பெண்ணின் திருமண வயது 21: வயதைக் கூட்டினால் மட்டும் வசந்தம் வீசிவிடாது!

By உமா சக்தி

எதைப் பற்றியும் சரியான புரிதல் இல்லாத வயதில் திருமண பந்தத்துக்குள் சிக்குவதால்தான், பல பெண்களின் வாழ்க்கை வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பெண்களுக்கான திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் விஷயம் பேசுபொருளாகி இருக்கிறது.

ஒரு காலகட்டம் இருந்தது. அப்போது பெண் என்பவள் திருமணத்துக்காகவே வளர்க்கப்பட்ட காலம் அது. எப்படியும் கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போகப் போறவதானே எதுக்கு படிக்க வைக்கணும், அந்தக் காசை சேர்த்து வைச்சா கல்யாணத்துக்காவது ஆகும் என்று நினைத்த சமூகம் அது. பெற்றோர்கள் தங்கள் ஆண் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்தும், பெண் குழந்தைகளின் படிப்பை பாதியில் நிறுத்தி, அதை நியாயப்படுத்தவும் செய்தனர். பின்னர், பெண் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் பரவலான சமயத்தில், பெண்ணுக்கு ஏற்பட்ட பல தடைகளில் ஒன்று திருமணம்.

18 வயதானால் பெண்ணுக்கு தாராளமாய் திருமணம் செய்யலாம் என்ற சட்டத்தால், பல கல்லூரி மாணவிகள் 2-ம் ஆண்டு அல்லது கடைசி வருட கல்லூரிப் படிப்பை தவறவிட்டனர். அல்லது சில பெண்கள் கூச்சத்துடன் தாலி அணிந்து கல்லூரிக்கு வந்து படிப்பைத் தொடர்ந்த சம்பவங்களும் நடந்தன. திருமணத்துக்கு முன் திருமணத்துக்கு பின் என்று பெண்களின் வாழ்க்கை இரண்டு கூறாகப் பிரிந்து கிடக்கிறது. அதை சமன்செய்ய எந்த சட்டத்தாலும் முடியாது,

இந்நிலையில் பெண்களுக்கான திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006-ன் படி குறைந்தபட்ச வயதுக்குக்கீழே உள்ள ஆண் அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால், அந்தத் திருமணத்தைச் செய்துவைத்தவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.

ஆனாலும் இத்தகைய திருமணங்கள் இன்றளவும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. பெண்ணுக்கு திருமணத்தை முடித்துவிட்டால், தங்கள் கடமை முடிந்தது என்ற மனநிலையுள்ள பெற்றோர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். பெண்களின் கல்வி, உடல்நலம், மனநலம், குடும்ப வாழ்க்கைக்கு அவள் மனரீதியாகத் தயாராக இருக்கிறாளா என்பதெல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டதே இல்லை. இது என் வீடு, இதில் நான் சொல்லும்படிதான் நடக்க வேண்டும் என்ற கட்டுக்கோப்பு என்ற விஷயத்தை ஆண் கையில் எடுப்பதால், பல குடும்பங்களில் பெண்ணின் தாய் தடை சொல்லியும் கூட வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

தற்போதுள்ள தலைமுறையினர் ஓரளவுக்குப் படித்து விடுவதால், பெண்கள் தங்களுக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று துணிவாக ஓரளவேனும் சொல்ல முடிகிறது. வீட்டார் ஏற்கவில்லை என்றாலும் தங்கள் கருத்தை எடுத்துவைக்க பெண்களுக்கு தைரியம் கொடுத்தது, படிப்பும் அதன் தொடர்ச்சியாக பொருளாதாரச் சுதந்திரமும்தான். நவீன வாழ்க்கைச் சூழலில் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சரி, அவர்கள் பல விஷயங்களை இளம்வயதிலேயே தெரிந்து கொள்கிறார்கள். அதனால், அவர்களின் ஹார்மோன்கள் வெகுசீக்கிரத்தில் தூண்டப்பட்டு 8 அல்லது 10 வயதிலேயே பருவம் அடைந்துவிடுகின்றனர்.

அதன்பின், அவர்களுக்கு எதிரே இருக்கும் சவால்கள் என்பது மிகப் பெரியது. தங்கள் உடலைப் பற்றிய பல கேள்விகளுக்கான பதில் யாரிடமும் இருப்பதில்லை. பெண் உடலை உடமையாகப் பார்க்கும் ஆண் மனோபாவ உலகில், தங்களின் உண்மை நிலை என்னவென்பதே பல பெண்களுக்குப் புரிவதில்லை. சட்டம் என்ன சொல்கிறது என்பது இல்லாமல், குடும்பம் என்ன சொல்கிறது என்பதில்தான் அவர்களின் வாழ்க்கை அடங்கியுள்ளது.

பெண்ணின் திருமண வயது 18 என்ற சட்டம் இருந்தபோதும், இன்னும் கூட இந்தியாவின் பல பகுதிகளில் குழந்தை திருமணங்கள் ஓயவில்லை. 14 வயது பெண் குழந்தைக்கு ஒரு வயதில் குழந்தை என்ற செய்திகளையும் நாம் படித்துக் கடந்து கொண்டிருக்கிறோம். பெண்ணுக்கு எதிராக நடந்தேறும் அநீதிகளுள் சமூக அங்கீகாரத்துடன் நடந்துவரும் கொடுமை இதுவாகத்தான் இருக்கும்.

நகரங்களில், படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்த பின் தான் திருமணத்தைப் பற்றி பேச வேண்டும் என்று தைரியமாகச் சொல்லும் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த 18 வயது என்பது கேடயமாக இருந்துவந்தது. இப்போது அது 21 ஆக அதிகரித்திருப்பதால், இன்னும் கொஞ்சம் ஆசுவாசம் அடைவார்கள்.

ஆனால், சிறுபான்மையினராக இருக்கும் இந்தப் பெண்களுக்காக பெரும்பான்மையில் இருக்கும் மற்ற சராசரி பெண்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இச்சட்டம் ஏற்படுத்திவிடப்போவதில்லை என்பதுதான் உண்மை. அது 18 ஆக இருந்தாலும் சரி, 21 ஆக இருந்தாலும் சரி, வீட்டார் நிர்பந்தத்தை எதிர்க்க முடியாத பெண்கள்தான் இந்த தேசத்தில் பெருவாரியாக இருக்கிறார்கள்.

வீட்டாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் இத்தகைய சிக்கல் என்றால், நேசித்தவனையே கரம்பிடிக்க நினைக்கும் பெண்ணுக்குப் புதிய சட்டத்தால் நிச்சயம் சிக்கல்தான். அந்தப் பெண்களின் குடும்பத்தாருக்கே இச்சட்டம் சாதகமாகிவிடும் வாய்ப்பு அதிகம். இதைக் காரணம் காட்டி, அவர்கள் தங்கள் பெண்களை கட்டுக்குள் வைத்திருக்க முயல்வார்கள். ஆணவக் கொலைகள் அரங்கேறும் சமூகங்களில் இவையெல்லாம் ஒரு விஷயமாகவே இருக்காது. ஏற்கெனவே, பலவாறு ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பெண்களுக்கு மேலும் ஒரு அடக்குமுறையாக இச்சட்டம் மாறவும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

பெண்ணின் திருமண வயதை நிர்ணயிக்க அரசும் பெற்றோரும் தான் தகுதியானவர்கள் என்பது மாறி, அது அந்தப் பெண்களின் முடிவாக, அவர்களின் தேர்வாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சுயமாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள். திருமணம், அதன் நீட்சியாக ஏற்க வேண்டிய குடும்பச் சுமை இவை எல்லாம் அவர்களின் எதிர்காலத்தை அச்சமூட்டுவதாக இருப்பதால், கூடுமானவரையில் திருமணத்தைத் தள்ளிப்போடவே விரும்புகிறார்கள்.

ஒரு காலத்தில், ஆண்கள்தான் ‘செட்டில் ஆகிவிட்டுத்தான் கல்யாணம்’ என்று சொல்வார்கள். இப்போது பெண்களும் அப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களும் ‘தங்களுக்குப் பிடித்த வேலை, ஓரளவுக்கு பேங்க் பேலன்ஸ் இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கைக்குள் அடிஎடுத்து வைப்போம்’ என்கிறார்கள். அல்லது தங்களைச் சுற்றி உறவுப் பிரச்சினைகளால் மன உளைச்சலில் தவிக்கும் பிற பெண்களைப் பார்த்து திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கும் பல பெண்கள் தள்ளப்படுகிறார்கள். அதன் காரணமாகவே, லிவ் இன் ரிலேஷன்ஷிப்கள் அதிகம் உருவாகிவிட்டன.

கமிட் ஆகப் பிடிக்காத இந்த ஆண்களும் பெண்களும், ஓரளவு தாங்கள் நினைத்தவற்றை சாதித்த பின் (அது பொருளாதார உயர்வாகவோ அல்லது திறன் சார்ந்த விஷயமாகவோ இருக்கலாம்) திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு கிட்டத்தட்ட 30 அல்லது 35 வயதாகிவிடுகிறது. வயதென்பது திருமணத்துக்கு ஒரு தடையில்லை என்றாலும், குழந்தைப்பேறு உள்ளிட்ட விஷயங்களுக்கு பெண்ணின் உடல் 18 வயது முதல் 30 வயது வரை தயாராக இருக்கும் என்கிறது ஆய்வுகள். இனப்பெருக்கம் என்பது முக்கியமான உயிரியல் விஷயமாக இருக்கலாம். ஆனால் அதற்காக, பெண்ணை குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரமாக மட்டும் பார்க்கும் போக்கை ஏற்கமுடியாது. பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு பெரிய பதவிகள் வகித்தாலும், அவர்கள் திருமணம் செய்து குடும்பம் எனும் கட்டுக்குள் வருவதையே இந்தச் சமூகம் அங்கீகரிக்கிறது.

இந்நிலையில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 3 ஆண்டுகள் நீட்டிப்பதால் மட்டுமே, பெண்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசப்போவதில்லை. இதற்குப் பதிலாக, பெண்களின் கல்வி, வேலை, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் அவர்களின் வாழ்க்கையில் நிஜமான மாற்றங்கள் நிகழும்.

ஆண்டாள் பிரியதர்ஷினி

பெட்டிச் செய்தி:

பாரதியின் நூற்றாண்டுக் கவலைக்கு மாற்று!

அரசின் இந்த முடிவு குறித்து நம்மிடம் பேசிய கோவை தொலைக்காட்சி ஒளியலை வரிசையின் தலைமை செயலரும், கவிஞரும், எழுத்தாளருமான ஆண்டாள் பிரியதர்ஷினி, “பெண் குழந்தைகள் என்றாலே திருமணம் செய்யவும், குழந்தை பெறுதலுக்கும் தான் என்ற பொதுப் புத்தி கருத்தியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது இந்தச் சட்டத் திருத்தம். சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ‘ஒரு வயதுக் குழந்தை விதவைகள் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்களே’ என்று பாரதியார் விசனப்பட்டார். அந்த நூற்றாண்டுக் கவலைக்கு மாற்று இது. கல்விதான் முதல் கணவன். கைத்தலம் பற்றுபவன் இரண்டாவதே. கல்வியும் வேலைவாய்ப்புமே பெண்ணுக்கு வாழ்க்கைப் பாதுகாப்பு என்பதை உணர்த்தும் சட்டம். பெண்ணுக்கான சுயம், சுயமரியாதை, சுயகவுரவம், எல்லாவற்றையும் மீட்டெடுக்கும் உன்னதம். ‘பெண்ணின் கையில் கரண்டிக்குப் பதிலாகப் புத்தகம் கொடுங்கள்’ என்ற பெரியாரின் கொள்கை சட்டவடிவமாவது பெரியாரின் தீர்க்கதரிசனத்துக்குச் சான்று” என்று சொன்னார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE