பரோலில் வந்த நளினியை கட்டித் தழுவி கண்ணீர்விட்ட தாய் பத்மா!

By வி.எம்.மணிநாதன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருந்த நளினிக்கு ஒருமாத காலம் பரோல் விடுப்பு கிடைத்ததைத் தொடர்ந்து இன்று அவர் பரோலில் வெளி வந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாத தனது தாய் பத்மாவை கவனித்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லி பரோல் விடுப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் நளினி. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சம்மதம் தெரிவித்தது.

இதனையடுத்து, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து நளினி இன்று பரோலில் விடுவிக்கப்பட்டார். போலீஸார் அவரை பலத்த பாதுகாப்புடன் காட்பாடியை அடுத்த பிரம்ம்புரத்தில் வசிக்கும் தாய் பத்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது மகள் நளினியை அவரது தாயார் பத்மா கண்ணீர்மல்க கட்டித் தழுவி வரவேற்றார்.

நளினி பரோலில் இருக்கும் நாட்களில் அவரது வீட்டை 2 டிஎஸ்பி-க்கள் தலைமையில் சுழற்சி முறையில் ஐம்பது போலீஸார் ஆயுதம் தாங்கி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பரோலில் இருக்கும் நாட்களில் மீடியாக்களுக்கு எவ்வித பேட்டியும் கொடுக்கக் கூடாது. அரசியல் பிரமுகர்களைச் சந்திக்கக்கூடாது. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நளினிக்கு இந்த ப்ரோல் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE