தலையெடுக்கும் பெண் சிசுக்கொலை: தடுக்க வருகிறது சிறப்புக் குழு

By காமதேனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் பெண் சிசுக் கொலை சம்பவம் தலைகாட்டியதை அடுத்து, அதுபோன்ற அவலங்கள் இனியும் அரங்கேறாது இருப்பதற்கான புதிய நடவடிக்கைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

உசிலம்பட்டி அருகிலுள்ள பெரிய கட்டளை கிராமத்தில் வசிப்பவர்கள் முத்துப்பாண்டி-கௌசல்யா தம்பதி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. அண்மையில் மூன்றாவதாக பிறந்த குழந்தையும் பெண்ணாக அமையவே, ஆறாவது நாளே அந்தக் குழந்தையை கொன்று வீட்டின் முன்பாக புதைத்துள்ளனர். தகவலறிந்த கிராம செவிலியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, முத்துப்பாண்டி குடும்பத்தினர் தலைமறைவானார்கள்.

பின்னர் வருவாய் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில், புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. தொடர்ந்து உடல் கூராய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே மதுரை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலைகளை தடுக்க சிறப்புக் குழு உருவாக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாவட்ட நிர்வாகம் உருவாக்கிய சிறப்புக் குழு குறித்து பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். அதன்படி, வருவாய், காவல்துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு என 10 துறைகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவினர் இதில் அடங்குவர். இவர்கள் மதுரை மாவட்டத்தில் பெண்சிசுக் கொலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிசுக் கொலைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை, இக்குழு மக்களிடம் கொண்டு செல்லும்.

இந்த சிறப்பு குழுவின் சேவைக்கு அப்பால், தொட்டில் குழந்தை திட்டம் குறித்தும் மதுரை மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வூட்டி உள்ளது. அதன்படி குழந்தைகளை பராமரிக்க முடியாத பெற்றோர்கள், தொட்டில் குழந்தை திட்டத்துக்கு குழந்தைகளை வழங்கலாம் என்றும், அதன் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பும், பராமரிப்பும் உறுதி செய்யப்படும்’ என்றும் ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE