இசை வலம்: ஒமைக்ரானை வெல்ல ஒரு பாடல்!

By ரவிகுமார் சிவி

கடந்த ஆண்டில் கலவரப்படுத்திய கரோனா வைரஸின் தொடர்ச்சியாக, ஒமைக்ரான் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கிறது. 100 கோடி மக்களுக்கு இன்னும் முழுமையாக (இரண்டு தவணை) தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், இன்னமும் தடுப்பூசியின் திறனின் மீது நம்பிக்கை இல்லாமல் தடுப்பூசி போடுவதைத் தள்ளிப் போடுபவர்களுக்காகவே ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது. கைலாஷ் கெர் எழுதிப் பாடியிருக்கும் இந்த இந்திப் பாடல், கரோனாவுக்கு எதிரான மனித குலத்தின் போருக்கு தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

கிராமியப் பாடகராக எழுச்சிபெற்று சூபி பாடல்களில் தன்னை மறந்து, பண்டிட் பீம்சென் ஜோஷி, பண்டிட் குமார் காந்தர்வா, பண்டிட் ஹிருதயநாத் மங்கேஷ்கர், கவாலி பாடகர் நுஸ்ரத் ஃபதே அலி கான் போன்ற இசை மேதைகளின் பாடல்களைக் கேட்டு கேட்டே தன்னுடைய இசைத் திறனை வளர்த்துக்கொண்டவர் கைலாஷ் கெர். சுயம்புவாக இசை உலகில் தனக்கென தனிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் அவரது குரல் வளமும், பாடும் பாணியும் அசாத்தியமானவை. பிலிம்பேர் விருதுகளை இரண்டு முறையும் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கும் இந்தக் கலைஞரின் குரலைக் கேட்டாவது, இன்னும் தடுப்பூசியைப் போடாமல் இருப்பவர்கள் ஒரு தவணை தடுப்பூசியையாவது போட்டுக்கொள்ள வேண்டும். அது நமக்கும் நமது குடும்பத்துக்கு மட்டுமில்ல, இன்னொரு வேற்றுருவ வைரஸ் உருவாவதைத் தடுக்கும் வகையில் உலகத்துக்கே நல்லது!

தடுப்பூசியின் அவசியம் சொல்லும் பாடல்:

https://www.youtube.com/watch?v=aqzs_rrf3B0

நலம்தானா நாகஸ்வரம்!

நாகஸ்வரத்துக்கு இணையாக இன்னொரு இசைக்கருவியைச் சொல்ல முடியுமா தெரியவில்லை. நாதஸ்வரம் என்றும் நாகசுரம் என்றும் அழைக்கப்படும் இந்த வாத்தியத்தின் மகிமையை, இளையராஜா போன்ற திரையிசை மேதைகள் சொல்லக் கேட்க வேண்டும். இது எத்தனை மகத்துவம் கொண்டது எனப் புரியும்.

மாப்பிள்ளை அழைப்பு, திருமண நிகழ்வின் பல சடங்குகளின்போது ‘கெட்டிமேளம்... கெட்டிமேளம்...’ என்று வாசிப்பதோடு மங்கள வாத்தியமான நாகஸ்வரத்தையும் தவிலையும் உறையில் போட்டுவிட்டு, அடுத்த நிகழ்ச்சிக்கு பரபரப்பாக போவதில் கவனத்தோடு சில கலைஞர்கள் இருப்பார்கள். சில கலைஞர்கள் திருமணம் முடிந்ததும் மணமக்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் வைபவம் போன்றவற்றுக்கும்கூட தங்களின் இசையால் இனிமையை சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

திருமண வீடுகளில் இப்போதெல்லாம் கணவன் மனைவியாக நாகஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களை அதிகம் பார்க்க முடிகிறது. அதிலும் அசுர வாத்தியமான நாகஸ்வரத்தைக் கையாள்வது மாபெரும் கலை. இன்றைக்கு இசை உலகில் பிரகாசித்துக்கொண்டிருக்கும் இளம் நட்சத்திரம் - பாகேஸ்வரி பாலகணேசன்.

ஏழு வயதிலேயே நாகஸ்வரப் பயிற்சியை தன்னுடைய தந்தையிடம் தொடங்கியவர். இவரின் தந்தை பிரபல நாகஸ்வர வித்வான் சர்மாநகர் பி.வி.என். தேவராஜ். 10 வயதிலேயே அரங்கேற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.

‘நாதஸ்வரக் கலைச்சுடர்’, வளையப்பட்டி நாதாலயா அறக்கட்டளையின் ‘நாதஸ்வர காஷ்யப்’ விருது, டி.கே. சண்முகம் விருது, பாரதி விருது, காயிதே மில்லத் விருது, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை விருது, ‘நாதஸ்வர இசைவாணி’ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருப்பவர். பாகேஸ்வரி கரம் பிடித்திருக்கும் பாலகணேசன், திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல நாகஸ்வர வித்வான் கலைமாமணி டி.ஆர்.பிச்சாண்டியின் மகன். இசைப் பேரறிஞர் மதுரை பொன்னுசாமிப் பிள்ளையின் மாணவன்.

‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா’ என்பது போன்ற கேள்வி - பதில் பாடல்கள் எல்லாம் இவர்களின் நாகஸ்வரத்தின்வழி தேன் பாய்ச்சுவதைக் கேளுங்கள்!

https://www.youtube.com/watch?v=_ULuHomy8b8

என்னத்தைச் சொல்ல..

கல்லூரி மாணவர்கள், பல்வேறு பணிகளில் இருப்பவர்கள் இணைந்து ‘பியூப்பிள் எக்ஸ்பிரஸிங் ஆர்ட்ஸ் கல்சுரல் எமோஷன்’ என்ற அமைப்பின்கீழ் ‘ரோட்டுல பீட்டு’ என்று ‘பஸ்கிங்’ என்று பல நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர். ‘ரோட்டுல பீட்டு’ என்பது முறையாகக் காவல் துறையின் அனுமதி பெற்று கடைவீதிகளில், வணிக வளாகங்களில் திடீரென்று தங்களின் தனிப்பாடல்களை அரங்கேற்றுவது. ‘பஸ்கிங்’ என்பது மேற்குலகில் மிகவும் பிரபலமான பொது இடங்களில் சிறிய இசை நிகழ்ச்சிகளை எந்தவிதமான வாத்தியங்களும் இல்லாமல் தங்களின் குரல்களைக் கொண்டே சத்தங்களை உண்டாக்கிப் பாடி நிதி திரட்டும் வடிவம். ‘பீஸ்’ அமைப்பில் பாடல்களை எழுதிப் பாடும் ராப்பர்களில் ஒருவரான ரத்தீஷ், தங்களது இசை நிகழ்ச்சிகள் குறித்துப் பேசினார்.

“மேடைதான் எல்லாருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. நாங்கள் பின்பற்றுவது ஹிப் ஹாப் கலாச்சாரத்தைத்தான். எங்களின் தனிப்பட்ட உணர்வுகளைப் பாட்டுகளாகப் பாடும் அதே சமயத்தில், சமூகத்தில் எங்களைப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றியும் பாடிவருகிறோம். ‘விடியட்டும்’ எனும் பாடல் காவிரிப் பிரச்சினையைப் பற்றியது” என்றார்.

இவர்களின், ‘காதல் ஒரு தேவையில்லாத வேலை’ பாடல் கவனம் ஈர்க்கிறது. ‘ராப்’புக்கு தமிழில் ‘சொல்லிசை’ என்கிறார்கள் இவர்கள்.

“யார் வேண்டுமானாலும் எங்கள் அமைப்பில் இணையலாம். அடுத்துவரும் பாடலின் கருத்து, ‘நாம் எல்லாரும் தப்பு பண்ணுகிறோம். தவறைச் செய்யாமல் தவிர்த்தால் சமூகம் தானாகவே திருந்தும்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. யாருடைய கருத்தையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொதுவாக நம்முடைய செயல்முறைகளில் தேவைப்படும் மாற்றங்களை வலியுறுத்துவதே இந்த அமைப்பின் இப்போதைய கருத்தாக வைத்திருக்கிறோம்” என்கின்றனர் பீஸ் குழுவினர்.

இந்த அமைப்பில் பத்து ராப்பர்கள் இருக்கிறார்கள். சஞ்சய் என்று ஒரு நடனக் கலைஞர். ரிகார்டிங் செய்பவர், பீட் புரடியூசர், மிக்ஸிங் செய்பவர், ஒளிப்பதிவு செய்பவர், சமூக வலை தளங்களை பராமரிப்பவர் எனப் பலரும் இருக்கின்றனர். திரைப்படங்களுக்குப் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும் சுயாதீனக் கலைஞர்களுக்கான மதிப்பும் சமூகத்தில் அதிகரித்து வருவது இசை ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமான முன்னேற்றம்.

ராட்சன் எனும் ரத்தீஷ் அண்மையில் வெளியிட்டிருக்கும் பாடல் ‘என்னத்தைச் சொல்ல!’

அரிய விஷயங்களை அறிந்துகொள்ள இந்தப் பாடலைக் கேளுங்கள்:

https://www.youtube.com/watch?v=wJqbOzHt_CA

உண்மையில் உண்மையில்லாதவர்கள் யார்?

அம்ரித் ராவின் மெட்ராஸ்கல்ஸின் இசை, க்ரியா சக்தியின் அரங்கக் கலைஞர்கள், ப்ரீத்தி பரத்வாஜின் நடனக் குழுவினர் என பல தரப்பட்ட கலை வடிவங்களை நம் கண்முன்னே கொண்டுவருகிறது ‘உண்மையில்லாதவர்கள்’ இசை நிகழ்ச்சி.

ஆண்டாண்டு காலமாக மக்களை ஏய்க்கும், பொய்யான அரசியல் வாக்குறுதிகளையும் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டிய துடிப்பான இசையுடன் கூடிய பாடல்களுக்கு அரங்கத்தில் கூடியிருந்த மக்களின் ஆரவாரமான வரவேற்பே, நிகழ்ச்சியோடு அவர்களை ஒன்றவைத்ததற்குச் சாட்சியாக இருந்தது.

‘பூமி யாருக்குச் சொந்தம்? ஆறு யாருக்குச் சொந்தம்?’ பாடலில் சட்ட விரோதமான மணல் கொள்ளை, நீர் நிலைகளில் கட்டிடங்களை எழுப்புதல் போன்ற சமகாலப் பிரச்சினைகள் எல்லாமும் ஊர்வலமாக வந்தன. உண்மையை மறைப்பவனும் அதை ஆதரிப்பவனும்கூட உண்மையில்லாதவர்கள்தான் என்பதைப் பளிச்சென்று உணர்த்தின பாடலின் வரிகள். கர்நாடகம், ஆந்திரம், கேரளத்திலிருந்தும் வந்திருந்த ரசிகர்களும் தங்களுக்குள் அர்த்தபுஷ்டியோடு அவர்களின் சொந்த ஊரில் நடக்கும் அவலங்களைத்தான் சொல்கிறார் என்பதுபோல சிரித்துக்கொண்டனர். தமிழ் ரசிகர்களும் பக்கத்தில் இருந்தவர்களிடம் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்தபடி பாடலை ரசித்தனர்.

அரசியல் பேசும் கானம் கேட்க:

https://www.youtube.com/watch?v=Wvuw1mBOxXQ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE