ஒருவரின் திறமையை எவ்வளவு திரை போட்டாலும் மறைக்க முடியாது என்பதற்கு நல்ல உதாரணம் பாடகர் மாணிக்க விநாயகம். பாடுவதற்கு வயது பிரச்சினையில்லை என்பதை உணர்த்திக்காட்டியவர். தனது முதல் திரைப்பயணத்தை 58 வயதில்தான் தொடங்கினார். எனினும், அந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுடன், தமிழ்த் திரையிசை ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தையும் பெற்றுத் தந்தது!
மயிலாடுதுறையில் 1943 டிசம்பர் 10-ல் பிறந்தவர் மாணிக்க விநாயகம். அவரது தந்தை புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் பி. இராமையா பிள்ளை; தமிழ்த் திரையுலகை ஆட்டுவித்தவர்களை ஆட்டி வைத்தவர். பத்மினி, லலிதா, வைஜயந்திமாலா, ஈ.வி.சரோஜா, பத்மா சுப்ரமணியம், எல். விஜயலட்சுமி, குமாரி கமலா, கமலா இலக்சுமணன், கனகா சிறீனிவாசன், சுஜாதா விஜயராகவன், சித்ரா விசுவேசுவரன், கவிஞர் வாலியின் மனைவி ரமணத்திலகம் ஆகியோர் ராமையா பிள்ளையின் மாணவிகள்.
பரதநாட்டியம் என்பது சம்ஸ்கிருதமயமானது என்ற எண்ணியோருக்கு, ‘இல்லை, இல்லை அதிலும் தமிழ் பாடலை வழங்க முடியும்’ என நிரூபித்தவர். பாரதி பாடல்களை பிரிட்டிஷ் அரசு தடை செய்த காலத்தில் தனது மாணவர்களை அப்பாடலுக்கு ஆட வைத்த பெருமகன். அவரது இளைய மகன் தான் மாணிக்க விநாயகம். பிறப்பிலேயே இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறுவயதிலேயே பாட்டுக் கற்றுக்கொண்டவர். இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன் தான் அவருடைய இசைக்கு குரு.
மாணிக்க விநாயம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பக்திப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் என ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் தனித்த குரல் என்ற அடையாளத்தை அவரது குரல் பெற்றது. அவரது ஆகிருதிய குரல் விஜய், விக்ரம் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு டூயட் பாடலையும் பாடியுள்ளது. அவரது குரலுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஆட்டம் போடவைக்கும் பாடல்களை மட்டுமின்றி கண்ணீர் வரவழைக்கும் சோகத்தையும் தாங்கியது அவரது குரல். இதன் காரணமாக ஏராளமான திரைப்படங்களில்அவர் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அவரது முதல் பாட்டுப் பயணமே விக்ரமின் அற்புதமான டூயட் பாடலுடன் தொடங்கியது. 2001-ல் விக்ரம், லைலா நடிப்பில் வெளியான ‘தில்’ படத்தில் வித்யாசாகர் இசையில் ஒலித்த, ‘கண்ணுக்குள்ளே கெளுத்தி’ பாடலை மாணிக்க விநாயகம் பாடினார். அந்தப் பாடலில், ‘அத்த மக நெனப்பு வெத்தலைக்கு சிவப்பு’ என்ற சொல்லுக்குப் பின் அவர் கொடுக்கும் ஏற்றம் மிகுந்த ஹம்மிங் அப்படியே சொக்க வைக்கும்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயகாந்தின் கட்சிக்கூட்டங்களில் ஒலிக்கும் ஒரு பாடல், மாணிக்க விநாயகம் பாடியதுதான். 2001-ல் கே.ஆர். உதயசங்கர் இயக்கத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா நடிப்பில் வெளியான ‘தவசி’ படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. வித்யாசாகர் இசையில்,
ஏலே இமய மலை
எங்க ஊரு சாமி மலை
எட்டு திசை நடுங்க எட்டு
வச்சு வாராரு
எனும் அந்தப் பாடலில், யானையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஓசையைப் போல வித்யாசாகரின் இசைக்கு ஏற்ற வகையில் மாணிக்க விநாயகம் குரல் ஓங்கி ஒலிக்கும்.
2002-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பெபி மணி, ஏ.ஆர்.ரெஹானா ஆகியோருடன் மாணிக்க விநாயகம் பாடிய ‘விடை கொடு எங்கள் நாடே’ பாடல் புலம் பெயர்ந்த மக்களின் கண்ணீர் கதையை சொல்லும் வகையில் அமைந்தது.
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட்ட மாணிக்க விநாயகத்திற்கு தமிழ் சினிமாவில் ஜாலியான பாடல்கள் பல வழங்கப்பட்டுள்ளன. 2002-ல் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் வெளியான ‘ரன்’ படத்தில் அப்படியான பாடல் அவருக்கு கிடைத்தது. வித்யாசாகர் இசையில் கார்த்திக், திம்மியுடன் இணைந்து அவர் பாடிய அந்த அதகளப்பாடல்,
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
அந்தக் காலக்கட்டத்தில் மிகப் பிரபலமான பாடலாக இந்தப் பாடல் அமைந்தது. இப்படி ஜாலியான பாடல்களைப் பாடிய மாணிக்க விநாயகம், சட்டென, போதனை சொல்வது போல ஒரு பாடலைப் பாடி எல்லா இடங்களிலும் அந்த பாடல் ஹிட்டானது. 2002-ல் இசையமைப்பாளர் சிற்பிக்கு, தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றுத் தந்த படம் ‘உன்னை நினைத்து’. விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, லைலா, சினேகா நடித்த இப்படத்தில் கவிஞர் பா. விஜய் எழுதிய, ‘பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே’ பாடலை உன்னிகிருஷ்ணனுடன் இணைந்து மாணிக்க விநாயகம் பாடினார். இந்தப் பாடல் இளைஞர்களின் ரிங்டோனாக மாறியது.
இசையமைப்பாளர் வித்யாசாகரைப் போலவே இசையமைப்பாளர் பரத்வாஜும் தனது படங்களில் மாணிக்க விநாயகம் பாடுவதற்குத் தொடர்ந்து வாய்ப்பளித்துள்ளார். 2002-ல் நடிகர் ஸ்ரீகாந்திற்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கிய படம் ‘ரோஜாக்கூட்டம்’. பரத்வாஜ் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. நடிகர் ராகவா லாரன்ஸ் அப்போது படங்களில் தனிப்பாடல்களுக்கு ஆடிக்கொண்டிருந்த நேரம். அவருக்கு மாணிக்க விநாயகம் குரலில் ஒலித்த ‘சுப்பம்மா சுப்பம்மா’ பாடல் பெரும் ஹிட்டடித்தது. அவருடன் இணைந்து பாடியவர் மால்குடி சுபா. இந்த பாடல் தியேட்டரில் படம் பார்க்கும் இளசுகளை ஆட்டம் போட வைத்தது.
தெலுங்கில் இருந்து வந்து தமிழில் வெற்றி பெற்ற படம் ‘ஜெயம்’. 2002-ல் வெளியான இப்படத்தில் ஜெயம் ரவி, சதா, கோபிசந்த், ராஜீவ், பிரகதி, நிழல்கள் ரவி நடித்தனர். ஆர்.பி.பட்நாயக் இசையில் ‘கவிதையே தெரியுமா...’ பாடல் காதலர்கள் மத்தியில் பிரபலமானது. கவிஞர் அறிவுமதி எழுதிய இந்த பாடலை இசையமைப்பாளர் ஆர்.பி.பட்நாயக், ஹரணியோடு இணைந்து மாணிக்க விநாயகம் பாடினார்.
சாக்ஸபோன்கள் கசிந்துரும் இப்பாடலில் மாணிக்க விநாயகம் எங்கு வருகிறார் என்ற கேள்வி வரும். பாடலின் பல்லவிக்கு இடையே வரும்
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
- என்ற ஜதி அவர் பாடியதுதான்.
தஸ்தாயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுக’ளை அடிப்படையாகக் கொண்டு 2003-ல் ஜனநாதன் இயக்கிய படம் ‘இயற்கை’. இப்படத்தில் வித்யாசாகர் இசையில் திப்பு, மாணிக்க விநாயகம் பாடிய
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
- கேட்போரை கடல் அலை போல வாரிச்சுருட்டிக் கொள்ளும் பாடல். இப்பாடலின் பின் ஒலிக்கும் அழகிய ஹம்மிங் மாணிக்க விநாயகம் பாடியதுதான்.
மாணிக்க விநாயகம் பாடிய பாடல்களிலேயே மிகவும் புகழ்பெற்ற பாடல் ‘கொடுவா மீசை அறுவா பார்வை’ பாடலைச் சொல்லலாம். இவ்வளவு வேகமாகப் பாட முடியுமா என்று வியக்கும் வகையில் அவர் பாடிய பாடலிது. 2003-ல் தரணி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமா சென், விவேக் நடிப்பில் வெளியான படம் ‘தூள்’. வித்யாசாகர் இசையில் மாணிக்க விநாயகம், விதுபிரபாகர், பரவை முனியம்மா பாடிய இந்தப் பாடல், தமிழ் சினிமாவில் டிரெண்ட் செட்டான பாடல் என்று சொல்லலாம். கதாநாயகன் என்ட்ரிக்கு இப்படியான பல பாடல்கள் பின்னாளில் வந்தன. 2003-ல் இளங்கண்ணன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஒற்றன்’. இப்படத்திற்கு பிரவீன் மணி இசையமைத்தார். இப்படத்தில், ஸ்ரீலேகா பார்த்தசாரதியுடன் இணைந்து மாணிக்க விநாயகம் பாடிய ‘சின்ன வீடா வரட்டுமா? பெரிய வீடா வரட்டுமா’ பாடல் மேடை நடனக் கலைஞர்களின் ஃபேவரைட்.
இதே ஆண்டு கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சினேகா நடிப்பில் வெளிவந்த படம் ‘பார்த்திபன் கனவு’. வித்யாசாகர் இசையில் திப்பு, தேவன், மாணிக்க விநாயகம் பாடிய இளைஞர்களின் குதூகலப் பாடல்,
தீராத தம்மு வேண்டும்
திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேண்டும்...
இந்தப் பாடலில் நடிகர் விவேக்கிற்கு மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.
2004-ல் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘நியூ’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய
மார்கண்டேயா நீ வருவாயா
கும்பக்கோணம் சந்தையிலே
- கர்நாடக இசையில் நித்யஸ்ரீ மகாதேவன் குரலில் பாடல்களைக் கேட்டவர்களுக்கு இப்படி கிறக்கமூட்டும் குரலில் அவர் பாடிய பாடல் ஆச்சரியமான பரிசாகத்தான் இருக்கும். இந்தப் பாடலில்,
ஹே மேனியடி உந்தன் மேனியடி
மேளம் போலே மேனியடி
சொர்க்கம் போகும் ஏணிப்படி
சேலை கட்டி நிக்குதடி...
என மாணிக்க விநாயகம் ஹைபிட்சில் பாடியிருப்பார். இதே ஆண்டு விக்ரம், ஜோதிகா, விவேக் நடிப்பில் வெளியான படம்
‘அருள்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் திப்பு, ஸ்ரீராம், மாணிக்க விநாயகம் இணைந்து பாடிய பாடல் இப்படத்தில் இடம் பெற்றது.
புண்ணாக்குன்னு
சொன்னா கூட கவலை
இல்லடா ஒரு புள்ளைய
தான் வஞ்சிடாத அப்பன்
எங்கடா...
2005-ல் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் ‘சந்திரமுகி’. பி.வாசு இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. கவிஞர் நா.முத்துக்குமார் எழுதி திப்பு, மாணிக்க விநாயகம், ராஜலட்சுமி பாடிய பாடல்,
கொக்கு பற பற கோழி பற பற
மைனா பற பற மயிலே பற
இந்தப் பாடலில், ‘ஸ்ரீரங்க நாதனைப் பாத்தாக்க தல காவேரியை அடிக்கடி வரச்சொல்லு...’ என்ற மாணிக்க விநாயகத்தின் குரல் தனித்து தெரியும்.
பேரரசு இயக்கத்தில் 2005-ல் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘திருப்பாச்சி’. இப்படத்திற்கு தினா இசையமைத்தார். 2 பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத், மணிசர்மா இசையமைத்தனர்.
இப்படத்தில் சூப்பர் ஹிட் டூயட் பாடலான
கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். இப்பாடலை சுமங்கலியுடன் இணைந்து பட்டையைக் கிளப்பிய பாடகர் மாணிக்க விநாயகம் தான்.
மலையாள இயக்குர் ஷாபி இயக்கத்தில் 2005-ல் வெளியான படம் ‘மஜா’. விக்ரம், அசின் நடித்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். இப்படத்தில் உதித் நாராயணன், திப்புவுடன் இணைந்து மாணிக்க விநாயகம் பாடிய ‘ஹே பங்காளி என்ன சொல்லு எவன் வந்தாலும் எதிர நில்லு’ பாடல் புதுமையான மெட்டில் அமைக்கப்பட்டது.
2005-ல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிருத்விராஜ், கோபிகா நடிப்பில் உருவான படம் ‘கனா கண்டேன்’. இப்படத்தில் வித்யாசாகர் இசையில், ‘தாய் சொல்லும் உறவை வைத்து உலகம் சொந்தம்’ என்ற சோகப்பாடலை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். கரு.பழனியப்பன் இயக்கத்தில் 2006-ல் உருவான படம் ‘சிவப்பதிகாரம்’. வித்யாசாகர் இசையில் ஜாலியான பாடலை மாணிக்க விநாயகம், சின்னப்பொண்ணு, ராஜலட்சுமி ஆகியோர் பாடினர்.
ஏ மன்னார்குடி
கலகலக்க மதுரஜில்லா
மணமணக்க
- எனும் பாடல் ஹிட் ஆனது.
2006-ல் சீமான் இயக்க்ததில் மாதவன், பூஜா நடிப்பில் வெளியான படம் ‘தம்பி’. வித்யாசாகர் இசையில் கார்த்திக், பாலேஸ் ஆகியோருடன் இணைந்து மாணிக்க விநாயகம் பாடிய ‘என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழா தொங்குது’ பாடலும் வெற்றி பெற்றது.
இதே ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, பரத், பாவனா, பிரியங்கா நடிப்பில் வெளிவந்த படம் ‘வெயில்’. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் ஏகாதசி எழுதிய மனதை உருக்கும் சோகப்பாடலான ‘செத்தவடம் செத்து போனேன்’ என்ற பாடலை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.
தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைக் குவித்த படம்
‘பருத்திவீரன்’. 2007-ல் அமீர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில்,
ஏலே ஏ லேலேலே
ஒத்தப்பனை ஓரத்துல
செத்த நேரம் ஒம்மடியில்
தலை வச்சு சாஞ்சுக்கிறேன்
- என்று மாணிக்க விநாயகத்தின் குரலில் தொடங்கும் இப்பாடலை கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல், யுவன்சங்கர் ராஜா பாடியுள்ளனர். ஒரு பாடலின் வெற்றிக்கு இசை மட்டுமல்ல பாடகர்களும் முக்கியம் என்பதை உணர்த்தும் பாடலிது.
கணவன், மனைவியான புஷ்கர்-காயத்ரி இயக்த்தில் 2007-ல் ஆர்யா, பூஜா நடிப்பில் வெளிவந்த படம் ‘ஓரம் போ’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ‘முயலுக்கும் ஆமைக்கும் ரேசு’ என்ற பாடலை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.
2008-ல் தருண்கோபி இயக்கத்தில் சிலம்பரசன், வேதிகா, சீமா நடிப்பில் உருவான படம் ‘காளை’. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்தார். ஆண்களை மட்டுமே புகழ்ந்து பாடல் வந்துகொண்டிருந்த நேரத்தில் பெண்ணை பில்டப் செய்து உருவாக்கப்பட்ட ‘வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள கருப்பாயி ஆத்தாவோட வம்சம்’ எனும் பாடலை மாணிக்க விநாயகம், ஸ்ரீராம் பாடியுள்ளனர்.
ஹரி இயக்கத்தில் 2008-ல் வெளியான ‘சேவல்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் திப்பு, அனுராதா ஸ்ரீராம், ஷ்ரேயா கோஷல், பிரசாந்தி ஆகியோருடன் இணைந்து மாணிக்க விநாயகம் பாடிய வித்தியாசமான பாடல்
போட்ட வெதப் பொத்துக்கிச்சே…
ஊத்துத் தண்ணி அத்துக்கிச்சே…
2008-ல் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, ஜெனிலியா நடிப்பில் உருவான படம் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நவீன், பிரேம் அமரன், மாணிக்க விநாயகம், புஷ்பவனம் குப்புசாமி, பிரியா ஹிமேஷ் இணைந்து, ‘அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி’ எனும் பாடலைப் பாடியுள்ளனர். வேகமான தாளக்கட்டைக் கொண்ட பாடல் அது.
நீல பத்மநாபன் எழுதிய தலைமுறை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘மகிழ்ச்சி’ படத்தில், வித்யாசாகர் இசையில் ‘புளிப்பா புளியங்கா அவ பொடவைக் கட்டுனா வெள்ளரிக்கா’ பாடலை வேல்முருகன், கரிசல் கருணாநிதி ஆகியோருடன் மாணிக்க விநாயகம் பாடினார்.இத்தனை காய்கள் இருக்கா என்று ஆச்சரியப்படும் வகையில் வையம்பட்டி முத்துச்சாமியின் வரிகள் ஆச்சரியப்பட வைக்கும்.
ஹரி இயக்கத்தில் 2010-ல் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளிவந்த படம் ‘சிங்கம்’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பென்னி தயாள், மாணிக்க விநாயகம் பாடிய ‘நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள’ பாடல் அதிரடி ரகம்.
‘தமிழ்’ உட்பட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய மாணிக்க விநாயகம், மெல்லிசை மன்னர்களின் பல பாடல்களை ரீமிக்ஸ் செய்து பாடியுள்ளார்.
‘திருடா திருடி’, ‘கம்பீரம்’, ‘பேரழகன்’, ‘கிரி’, ‘அறிவுமணி’, ‘போஸ்’, ‘கள்வனின் காதலி’, ‘புலி வருது’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தோழி’, ‘வேட்டைக்காரன்’, ‘பலே பாண்டியா’, ‘வ குவாட்டர் கட்டிங்’, ‘யுத்தம் செய்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் நேற்று (டிச.26) காலமான மாணிக்க விநாயகத்தின் குரல், மணியோசையின் அதிர்வைப் போல தமிழ் திரையிசை நேயர்களின் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும்.