விஷயம் நம்பளுக்குள்ர இருக்கட்டும்..!

By ரிஷபன்

ஒரு வாரம் ஆபிஸ் டூர் முடிச்சுட்டு அசந்துபோய் வீட்டுக்குள்ர வந்தப்போ, கீழ் வீட்டு அம்மிணி பயபக்தியா தலையாட்டிக்கிட்டே இறங்கிப் போனாங்க. எங்க அம்மிணி சொன்னது கேட்டுச்சு. "நாதான் சொல்றேன்ல... தைரியமா போ".

என்னைப் பார்த்ததும் உள்ளார திரும்பி மகனாரக் கெத்தா பார்த்தாங்க. "பார்த்தியா... ஒங்கப்பா இன்னிக்கு வருவார்னு சொன்னேன்ல."

எனக்குப் புரியல. "என்ன சொல்ற...”

அம்மிணி சொன்னாங்க. “நாலு நாள்னு சொல்லிட்டுப் போனீங்க. முன்னப்பின்ன ஆவலாம்னும் சொன்னீங்க. சனிக்கிழமை காலைல வந்துருவார்னு இவன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன். கரெக்டா நடந்துருச்சு.”

மகனாரைப் பார்த்தேன். அவன் கண்ணுல ஒரு பீதி தெரிஞ்சுது. அப்புறம் விசாரிச்சுக்கலாம்னு பயண அலுப்புல விட்டுட்டேன்.

மதியம் ரெண்டு மணிக்கு காலிங் பெல் அடிச்சுது. அம்மிணி கெத்தா சொன்னாங்க. “போய் கதவைத் தொறங்க. கூரியர் வந்துருக்கு.”

போனா, கூரியர்காரரே தான். கையெழுத்துப் போட்டு வாங்கிட்டு வந்தேன். அம்மிணி முகத்துல ஒரு பல்ப் வெளிச்சம். “எப்படி... கரெக்டா சொன்னேனா.”

“இதுல என்ன ஆச்சரியம். நமக்கு கூரியர் வரும்போதெல்லாம் ரெண்டு மணிக்குத் தானே வழக்கமா அவரு வராரு”னு அலட்சியமா சொன்னேன்.

“இது மட்டும் இல்ல. இப்பல்லாம் எனக்கு பின்னாடி நடக்கப் போவது முன்னாடியே தெரிஞ்சிருது” இதைச் சொன்னப்போ அம்மிணிக்கு நாலஞ்சு கை தலை எல்லாம் முளைச்சாப்ல ஒரு லுக் விட்டாங்க.

“அப்படியா... நைட் சாப்பாடு என்னன்னு சொல்லு பார்க்கலாம்”னு சிரிப்பை அடக்கிட்டு பவ்வியமா கேட்டேன்.

வழக்கமா எட்டரை மணிக்குக் கேட்டாலே என்ன சமைக்கிறதுன்னு புரியலம்பாங்க. எனக்கோ அன்னைக்குத்தான் பசி பிய்ச்சு எடுக்கும். அப்புறம் ஒம்பது மணிக்கு எதையோ தட்டுல சொத்துன்னு போடுவாங்க. “அவசரத்துல ஆக்கினது, அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க இன்னிக்கு ஒரு நாள்”னு சொல்லிருவாங்க.

“இதுக்குத்தான் ஒங்ககிட்ட எதையுமே சொல்றதில்ல. எ வீ அம்மிணி புலம்பிக்கிட்டு இருந்தாங்க. ஏதோ பணம் கிரெடிட் ஆவலன்னு. டக்குனு என் மைண்ட்ல ஒரு வாய்ஸ். இன்னிக்கு ஆயிரும்னு சொல்லுன்னு. சொன்னேன். அரை மணில மெசெஜ். ஆயிருச்சுன்னு”

விட்டா அம்மிணி எ வீ அம்மிணியைக் கூட்டிக்கிட்டு வந்து வாக்குமூலம் கொடுக்கச் சொல்வாங்க போல இருந்துச்சு.

ரெண்டு நாள் பேங்க் ஸ்ட்ரைக், ரெண்டு லீவு நாள். அது முடிஞ்ச உடனே பணம் வந்துருச்சுன்னு சொன்னா வசவு வாங்குவேன்னு தோணுச்சு.

“ஒங்க மகனார் சொன்னா நம்புவீங்களா. அவனுக்கே இப்படி ஒண்ணு சொன்னேன்”னு அவனை இழுத்தாங்க.

எதுக்கு வம்புன்னு, “சரி சரி நம்புறேன்”னு சொல்லிட்டேன். வாய்ல வாஸ்து சரியில்ல அப்போ. “எனக்கு எதுனாச்சும் சொல்லு. நடக்குதான்னு பார்க்கிறேன்”னு சொல்லவும் கடுப்பாயிட்டாங்க.

“நம்பிக்கையா கேட்டா சொல்லலாம். நக்கல் கேலிக்கெல்லாம் சொல்ல மாட்டேன்”னாங்க.

மகனார் தனியா மாட்டுனப்போ விசாரிச்சேன். “என்ன இது புதுக் கூத்து. என்னவோ பவர் வந்துட்டாப்ல பேசுறா”ன்னு.

மகனார் கம்னு இருக்கவும் “உனக்கும் ஏதோ சொன்னா மாதிரி... நடந்துச்சா”ன்னு டவுட்டா கேட்டேன். “ஆமா”ன்னு சீரியசா சொன்னாரு.

“ஏய், என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே”ன்னு கேக்கும்போதே நைசா எந்திரிச்சுப் போயிட்டாரு.

கதவுக்குப் பின்னாடிலேர்ந்து அம்மிணி வந்தாங்க.

“இப்பவாச்சும் நம்புறீங்களா”ன்னு மிரட்டவும் முழிச்சேன். “ஒங்களுக்கே தெரியும். எனக்கு கொய்யாப் பழம்னா பிடிக்கும்னு. நம்ம வீதில என்னிக்காச்சும் வந்துருக்கா. கடை வீதி போனாத்தான் வாங்கலாம். நீங்க டூர் போயிருந்தப்போ கொய்யா சாப்பிடணும் போல இருக்குன்னு இவன்கிட்ட சொன்னேன். அடுத்த அரை மணில வாசல்ல சத்தம். ‘கொய்யா... கொய்யா’ன்னு. என்னடா வந்துச்சா இல்லியா”ன்னு மகனாரைப் பார்த்தாங்க.

அவனை ஏதோ பொண்ணு பார்க்க வந்தாப்ல, தலையைக் குனிஞ்சுக்கிட்டு நின்னான்.

“சரி. ஒங்ககூட எதுக்கு வெட்டிப் பேச்சு. ஒரு வாரமா கோயிலுக்கே போவல. வீட்டைப் பூட்டிக்கிட்டு போக முடியாதுன்னு. இன்னிக்காச்சும் போறேன்”னு சொல்லிட்டு ரெப்ரெஷ் செய்யப் போனாங்க.

“அம்மிணி”ன்னு வாசல்ல குரல் கேட்டுச்சு. அடுத்த ப்ளாக் அம்மிணி நின்னாங்க.

“இந்தா”ன்னு நீட்டுன கையில பூ, குங்குமம். “கோயிலுக்குப் போனேன். என்னவோ உனக்கும் கொடுக்கத் தோணுச்சு.”

அம்மிணி திரும்பி, “இப்ப என்ன சொல்றீங்க”ன்னு என்னைப் பார்த்தாங்க.

அடுத்த ப்ளாக் அம்மிணி சொன்னாங்க. “நேத்து சொன்னீல்ல. அவரு ஊருக்குப் போயிருக்காரு. வந்த பிறகுதான் கோயிலுக்குப் போக முடியும்னு. அதான் கொண்டு வந்தேன்”னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

எங்க அம்மிணி சமாளிச்சாங்க. “இருந்தாலும் நான் சொல்லவும் அவங்க வரவும் டைமிங் சரியா இருந்துச்சுல்ல.”

எப்படியோ அம்மிணி ஹேப்பியா இருந்தா சரின்னு விடலாம்னு பார்த்தா, நாலு நாளைக்கு ஒருக்க இப்படி எதுனாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கவும் கவலை வந்துருச்சு.

என்னோட டாக்டர் ஃபிரெண்டுக்கிட்ட அம்மிணிக்குன்னு சொல்லாம லைட்டா விசாரிச்சேன்.

“சில சமயம் அப்படித்தான் நடக்கும். ஆனா அதுக்காவ எப்பவும் அதையே சொல்லிக்கிட்டிருந்தா மன வியாதி ஆயிரும். வேணும்னா எனக்குத் தெரிஞ்ச மனோதத்துவ டாக்டர்ட்ட போகச் சொல்லு”ன்னாரு.

டெய்லி அவரே இதைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சார். “அந்த டாக்டர் நம்பர் தரவா”ன்னு.

இது ஏதுரா அம்மிணிக்கிட்ட தப்பி டாக்டர்கிட்ட மாட்டிக்கிட்டோம்னு தோணுச்சு. “இப்பல்லாம் அம்மிணி எதுவும் சொல்லல”ன்னு மழுப்பிட்டேன்.

ஆபிஸ்ல இதைப் பத்தி பேசவும் பயம். பேசாம இருக்கவும் முடியல. ரொம்ப நம்பிக்கையா ஒரு ஃபிரெண்டுக்கிட்ட சொல்லித் தொலைச்சுட்டேன். முழுசா கேட்டுட்டு அவரு எதுவும் சொல்லாமப் போகவும் நடுக்கம் வந்துருச்சு. புண்ணியவான் ஆபிஸ் முழுக்க நியூஸை பரப்பிருவானோன்னு.

அப்புறம் நான் தனியா இருக்கிற நேரம் வந்தான். நாணிக் கோணி கிட்டே என் காதுல வந்து ஓதுனான்.

“ஒரு ஒதவி செய்வியா. இந்த வருசமாச்சும் எனக்கு புரொமோஷன் வருமான்னு அண்ணிக்கிட்ட கேட்டுச் சொல்லு. விஷயம் நம்பளுக்குள்ர இருக்கட்டும்.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE