'இடைத்தரகருக்கு மட்டுமே பலனளிக்கும் காய்கறி விலையேற்றம்’: கட்டுப்படுத்த ஓபிஎஸ் கோரிக்கை!

By காமதேனு

விவசாயி - நுகர்வோர் என காய்கறி சந்தையின் இருதரப்பில் இருப்போருக்கும் பலன்தராத காய்கறி விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று(டிச.24) அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நுகர்வோருக்கான பொருட்கள் தரமாகவும் விலை நியாயமாகவும் கிடைப்பதுடன், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்’ என கோரியுள்ளார்.

மேலும் ’திமுக பொறுப்பேற்ற 7 மாத காலமாக காய்கறி விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. காய்கறிகளை விளைவிக்கிற விவசாயிகளுக்கு இதனால் பலன் ஏதுமில்லை’ என்றும் சாடியுள்ளார். இதற்காக தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் விளைவிக்கப்பட்டும் காய்கறிகளின் கொள்முதல் விலையை, வெளிச்சந்தையில் நுகர்வோரிடம் செல்லுபடியாகும் விற்பனை விலையுடன் ஒப்பிட்டு விளக்கி உள்ளார்.

உதாரணத்துக்கு விவசாயியிடம் கிலோ ரூ.30-க்கு பெறப்படும் தக்காளி, வெளிச்சந்தையில் ரூ.65 வரை செல்கிறது. கிலோ ரூ.100-க்கு விவசாயிடம் பெறப்படும் முருங்கைகாய் வெளிச்சந்தையில் ரூ.450 வரை விற்பனையாகிறது. இதேபோல பல்வேறு காய்கறி ரகங்களை ஒப்பிட்டு, உற்பத்திக்கும் வெளிச்சந்தைக்கும் இடையிலான விலை வித்தியாசம் 2 முதல் 3 மடங்கு இருக்கிறது என தரவுகளை அடுக்கியுள்ளார் ஓபிஎஸ்.

இத்துடன் ‘விலை உயர்வால் விவசாயிகள் மட்டுமன்றி நுகர்வோர்களும் பாதிகப்படுகிறார்கள். இப்படி இருதரப்புக்கும் பலனற்ற இந்த விலையேற்றத்தால் இடைத்தரகர்களே அதிகம் பயனடைந்து வருகிறார்கள். காய்கறிச் சந்தையை முறைப்படுத்தும் அமைப்பு அரசாங்கத்திடம் இல்லாததுதான் இதற்கெல்லாம் காரணம்’ என்று அரசை குறைகூறி உள்ளார் .

நிறைவாக ’ஒரு தொழில் என்றால் அதில் ஈடுபட்டிருக்கும் உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர் என அனைவருமே சமமாக பயனடைய வேண்டும். அந்தவகையில், தற்போதைய விலைவாசி ஏற்றத்தையும் கருத்தில் கொண்டு காய்கறிச்சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும்’ என்று தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கையும் வைத்துள்ளார் ஓபிஎஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE