லென்ஸ் சிமிட்டும் நேரம் - 27

By வனிலா பாலாஜி

ஒவ்வொரு முறையும் மதுரைக்குச் செல்வது, ஒன்று அம்மாவை பார்ப்பதற்காக இருக்கும் அல்லது ஏதாவது சொந்த பந்தங்களின் திருமண நிகழ்வுக்காக இருக்கும். ஆனால் இம்முறை, தொல்லியல் ஆய்வுகளால் பேசப்படும் கீழடிக்குச் செல்வதற்காக மதுரை சென்றோம்.

‘ஊர்க்குருவிகள்’ எனும் பயண அமைப்பு, ‘கீழடியை நோக்கி’ எனும் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதை அறிந்து நானும், பாலாஜியும் அந்தப் பயணத்தில் கலந்து கொண்டோம். எங்களோடு மகன் மதியும் ஒட்டிக்கொண்டது கூடுதல் மகிழ்ச்சி.

மதுரைக்கு அருகே. சிலைமானுக்கும் திருப்புவனத்துக்கும் இடையில் இருக்கிறது கீழடி கிராமம். இங்குதான், மதுரை மண்ணுக்குள் புதைந்து போயிருந்த ரகசியங்கள் மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வால் வெளிக் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. நம் மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு, தொல்பொருள் துறையினரால் நமக்கும் சாத்தியமாயிற்று.

இதுவரை தொல்லியல் ஆய்வுப் பணிகளை நேரில் கண்டதில்லை. கீழடியை நோக்கிப் பயணிக்கும்போது, ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எவ்வாறு ஓர் இடத்தை தேர்வு செய்கிறார்கள், எப்படிப் பொருட்களை சிதைக்காமல் வெளிக் கொண்டு வருகிறார்கள், எம்மாதிரியான வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் என எக்கச்சக்கமான கேள்விகள் எனக்குள்ளே எக்கோ அடித்தன. களத்தில் இதற்கான விடைகளும் கிடைத்தன.

பெரிய தென்னந்தோப்புக்கு நடுவில்தான் தொல்லியல் ஆய்வு நடக்கிறது. அங்கே பணியில் இருந்த தள மேற்பார்வையாளர் ரமேஷ், எங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். ஆய்வின் முதல்கட்டமாக, ஆற்றுப் படுகைகளை ஒட்டி உள்ள கிராமங்களில் வாழும் மக்களிடையே கேள்விகளைக் கேட்டு அதன்பிறகு படிப்படியாக, ஏதாவது ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில், அடுத்தகட்ட ஆய்வுக்குத் தேவையான இடத்தைத் தேர்வு செய்கின்றனர்.

தேர்வு செய்த நிலத்தில், நாளொன்றுக்கு 5 செமீ ஆழம் என்ற அளவில் மிகக் கவனமாக பூமியை அகழ்கின்றனர். அருகில் இருக்கும் கிராமங்களில் கட்டிட வேலை பார்ப்பவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறிது பயிற்சிகளையும் கொடுத்து அவர்களைக் கொண்டே இந்தப் பணிகளை மேற்கொள்வது இன்னும் சிறப்பு. இப்படி ஆரம்பித்த வேலைதான் பலகட்டங்களைக் கடந்து, கீழடியின் தொன்மையை இன்றைக்கு உலகறியச் செய்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் பழங்கால நாணயங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாழி, நடுகற்கள் போன்றவற்றையே அதிகம் கண்டுபிடித்து வந்துள்ளார்கள். மக்கள் வாழ்ந்த ஒரு நாகரிக நகரத்தையே அகழாய்வு செய்திருப்பது சமீபத்தில் கீழடி மட்டும் தான். இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறைகிணறு, சில வருடங்களுக்கு முன்புவரை நமது பயன்பாட்டில் இருந்த உறைகிணறுகளை ஒத்திருக்கின்றன.

ஆய்வு செய்த இடங்களை, கண்கள் விரியும் அளவுக்கு ஆச்சரியத்துடன் பார்த்து முடித்த பிறகு, தள மேற்பார்வையாளர் ரமேஷ், அகழாய்வில் கண்டெடுத்த பொருட்களை, மிகவும் சிரத்தையுடன் எடுத்துக் காண்பித்தார். ஒவ்வொரு பொருளும் அவ்வளவு அழகு. அக்காலத்து மக்கள் பயன்படுத்திய பானைகள், அப்பானைகளில் பொறிக்கப்பட்டுள்ள கோட்டோவியங்கள், அதில் தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்ட ‘திஸன்’ எனும் பெயரையும் வைத்து வணிகத்துக்காக மக்கள் வடக்கிலிருந்தும், ரோம் போன்ற நாடுகளிலிருந்தும் வந்திருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

சுட்ட களிமண்ணாலான அணிகலன்கள், தந்தத்தாலான பகடைகள், பெண்கள் காதுகளில் பாம்படம் அணிவதற்காக காது வளர்க்க உபயோகப்படுத்திய அணிகலன் ஆகிய அனைத்தும் கொள்ளை அழகு. விளையாட்டுப் பொருட்கள், அழகிய அணிகலன்கள் ஆகியவை ஓர் இடத்திலும், ஈட்டி போன்ற உலோகத்தாலான ஆயுதங்கள் மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றோர் இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டதால், அம்மக்களிடையே வர்க்க வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் கணிக்கின்றனர்.

இவை அனைத்தையும் பக்கத்து கிராமத்து குட்டிச் சுட்டிகளும் எங்களுடன் வந்த ரமேஷ் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அப்பொழுதுதான் அங்கு வந்து அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர் என நினைத்தேன். ஆனால், அப்புறம்தான் தெரிந்தது... ஒவ்வொரு முறையும் அவர்கள் அப்படித்தான் வருகிறார்கள் என்று.

இன்றைக்குப் பள்ளிகளில் இருக்கும் வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ரமேஷைப் போல திறமை வாய்ந்தவர்களாகவும் பொறுமைசாலிகளாகவும் இருந்தால், நம் பிள்ளைகள் ஏன் வரலாறு, புவியியல் பாடங்களை வெறுக்கப் போகிறார்கள்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE