ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

By கரு.முத்து

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இன்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனர்.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் நெல் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மழையால் பிழைப்பின்றி முடங்கிப் போயுள்ள விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சார்பாக தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், தமிழக அரசின் சார்பில் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து இன்று திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தென்காசி, குமரி ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியுள்ளது.

தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம், மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE