லென்ஸ் சிமிட்டும் நேரம் - 28

By வனிலா பாலாஜி

சித்திரை திருவிழாவின்போது மதுரைக்குப் போனால், மாநகரத்து வீதிகளில் கலவையான பல முகங்களைக் கண்டு ரசிக்கலாம். எனக்கு சொந்த ஊரே அதுதான் என்பதால், அப்படியான பல மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். அத்தனை முகங்களுக்குப் பின்னாலும் நிச்சயம் ஒரு கதை இருக்கும். அப்படி ஒரு வருடத்தின் சித்திரைத் திருவிழாவில் நான் பார்த்து ரசித்த முகங்களை இந்த அத்தியாயத்தில் உங்கள் பார்வைக்குக் காட்சிக்குத் தருகிறேன்.

சித்திரைத் திருவிழா நடக்கும் நாட்களில் தினமும் இரவில் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி அம்மன் வீதி உலா வரும். அப்போது அம்மனுக்கு முன்னால் குட்டிக் குட்டி அம்மன்கள் வேஷம்கட்டி வலம் வரும் காட்சி அத்தனை அழகாய் இருக்கும்.

ராமன், அனுமன், குட்டிக் குட்டிக் கருப்பண்ண சாமிகள், கலர்மிட்டாய்க்காரர்கள் என பலதரப்பட்ட முகங்களை எனது கேமராவில் படங்கள் எடுத்துத் தள்ளிவிட்டேன். சிறுபிராயத்தில் கலர் மிட்டாயை நாக்கு சிவப்பதற்காகவே வாங்கிச் சாப்பிடுவோம். திருவிழா சமயத்தில் மட்டுமே கிடைக்கும் ஸ்பெஷல் அய்ட்டம் அது.

தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண்பதற்காக கள்ளழகர் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வருவார். அப்போது அவருக்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக பக்தர்கள், அவரின் மேல் தண்ணீர் பீய்ச்சி அடிப்பார்கள். அந்த தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ள அவர்கள் பயன்படுத்துவது ஆட்டுத் தோலினால் ஆன தோல் பைகளைத்தான். இந்த ஆல்பத்தில் இருக்கும் பெண்மணி தோல்பை தைப்பதற்கான ஆட்டுத் தோலைத்தான் விற்கிறார்.

என்ன மக்காஸ்… சித்திரைத் திருவிழா என்று சொல்லிவிட்டு சாமி படம் ஒன்றுகூட இல்லையே என்று கேட்கிறீர்களா? சாமி படங்களை எடுப்பதை விட இம்மாதிரியான சாதாரண மக்கள், திருவிழாவை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதைப் படம் எடுக்கவே நான் அந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் தெருக்களில் நடந்து திரிந்தேன். அதனால் அவர்களை மட்டுமே தேடித் தேடிப் படம் பிடித்தேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE