மிஸ்டர் இந்தியா கனவு மிஸ்ஸாகிவிடுமோ?

By கரு.முத்து

சத்தான உணவு எட்டாக் கனியாக இருக்கும் வறுமைப்பட்ட சூழலில் வாழ்ந்தாலும் அதற்காக சோர்ந்து விடாமல், ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் வெல்லும் முனைப்போடு தீவிர தேகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் முத்துக்குமார்.

முத்துக்குமார்

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள நீடூரில் குடிசைவீட்டில் வசிக்கிறார்கள் ரவி - செல்வி தம்பதி. நான்கு பேர் சரியாக கால் நீட்டிப் படுக்கக்கூட முடியாத இந்தக் குடிசைக்குள்தான் குழந்தை குட்டிகளுடன் வாசம் செய்கிறார்கள் இந்தத் தம்பதி. விவசாயக் கூலித் தொழிலாளியான இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன். அந்த மகன் தான் முத்துக்குமார். 2 மகள்களைக் கட்டிக்கொடுத்து விட்டார்கள். ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதால், முத்துக்குமார் இந்தக் குடிசைக்கு செல்லப் பிள்ளை.

அரசுப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை முடித்த மகனை, கல்லூரிக்கு அனுப்ப ஏழைப் பெற்றோரிடம் வசதியில்லை. அதனால் படிப்பைத் தொடரமுடியாத முத்துக்குமார், கேபிள் ஆபரேட்டர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அந்த வருமானத்தை வைத்து, தனியார் கல்லூரியில் பி.டெக்., படித்தார். கேபிள் வேலையில் கிடைத்த வருமானம் போக்குவரத்துக்கே போதவில்லை. அதனால், கிடைக்கும் மற்ற வேலைகளைச் செய்துதான் கல்லூரிக் கட்டணத்தை கட்டினார்.

காலையில் பழையசோறு, மதியம் உணவு கிடையாது. இரவு கொஞ்சம் சுடுசோறு. முத்துக்குமாரின் வீட்டில் அவ்வளவுதான் அன்றாட உணவுப் பழக்கம். இந்த வறுமைச்சூழலில், படித்து பட்டம்பெற்று நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்பதுதானே ஒவ்வொரு இளைஞனின் கனவாகவும் இருக்கும்? ஆனால், முத்துக்குமாரின் கனவு அதுவல்ல. மிகச்சிறந்த ஆணழகனாக வேண்டும் என்பதுதான் அவரது வைராக்கியம்.

மற்றவர்கள் எல்லாம் அஜித், விஜய் என்று நடிகர்கள் புகைப்படத்தை வைத்திருக்க, முத்துக்குமாரோ உலக அளவிலான உடல் அழகுப் போட்டியில் புரோகார்டு பட்டம் வென்ற மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுனீத்ஜாதவ் படத்தை பர்ஸிலும், வீட்டிலும் வைத்திருக்கிறார். அவர் தான் தனக்கு முன்மாதிரி என்றும் சொல்கிறார்.

சுனீத் ஜாதவ் போலவே தானும் மிகச்சிறந்த உடற்கட்டு உள்ளவராக ஆகவேண்டும் என்ற ஆசையில், மாதம் 500 ரூபாய் பணம் கட்டி ஜிம்முக்குப் போனார் முத்துக்குமார். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். ஏகலைவன் போல தானாகவே கற்றுக்கொண்டவருக்கு, இன்னின்ன பயிற்சிகளைச் செய்யும்படி சிலர் வழிகாட்டினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உடல் வடிவம் பெற்றது. அதைவைத்தே கல்லூரியில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்றார்; அதில் 2-ம் இடத்துக்கு வந்தது முத்துக்குமாருக்கு புது நம்பிக்கையைக் கொடுத்தது.

இதற்குப் பிறகு, முட்டை உள்ளிட்ட சில சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் பலமானார். தினமும் 8 மணி நேரத்தை ஜிம்மில் கழிக்க ஆரம்பித்தார். அடுத்ததாக, திருச்சியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டவருக்கு தங்கப்பதக்கம் வசமானது. இதனால் நம்பிக்கை இன்னும்கூட, பயிற்சிகளும் கூடின. மார்த்தாண்டத்தில் கடந்த நவம்பர் மாத இறுதியில் நடைபெற்ற ‘மிஸ்டர் தமிழ்நாடு’ போட்டியில், பெரும் சிரமப்பட்டு கலந்துகொண்டார். அங்கே இவருக்கே முதல்பரிசு கைவசமானது.

தொடர் வெற்றிகளால் முத்துக்குமாரின் கனவு இன்னும் விசாலமாகி இருக்கிறது. 2022-ல் நடக்கவிருக்கும் ‘மிஸ்டர் இந்தியா’ போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்று தவியாய் தவிக்கிறார் முத்துக்குமார். அதற்காக தினமும் 10 மணி நேரம் வரை மிகக்கடுமையாகப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

ஆனால், என்னதான் அவர் பயிற்சிகளில் மெனக்கிட்டாலும் வறுமை அவரை அடுத்த கட்டத்துக்கு முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறது. முத்துக்குமார் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் அவருக்கு ஆரோக்கியமான, சத்தான உணவு தேவை. இன்னும் நவீனமான உடற்பயிற்சிக் கருவிகளும், உடற்பயிற்சிக் கூடமும் தேவை. தகுதிப் போட்டிகளுக்குச் சென்றுவர பணம் தேவை. ஆனால், வெற்றிபெற முடியும் என்ற மன உறுதியைத் தவிர, மற்ற எதுவும் இன்றைய தேதியில் முத்துக்குமாரிடம் இல்லை.

அதை நம்மிடம் கவலையோடு பகிர்ந்து கொண்ட அவர், “மார்த்தாண்டம் போட்டிக்கு தயாராகவும், போட்டிக்குச் சென்று வரவுமே 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. தங்கையின் திருமணத்துக்காக பெற்றோர் வாங்கிவைத்திருந்த சிறு நகையை விற்றுத்தான் அதில் கலந்து கொண்டேன். நகையை விற்றும் செலவுக்குப் போதவில்லை. எனது டூ வீலரை அடமானம் வைத்து சமாளித்தேன்.

மார்த்தாண்டம் போட்டியில்...

‘மிஸ்டர் இந்தியா’ போட்டிக்கான தகுதிச்சுற்று டிசம்பர் இறுதியில் சென்னையில் நடக்கிறது. அதற்கான பயிற்சியில்தான் இப்போது இருக்கிறேன். புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ் அதிகமுள்ள உணவு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிக்கன், மட்டன் அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால், என்னிடம் அதற்குக்கூட வசதியில்லை. அதனால் விலைகுறைவாக கிடைக்கும் மாட்டுக்கறியை வாங்கிவந்து வீட்டில் சமைத்துச் சாப்பிடுகிறேன். அதிக நேரம் பயிற்சியில் இருப்பதால், தற்போது வேலைக்கும் போகமுடியவில்லை. அதனால் செலவுக்கு இன்னும் நெருக்கடியாக இருக்கிறது. அப்பாவும் அம்மாவும் கூலிவேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணத்தில் ஆயிரம், ரெண்டாயிரம் தருகிறார்கள். அதைவைத்துச் சமாளிக்கிறேன்.

யார் மூலமாவது உதவிபெற்று சென்னையில் நடைபெறும் போட்டிக்கு சென்றுவிட்டால், தகுதிப்போட்டியில் நிச்சயம் தேர்வாகி விடுவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதில் தேர்வாகிவிட்டால், அடுத்ததாக ஏதாவது ஒரு மாநிலத்தில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான தகுதிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். அதிலும் தேர்வானால்தான் அடுத்ததாக, ‘மிஸ்டர் இந்தியா’ போட்டியில் கலந்துகொள்ள முடியும். இதற்கெல்லாம் பணத்துக்கு என்னவழி என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

என்னுடைய இப்போதைய குறிக்கோள் ‘மிஸ்டர் இந்தியா’. எனக்கு போதிய பயிற்சியும் ஆதரவும் கிடைத்தால் அதையும் தாண்டி, உலக அளவில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தரவும் என்னால் முடியும்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னார்.

அடுத்தவேளை உணவுக்கே உத்தரவாதம் இல்லை என்கிற நிலையிலும், தன்னால் இந்தியாவின் ஆணழகனாகிவிட முடியும் என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார் முத்துக்குமார். அரசோ தன்னார்வலர்களோ ஆதரவுக்கரம் நீட்டினால் அவரின் லட்சியக் கனவை நனவாக்கலாம்.

முத்துக்குமரர் வென்ற பதக்கம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE