்சிகளின் கழிவுநீர் - இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் காகித ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தொடர்ந்து பவானி ஆற்றில் கலக்கிறது. இத்துடன், சத்தியமங்கலம்,கோபி நகராட்சி மற்றும் 15-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சாக்கடை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் பவானி ஆற்றில் கலக்கின்றன. சில இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், அவை முழுமையாக இயங்குவதில்லை.
இத்துடன் பவானி ஆற்றின் கரையோரம் உள்ளாட்சி அமைப்பினர் குப்பைகளைக் கொட்டி குவித்து வைக்கின்றனர். இந்த குப்பைகள் பவானி ஆற்றில் கலந்து வருகிறது. கங்கை போல தொடர் நீர் ஓட்டம் கொண்ட ஆறாக பவானியோ, காவிரியோ இல்லை. இந்நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து குறைந்த அளவு நீர் திறக்கப்படும் காலங்களிலும், வறட்சி காலங்களிலும் பவானி ஆற்றில் கழிவுநீர் மட்டுமே ஓடுகிறது. இவற்றையே சுத்திகரித்து குடிநீராக கொடுக்கும் அவலமும் நடந்து வருகிறது.
பக்தர்கள் ஏமாற்றம்: பவானி ஆறு காவிரியுடன் சங்கமிக்கும் பவானி கூடுதுறை புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக உள்ளது. காவிரி, பவானியுடன் சரஸ்வதி நதியும் சந்திக்கும் கூடுதுறையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் நீராடி, சங்கமேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு பவானி நகரின் ஒரு பகுதி கழிவு நீர் பவானி ஆற்றிலும், மறு பகுதி கழிவுநீர் காவிரி ஆற்றிலும் கலந்து வருகிறது. பவானிசாகர் முதல் பவானி வரையிலான கழிவுகளால், ஆகாயத்தாமரை, ஊணாங்கொடி போன்ற தாவரங்கள் கூடுதுறையை ஆக்கிரமித்துள்ளன. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஆகாயத்தாமரை படர்ந்த பவானி கூடுதுறையில் குளிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
கொடிவேரியிலும் பாதிப்பு: இதேபோல, அரசூர் பெரியகொடிவேரி கழிவுநீரால், கொடிவேரி அணைக்கட்டுப் பகுதி முழுவதும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. கொடிவேரி அணையில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர். தற்போது, பவானியில் காலிங்கராயன் அணைக்கட்டில் தொடங்கி கூடுதுறை வரை ஆற்றின் நீரோட்டமே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. பருவமழைக் காலங்களில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், ஆகாயத்தாமரையால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டு, பவானி நகருக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, சத்தியமங்கலம், கோபி மற்றும் பவானி பகுதியில் வெள்ளம் புகுந்து 600-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்தன. அப்போது, பவானி ஆற்றின் பழைய பாலம் பகுதியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் தாமதமாக ஈடுபட்டனர். இந்த முறை பருவமழைக்கு முன்பாக பவானி ஆறு, கொடிவேரி தடுப்பணை மற்றும் காவிரி ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான், வெள்ளப்பெருக்கு காலத்தில் ஆற்றின் நீரோட்டம் தடையின்று செல்லும். இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமேஸ்வரரை வழிபட வரும் நிலையில், தென்னகத்தின் காசி என போற்றப்படும் பவானி கூடுதுறையில் அவர்கள் நீராடி, வழிபாடு செய்ய வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பவானிக்கு வரும் பக்தர்கள் நலன்கருதி, இரு ஆண்டுகளுக்கு முன்பு, சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையினர் கூடுதுறை பகுதியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியைக் கூட மாவட்ட நிர்வாகமும், நீர்வளத்துறையினரும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள்.
நீர் நிலையின் போக்கை மாற்றும் ஆகாயத்தாமரை: ஆகாயத்தாமரையின் தீமை குறித்து தாவரவியல் பேராசிரியர்கள் கூறும்போது, ‘ஆகாயத்தாமரை தண்ணீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால், நீர் நிலையில் நீரின் அளவும், ஆக்ஸிஜனின் அளவும் குறையும். நீர் நிலையில் வசிக்கும் மீன், நண்டு, தவளை உள்ளிட்ட உயிரினங்கள் பாதிப்படையும்.
சூரிய ஒளி நீரில் படாத அளவு ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பதால், இயற்கை வழியிலான நீர் நிலை சுழற்சி பாதிக்கப்படும். மேலும், நீர் நிலையின் வழித்தடத்தை மாற்றிவிடும் அபாயமும் உள்ளது. இந்த காரணங்களால், ஆகாயத்தாமரை என்பது அழிக்கப்பட வேண்டிய செடிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது’ என்றனர்.
பயன்பாட்டுக்கு வராத அரசின் திட்டம்: பவானி, காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் முந்தைய ஈரோடு ஆட்சியர் எஸ்.பிரபாகர் தீவிரம் காட்டினார். கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் மீது ஆட்சியர் காட்டிய கடுமையால், பவானி மற்றும் காவிரி ஆறு மாசடைவது சற்று குறைந்து காணப்பட்டது. இந்திய தொழிற் கூட்டமைப்பு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கான தீர்வு அமைப்பு மற்றும் ஒளிரும் ஈரோடு, ஈரோடை உள்ளிட்ட அமைப்புகளின் உதவியோடு கழிவுநீர் கலப்பதைத் தடுக்க பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன.
ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பவானி மற்றும் காவிரி கரையில் உள்ள நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதை தடுப்பதற்காக 56 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.140 கோடி செலவாகும் என மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, திட்டம் குறித்த கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.