என் மகன்தான் என்னை உயர உயர பறக்க வைக்கிறான்!

By அஸ்வினி சிவலிங்கம்

தொட்டதுக்கு எல்லாம் போட்டோ ஷூட் நடத்திப் பணம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், தனித்துத் தெரிகிறார் தனசக்தி. சாமானிய மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலிகளையும் படம்பிடித்துப் போடும் கலைஞர்கள் மிகச் சொற்பமே. அவர்களில் ஒருவர்தான் தனசக்தி.

வயது நாற்பதைக் கடந்த சிங்கிள் மதர். எழுத்தாளர். அவர்களுக்கே உரித்தான வறுமை... இதுதான் தனசக்தியின் அடையாளம். இருந்தாலும் குடும்ப வன்முறை, உருவ கேலி ஆகியவற்றை எல்லாம் கடந்து, படைப்பாளியாகவும் புகைப்பட கலைஞராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் தனசக்தி

நாமக்கல் மாவட்டம், சந்தைப்பேட்டைப்புதூரில் லாரி டிரைவரின் மகளாகப் பிறந்தவர் தனசக்தி. வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட அந்த வீட்டில் தனசக்தியையும் சேர்த்து மொத்தம் 5 குழந்தைகள். தனசக்தி 2-வது மகள். படித்தது 10-ம் வகுப்பு தான். காசு பணம் இல்லாவிட்டாலும், காலகாலத்துல கட்டிக் குடுத்துடணும் என்ற அவசரத்தில், தனசக்திக்கு 14 வயதிருக்கும்போதே திருமணத்தை முடித்துவிட்டார்கள். 17 வயதில், இந்தப் பிள்ளை இன்னொரு பிள்ளைக்குத் தாய்!

தனது ஏரியா குழந்தைகளுடன்...

அவசரப்பட்டு கல்யாணம் முடித்த வாழ்க்கை, தனசக்திக்கு அத்தனை இனிக்கவில்லை. காரணம், கைபிடித்தவன் ஒரு குடிநோயாளி. படிக்கும் காலத்திலேயே சத்தான உணவுகள் கிடைக்காமல் அடிக்கடி நோய்வாய்ப்பட்ட தனசக்திக்கு, திருமணத்துக்குப் பிறகும் அதுவே தொடர்ந்தது. பெற்ற பிள்ளைக்குக்கூட சரியாக பால் கொடுக்க முடியாமல் இவர் அழுத நேரங்கள் அநேகம். இத்தனையும் கடந்து இன்றைக்கு கவனிக்கப்படும் நபராக, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தனசக்தி.

எப்படி அது சாத்தியமானது? அதுபற்றி அவரே பேசுகிறார். “கறுப்பா இருக்கே... தெக்கப் பல்லு... சின்ன வயதிலிருந்தே இதுமாதிரியான கேலி கிண்டல் பேச்சுகளை நான் நிறைய சந்திச்சிருக்கேன். படிச்சு முன்னுக்கு வந்துட்டா நம்மள யாரும் இப்படி கிண்டல் பண்ணமாட்டாங்கன்னு நம்பினேன். நான் நல்லா படிக்குறதால எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த மாமிக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவங்க வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். மாமி எந்த நேரமும் புத்தகமும் கையுமாதான் இருப்பாங்க. அவங்கள பார்த்துத்தான் நானும் புத்தகத்தை கையில் எடுக்க ஆரம்பிச்சேன். நாலாப்பு படிக்கும்போதே, அர்த்தமுள்ள இந்து மதத்தை அர்த்தம் புரியாமலே படிச்சு முடிச்சவ நான்.

கல்யாணத்துக்குப் பின்னால ரொம்ப கஷ்டப்பட்டேன். குடிகார புருஷன் கொண்டு வந்த வருமானம் பத்தாம நானும் வீட்டு வேலைக்குப் போனேன். அந்த வருமானத்துலயும் புத்தகம் வாங்க கொஞ்சத்த ஒதுக்கிருவேன். இதுக்கு நடுவுல விசு சாரோட அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில பேச ஒரு வாய்ப்புக் கிடைச்சுது. அதுக்குப் பின்னால பட்டிமன்றங்கள்ல பேச ஆரம்பிச்சேன். இதுக்கு நடுவுல, விபத்துல சிக்கி என்னோட முதுகுத் தண்டுவடத்துல பாதிப்பு ஆகிருச்சு. அதனால, பிரைவேட் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்த மகன் தமிழை, கவருமென்டு ஸ்கூலுக்கு மாத்த வேண்டியதாப் போச்சு. அப்பவும் என் கணவரால எந்த உதவியும் இல்ல. நாளுக்கு நாள் அவரோட டார்ச்சர் அதிகமானதால திருமண வாழ்க்கையே வேண்டாம்னுட்டு, மகனைக் கூட்டிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

தனசக்தி

என் மகன்தான் எனக்கு ஃபேஸ்புக் கணக்கு ஓபன் பண்ணி கொடுத்து, அதுல என்னோட எண்ணங்கள எழுத வெச்சான். அதன் மூலமா நட்பு வட்டம் விரிவாச்சு. ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமா எனக்கு மருத்துவம் பார்க்க உதவிகளும் கிடைச்சது. இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், என் மகனுடைய படிப்புச் செலவை ஏத்துக்கிட்டாங்க. தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஹாஸ்டல் ஃபீஸ், சாப்பாட்டுச் செலவை ஏத்துக்கிட்டாங்க.

கணவரைப் பிரிஞ்ச பிறகு தான் தீவிரமா எழுத ஆரம்பிச்சேன். பெண்ணியம், சாதி மறுப்பு, பால் சமத்துவம்னு என் எழுத்துகள் வழியா அரசியலைப் பேசினேன். நான் எழுத ஆரம்பிச்சது பெண்ணியம் சார்ந்த சித்தாந்தத்தில் தான். நான் பட்ட துயரங்கள் மட்டுமல்லாது, என்னைச் சுற்றிய என் சகோதரி உள்ளிட்டோர் சந்தித்த வாழ்க்கை அனுபவங்களும்தான் என் எழுத்துகளுக்கு உரம்.

தடிமனான உடம்பு, தெக்கப் பல், கறுத்த நிறம், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள்... இப்படியான மக்கள் அனைவரையும் என் கவிதைகளில் ‘பியூலா’ என்றுதான் குறிப்பிடுவேன்.

என்முடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘வாளிப்பற்ற உடல்காரி’. குட்டி ரேவதி தான் அதை வெளியிட்டாங்க. அதுக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதும் கிடைச்சது. விருது கிடைக்கும்னு கொஞ்சம்கூட எதிர்ப்பார்க்கல. ஆனா, அந்த விருதுதான் என்னோட எழுத்துக்கு அஸ்திவாரம். அதுதான் என்னை முடங்கிப்போகாம இன்னமும் எழுத வெச்சிட்டு இருக்கு. அடுத்தடுத்த வருடங்கள்ல 3 புத்தகங்கள் எழுதினேன்.

எழுத்துகளை காட்சி (சினிமா) வடிவமாக்கணும்னு ஜெயகாந்தன் மாதிரி எனக்கும் ஒரு ஆசை. பழனிக்குமார்னு ஒரு புகைப்படக் கலைஞர், மலக்குழியில இறங்கி வேலை பாக்குறவங்கள போட்டோ எடுத்து பதிவிட்டிருந்தார். அதுக்கு விருதுகூட கிடைச்சது. அந்தப் புகைப்படங்கள் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு. ஒரு கேமேராவுக்கு இவ்வளவு சக்தி இருக்கான்னு ஆச்சரியப்பட்டேன். அப்பத்தான் எனக்கும் புகைப்படக் கலை மீதான ஆர்வம் வந்துச்சு.

பழனிக்குமார் தந்த தகவல் மூலமா, பெண்களுக்கான ஓராண்டு திரைப்பட உருவாக்க பயிற்சியில் சேர்ந்தேன். கேமரா அனுப்பி வெச்சு, ஆன்லைன் கிளாஸ் எடுத்தாங்க. சென்னையில வொர்க் ஷாப் வெச்சு எடிட்டிங் சொல்லிக் கொடுத்தாங்க. எப்படி தேடித் தேடி புத்தகங்களைப் படிச்சேனோ... அதே மாதிரி, எங்க தெரு முழுக்க சுற்றி போட்டோக்கள் எடுத்தேன். இதைக் கவனிச்ச ஒரு அம்மா, தன் பொண்ணு கல்யாணத்துக்கு போட்டோ எடுக்க கூப்பிட்டாங்க. வீட்டு வேலை செய்யுற அந்தப் பெண்ணின் கல்யாணத்துக்கு போட்டோ ஷூட் பண்ணேன். அதுக்கு அவங்களா விரும்பிக் கொடுத்த சன்மானம் 200 ரூபாய். அது எனக்குப் பெரிய அங்கீகாரம்.

நாம் படித்த இந்தப் புகைப்படக் கலையை நம்மள மாதிரி இருக்க ஏழைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தான் கொண்டு சேர்க்கணும்னு முடிவுபண்ணேன். நண்பர்கள் வட்டத்தில் உயரம் குறைந்த ஒரு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு திருமணம் நடந்துச்சு. அதுக்கு நானே போய் போட்டோ ஷூட் எடுத்து ஆல்பமும் போட்டுக் கொடுத்தேன். அப்புறம், தீ விபத்துக்குள்ளான ஒரு பெண்ணுக்கு போட்ரேட் போட்டோ எடுத்துக் கொடுத்தேன். கைம்பெண்களோட வாழ்வியல புகைப்படங்கள் எடுத்து டாக்குமென்ட்ரி பண்ணிருக்கேன். போன வாரம் ‘கனவு ஃபெலோஷிப்’போட புகைப்படங்கள் சென்னை தக்‌ஷன்சித்ராவில் காட்சிக்கு வைக்கப்பட்டுச்சு. எனது புகைப்படங்கள்தான் முகப்பில் இருந்துச்சு. ஊடாக, ஒரு நாவலும் எழுதிட்டு இருக்கேன்” என்று மூச்சுவிடாமல் தனது முழுக்கதையையும் சொல்லிமுடித்த தனசக்தி,

“வறுமைச் சூழலில் நாலு சுவத்துக்குள்ள அடிதடி வசைகளோட தான் படிச்சேன், எழுதினேன். இப்போ புகைப்படக் கலையையும் கத்துக்கிட்டேன். என்னோட புறச்சூழல், கலை மீதான என்னோட ஆர்வத்தை எந்தவிதத்திலும் பாதிக்கல. புறச்சூழல் என்னை பண்படுத்திருக்குன்னு கூட சொல்லலாம். எழுத்தும், போட்டோகிராஃபியும் இப்ப எனக்கு பாதுகாப்பு உணர்வைத் தருது. என் மகன் இல்லைன்னா என்னுடைய இந்தப் பயணம் எப்போதோ முடிந்திருக்கும்.

`நீ எதற்காகவும் உன் சுயத்தை இழந்துடாத. நீ விருப்பப்பட்டதை தைரியமா பண்ணுமா’ன்னு என்னை ஊக்குவிச்சுக்கிட்டே இருப்பது என் மகன்தான். சுருக்கமா சொல்லணும்னா என் கைகளைப் புடிச்சு, அவன்தான் என்னை உயர உயர பறக்க வைக்கிறான்” என்று எனக்கு விடைகொடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE