இல்லம் தேடி நூலகம் திட்டம் தாருங்கள்!

By என்.சுவாமிநாதன்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்னும் இளைஞர், இல்லம் தேடி நூலகம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். இப்போது அதற்கு அரசு தரப்பிலிருந்து சாதகமான பதில் வந்திருப்பதை அடுத்து, இல்லம் தேடி நூலகம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் நாஞ்சில் பிரபு.

நாஞ்சில் பிரபு

இதுகுறித்து நம்மிடம் பேசிய நாஞ்சில் பிரபு, “ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்... கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே’ என்பது போல் நூலகம் இல்லாத ஊர், அறிவுப் பஞ்சம் உள்ள ஊராக மாறிவிடும். அதனால் தான் ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும் போது நூறு சிறைச்சாலைகளின் கதவுகள் அடைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

நான் வசிக்கும் மணிக்கட்டிப் பொட்டல், சாதனை எழுத்தாளர் பொன்னீலனை தந்த கிராமம். எனக்கு சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பிரியம் அதிகம். எனது ஊரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மாவட்ட மைய நூலகம் சென்று வாசிப்பேன். ஆனால், இவ்வளவு தூரம் பயணித்துச் சென்று வாசிக்க எத்தனை பேர் மெனக்கிடுவார்கள்? இடையில் சின்னச் சின்ன நூலகங்கள் இருந்தாலும் நாம் தேர்வு செய்து படிக்கும் அளவுக்கு, மைய நூலகத்துக்கு இணையான புத்தகங்கள் அங்கு கிடப்பது இல்லை.

நகர் பகுதிகளிலும், வெகுசில கிராமங்களிலுமே நூலக வசதி உள்ளது. குக்கிராமங்களில் நூலக வசதியே இல்லை. சால்வைக்குப் பதில் புத்தகங்களை பெற்றுக்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, புத்தகத்தின் வலிமையும், பெருமையும் தெரியும் என்பதால் இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என்பதுபோல் இல்லம் தேடி நூலகம் என்னும் திட்டத்தை செயல்படுத்தக்கோரி மனு அனுப்பினேன். அந்த மனு, நூலகத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, ‘அரசு, இல்லம் தேடி நூலகம்’ திட்டத்தை அறிவிக்கும்போது செயல்படுத்தப்படும் என குமரி மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸிடம் இருந்து பதில் வந்துள்ளது.

தனியொரு நபராக நான் மட்டுமே குரல் கொடுத்தால் போதாது. இல்லம் தேடி நூலகம் திட்டத்தை செயல்படுத்தினால் ‘வாசிப்பு புரட்சி’யை ஏற்படுத்திய முன்னோடி மாநிலமாக தமிழகம் இருக்கும். இதுதொடர்பாக சட்டசபையிலும் எம்எல்ஏ-க்கள் கோரிக்கை வைக்க வேண்டும். இந்த இல்லம் தேடி நூலகம் திட்டத்தில் அந்தந்த பகுதிசார்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பதன் மூலம் அவர்களையும் அந்த மண்ணுக்குரிய மக்களின் மனதில் கொண்டுபோய் சேர்க்க முடியும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE