“மோடி பிரதமர், டாடி முதல்வர் அதனால...”

By சானா

ஸ்விகியில் ஆர்டர் செய்து வாங்கிய ஸ்வீட்களைப் புசித்தவாறே புத்தாண்டு கொண்டாடிக்கொண்டிருந்தான் பாச்சா. “ஊரு பூரா அதிகனமழை பெய்ஞ்சு அவஸ்தைப்பட்டுட்டு கிடக்கு. நீ சின்னப்புள்ள மாதிரி செலிப்ரேஷன் மூடுலேயே இருக்கியே?” என்று சிடுசிடுப்பாகக் கேட்டு, அவனது சிறு சந்தோஷத்தைச் சிதைத்தது பறக்கும் பைக். “கனமழை வர்றதையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிஸ்டம் இருக்கறப்போ கஷ்டத்துக்கா குறைச்சல். அதுக்காக கஸ்டத்தை (!) விடமுடியுமா?” என்றபடியே காஜு அல்வாவைக் கபளீகரம் செய்தான் பாச்சா.

“வரவர வாய் அடங்க மாட்டேங்குது உனக்கு. வம்பை விலை குடுத்து வாங்குனாலும் பரவால்லை. கடன் குடுத்து வாங்குறே. உன்கூட ‘கடனே’ன்னு வர வேண்டியிருக்கு” என்று கடன் கடனென்று பேசிக்கொண்டேபோனது பைக். பேட்டியை யாரிடமிருந்து தொடங்குவது எனும் ஐடியாவைத் தந்த பறக்கும் பைக்கைப் பாராட்டிவிட்டு அன்றைய பணிக்கு ஆயத்தமானான் பாச்சா.

கரெக்ட்! உங்கள் கணிப்பு சரிதான். உதயநிதிதான் முதலாமவர்!

‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர்’, ‘அமைச்சர்’, ‘துணை முதல்வர்’, ‘பிரதமர்’, ‘ஐநா பொதுச் செயலாளர்’, ‘செவ்வாய் கிரக இளைஞரணிச் செயலாளர்’ எனப் பல்வேறு பதவிகள் எழுதப்பட்ட பலகைகள் உதயநிதியின் அணுக்க அமைச்சர்களின் ஆர்வத்தின் பேரில் தயாராகி அவரது இல்லத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டே வந்த பறக்கும் பைக், “எத்தன..!” என்று வைகைப் புயல் பாணியில் சைகை செய்தது. “அடங்குடா” என பைக்கை அதட்டிவிட்டு, உதயநிதிக்காகக் காந்திருந்தான் பாச்சா.

“தம்பி நடக்கிற அழகுக்கு நாடாளுமன்றத்துலேயே இடம் குடுக்கலாம்” என்று ஒரு அமைச்சர் சொல்ல, மற்றவர்கள் வாய்நிறைய வழிமொழிய, அதையெல்லாம் கேட்டுக்கொள்ளாத பாவனையில் கெத்தாக வந்தமர்ந்தார் உதயதிநிதி.

“நீங்க, ‘இப்படி ஏமாத்திட்டீங்களே’ன்னு கோவை மக்களைப் பார்த்து கேட்டுட்டு இருக்கீங்க. ஆனா, தமிழ்நாட்டுல கோபமா ஏகப்பட்ட பேர் அதே கேள்வியை உங்ககிட்ட கேட்கிறாங்க தெரியுமா?” என்று எடுத்த எடுப்பில் ஏட்டிக்குப் பேட்டியை(!) ஆரம்பித்தான் பாச்சா.

“எது... நகைக்கடன் தள்ளுபடி மேட்டரா? இதென்னப்பா... இது எல்லாம் ஒரு மேட்டரா? எங்களுக்கு ஓட்டுப் போடுங்கன்னுகூடதான் கோவை மக்களையும் கேட்டேன். அவங்க என் பேச்சைக் கேட்கலைல்ல? அந்த மாதிரி...” என்று தொடர்ந்து பேசப்போன உதயநிதியிடம் குறுக்கிட்ட பாச்சா, “தலைவருக்குத் துணையா இருக்கணும்னு விரும்புறதா சொல்லியிருக்கீங்களே... தலைவர் முதல்வரா இருக்கார். அப்படீன்னா நீங்க துணை முதல்வராகலாம்னு ஆசைப்படுறீங்க. அப்படித்தானே?” என்றான்.

உடனே, “ம் சொல்லுங்க தம்பி... ம்ஹூம் சொல்லாதீங்க தம்பி” என்று சீனியர் அமைச்சர்கள் சிணுங்க, ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்பிரதா கணக்காக ஆமாவா இல்லையா என அறிந்துகொள்ள முடியாத வகையில் தலையசைத்தார் தலைவர் மகன்.

“பொங்கல் வைக்க மோடி தமிழ்நாடு வர்றப்போ ‘கோ பேக் மோடி’ன்னு திமுக ட்ரெண்ட் பண்ணுமான்னு நெட்டிசன்ஸ் நெம்பியெடுக்கிறாங்க. வர்றவர் உங்ககிட்ட எய்ம்ஸ் செங்கல்லைக் கேட்டா என்ன சார் செய்வீங்க?” என்றான் பாச்சா.

“மோடி பிரதமர், டாடி முதல்வர். அதனால அது அரசு விழாவாத்தான் இருக்கும். அரசல்புரசலாப் பேசுறதையெல்லாம் வச்சு உரசலை ஏற்படுத்தாதீங்க” என்றார் உதயநிதி.

“மகளிரணி விஷயத்துல அத்தை கனிமொழிகூட பிரச்சினைன்னு...” என்று கேட்ட பாச்சாவை உற்றுப் பார்த்த உதயநிதி, “திமுக மொத்தமும் ஒரே குடும்பம்தான். தொண்டர்களே குடும்பம்தான்ங்கிறப்போ எங்களுக்குள்ள என்ன பிரச்சினை வந்துடப்போகுது?” என்று சிரித்தார் உதயநிதி.

“டான்ஸும் தெரியாதுன்னு ஆர்ஆர்ஆர் விழாவுல பேசியிருக்கீங்க. நடிக்கத் தெரியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க சார். செம்மையா நடிக்கிறீங்க” என்ற பாச்சாவின் வார்த்தைகளைப் பாராட்டாக எடுத்துக்கொண்டு உதயநிதி உவகை அடைந்த கணத்தில், பாச்சாவும் பைக்கும் எஸ்கேப்பானார்கள்.

அடுத்து அன்புமணி.

‘அமெரிக்காவின் திட்டங்களில் அன்புமணி கொடுத்த ஐடியாக்களின் சாயல்’, ‘மாஸ்கோவில் மாம்பழ மகசூலை அதிகரிக்க அன்புடன் வழங்கப்பட்ட மணியான திட்டங்கள்’ எனப் பல்வேறு தலைப்புகளில் பாமகவினர் திகுதிகுவென தீசிஸ் எழுதிக்கொண்டுவந்து அன்புமணியைச் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தனர்.

வெளியிலிருந்து வேகமாக உள்ளே சென்ற அன்புமணி, அவர்களைவிட ஆவலாக அவற்றை வாங்கிக்கொண்டு விறுவிறுவென நடைபோட்டார்.

அவர் கூடவே குறுக்குமறுக்காக ஓடிய பாச்சா, “ராமதாஸ் ஒரு காலத்துல விட்ட அறிக்கைகள்ல இருந்த புள்ளிவிவரங்களை வச்சு, ராஜமௌலி பட ரேஞ்சுக்கு ‘ரமணா’வை ரீமேக் பண்ணலாம். ஆனா, இப்பெல்லாம், ‘ஒரு தரம் ஒரே தரம்’னு அவர் உங்களுக்காக வாய்ப்பு கேட்கிறதையெல்லாம் பார்த்தா ‘டாக்டர்’னு பேர் வச்சு டார்க் காமெடி படம் எடுத்த கதையால்ல இருக்கு?!” என்றான்.

சட்டென ஒரு பொசிஷனில் திரும்பி நின்றுகொண்ட அன்புமணி, “நல்லா புரிஞ்சுக்கோப்பா. எங்களுக்குப் பதவி ஆசை கிடையாது. எனக்கு முதல்வர் ஆசை கிடையாது. நாங்க சொன்ன திட்டத்தைத்தானே மத்தவங்க நிறைவேத்துறாங்க. அதனால, அந்தக் கையெழுத்தை மட்டும் போட்டுக்கிடலாமேனு ஒரு ஆதங்கம்; அவ்வளவுதான்” என்றார்.

“அதாவது ஸ்டாலினோ எடப்பாடியோ சிஎம்மா இருந்துக்கட்டும். சிக்னேச்சர் மட்டும் நீங்க போட்டுக்கிறீங்கன்னு சொல்றீங்களா?” என்று கேட்டான் பாச்சா.

“நான் உடைச்சே பேசுறேன். 32 வருஷமா ஓடிட்டு இருக்கிற கட்சியை எலெக்‌ஷன் நேரத்துல சல்லிசல்லியா உடைச்சிடுறாங்க. அதனால, எங்ககிட்ட ஆட்சியைக் குடுத்துடுங்கன்னு கேட்கிறோம். அது தப்பா? எத்தனை வருஷ உழைப்பு” என்று கலங்கிய குரலில் சொன்னவர், சட்டென கம்பீரக் குரலுக்கு மாறி, “எங்க கட்சியில இருக்கிற மாதிரி ஒரு சிஎம் கேண்டிடேட் வேற கட்சியில உண்டா? அவர் ஒபாமாவுக்கே யோசனை சொன்னவர். அவர் ஆட்சிக்கு வந்தா பட்ஜெட் செஷனுக்கே தனி பட்ஜெட் ஒதுக்குவார். அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தா, தண்ணியில்லாமலேயே விவசாயம் செய்ய தனிச் சட்டம் போடுவார்” எனத் தன்னிலையிலிருந்து விலகி, முன்னிலையில் நின்ற பாச்சாவிடம் படர்க்கையில் பேசத் தொடங்கினார்.

“அப்படி ஒருத்தர் உங்க கட்சியில இருக்காரா. யார் சார் அவர்?” என பாலிட்டிக்ஸ் புரியாத பறக்கும் பைக் கேட்டுவைக்க, மிரட்சியடைந்த பாச்சா, பின்னங்கால் பிடறியில் அடிக்க ‘மின்னல் முரளி’ கணக்காக ஓடி மறைந்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE