மஞ்சப் பை மகத்துவத்தை மக்களிடம் சொல்வோம்!

By கே.சந்திரசேகரன்

மனித குலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதில் முதல் இடத்தில் இருக்கிறது பிளாஸ்டிக். அதற்கு நாம் அடிமையாகிவிட்டோமோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு மனித சமுதாயத்தை பிளாஸ்டிக் ஆட்கொண்டுவிட்டது.

பல் துலக்கும் பேஸ்ட் முதல் பவுடர் டப்பா வரை ஒரு காலத்தில் தகரத்தில் அல்லது பாட்டில்களில் மட்டுமே வந்தது. அதுபோல, துணி வகைகள் முதல் காய்கனி, மளிகை வரை வாங்க மஞ்சப் பையே அப்போதெல்லாம் பிரதானமாக பயன்பட்டது. ஆனால் இன்று, அனைத்துமே பிளாஸ்டிக் மயமாகி மக்களைவிட்டு பிரிக்கமுடியாத ஒரு பிணைப் பொருளாகிவிட்டது.

உலகம் முழுமைக்கும் பயன்பாட்டுக்கு வரும் பிளாஸ்டிக் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு பொருட்கள் மக்கும் தன்மை அற்றவை. இந்தியாவில் பிளாஸ்டிக் உபயோகம் கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி, இந்தியாவில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. இவற்றில் 40 சதவீதம் மீண்டும் சேகரிக்கப்படாமல் வீசப்படுகின்றன.

இப்படி இரண்டரக் கலந்துவிட்ட பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து ஜீவராசிகளுக்குமே தீங்குதான். ஆனால், இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் நாம் நவநாகரிகம் என நினைத்து பிளாஸ்டிக்குடன் உறவாடிக் கொண்டிருக்கிறோம்.

பாலிஎத்திலின், பாலிவினைல் குளோரைடு, பாலிஸ்டைரின் ஆகிய ரசாயனங்களால்தான் பாலிதீன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ரசாயனம் என்று சொல்வதைவிட, உயிர்க்கொல்லிகள் என்று சொல்வதே சரியாக இருக்கும். அந்த அளவிற்கு இவை கொடியவை.

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பின்போது வெளியேறும் நச்சுகளால் ஒட்டுமொத்த சுற்றுச் சூழலும் கெடுகிறது. இந்த நச்சுகள் கலந்த காற்றை சுவாசிப்பதால், புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்கள் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் தாக்குகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதால், அவற்றில் வசிக்கும் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதையெல்லாம் நாம் இப்போதாவது சரியாகப் புரிந்து கொண்டு, மனித இனத்தை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க தீர்மானம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. சட்டத்தால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழித்துவிடமுடியாது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதை சாதிக்கமுடியும். இதை உணர்ந்துதான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார்.

ஒருகாலத்தில், விறகிற்காக மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டன. இதனால் இயற்கை வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதைத் தடுப்பதற்காக, சமையல் எரிவாயு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை தந்து சமையல் எரிவாயு பயன்படுத்துவதை வெகுஜன இயக்கமாகவே இன்றைக்கு மாற்றிவிட்டோம். விளைவு, கிராமங்களில்கூட இன்றைக்கு விறகு அடுப்புகள் அரிதாகி வருகிறது. இதனால் விறக்குக்காக மரங்கள் வெட்டப்படுவது வெகுவாகத் தடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல, நம்மிடையே பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததற்குக் காரணமே துணிப்பைகளை நாம் ஆதாரிக்காமல் விட்டது தான். மக்களிடம் மீண்டும் மஞ்சப்பை மோகம் வளரவேண்டுமானால் முதலில் அவர்கள் மத்தியில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் சாமானிய விலையில் துணிப்பைகள் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இதைச் செய்துவிட்டோம் என்றாலே சட்டத்தின் அதிகாரம் தேவை இருக்காது. இதையெல்லாம் மனதில் கொண்டு தான் மஞ்சப்பை இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார் முதல்வர்.

முதல்வர் சொல்வது போல், எந்த ஒரு திட்டமும் மக்கள் இயக்கமாக மாறும்போதுதான் மகத்தான வெற்றியைப் பெறமுடியும். அதுபோல பிளாஸ்டிக் ஒழிப்பும் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் மூலம் மக்கள் இயக்கமாக மாறவேண்டும்.

இந்த விஷயத்தில் அரசின் செயல்பாடுகள் ஒருபுறமிருக்க, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உருவாக்கப்படும் துணிப்பைகள் மற்றும் மக்கும் தன்மை கொண்ட நெகிழிகளைத் தயாரித்து, குறைந்த லாபத்தில், அவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்பை உற்பத்தியாளர்கள் மேற்கொள்ளவேண்டும். அரசுக்குப் பயந்ததாக இல்லாமல் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக, நமது எதிர்கால சந்ததியின் மீது அக்கறை கொண்டவர்களாக வணிகர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும்.

தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தின் மூலம், பிளாஸ்டிக் ஒழிப்பில் இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட நாமும் நம்முடைய பங்களிப்பை உறுதிசெய்வோம்.

கட்டுரையாளர்: கலைப்பிரிவு தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் - தமிழ்நாடு காங்கிரஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE