பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

தஞ்சை

பேருந்து நிலையத்தில் நடத்துநரும் பயணியும்...

“பழைய பஸ் ஸ்டாண்ட் எல்லாம் இறங்கு...”

“நேத்துதான் புதுசா இந்த பஸ் ஸ்டாண்டைத் திறப்பு விழா செஞ்சிருக்காங்க. இன்னும் அதைப் பழைய பஸ் ஸ்டாண்டுன்னு சொல்றீங்களே?!”

“பழைய இரும்புக் கடையை இடிச்சுட்டு புதுசா கட்டிடம் கட்டித் திறந்தா, அதைப் புது இரும்புக் கடைன்னு சொல்வாங்களா?அதுமாதிரிதான். எல்லாம் அடையாளத்துக்குத்தான்."

- வளர்மதி

தஞ்சாவூர்

வேதாரண்யம்

பேருந்து நிலையம் அருகே இரு நண்பர்கள்...

“மாப்பு... நடமாடும் டீக்கடை ஆரம்பிச்சிட்டாங்க, தெரியுமா? கலப்படமில்லாத தேயிலை போட்ட டீயாம்!”

“அப்படியே... நடமாடும் டாஸ்மாக் கொண்டுவந்து கலப்படமில்லாத சரக்கும் வித்தா... என்னை மாதிரி குடிமகன்களும் குஷியாகிடுவாங்கள்ல?”

“குடிகாரப் பாவி. திருந்துடா... நடமாடும் கடையிலேயே நல்ல டீ வாங்கித் தர்றேன்.”

-மருத.வடுகநாதன்,

வேதாரண்யம்

திருவள்ளூர்

பேருந்து நிலையம் அருகே...

“என்ன மாப்ளே ஜெராக்ஸ் கடை பக்கம் உன்னைப் பார்த்தேனே... வேலை தேட ஆரம்பிச்சிட்டியா?”

“நீ வேற... தடுப்பூசி போட்டவங்களுக்குதான் சரக்கு தருவாங்களாம். அதான் ஊசி போட்டவங்களோட சர்ட்டிஃபிகேட்ல வேற வேற தலையை மாத்தி ஒட்டி கலர் ஜெராக்ஸ் எடுக்கலாம்னு வந்தேன்.”

“இப்படி இருந்தா ஒமைக்ரான் இல்லடா... ஒலகத்துல இருக்கற அத்தனை கிருமியும் ஊருக்குள்ள வந்துடும். மரியாதையா ஓடிப்போய்டு!”

- ந.விஜய்ஆனந்த்,

தோப்புத்துறை

திருச்சி

உணவகம் ஒன்றில்...

“என்னப்பா இது... 250 ரூபாய்க்கு பில் போட்டிருக்கு... ஆனா, பில் டோக்கன் சைஸூல தான் இருக்கு. இதுலயும் சிக்கனமா?"

“உங்களுக்குக்கூட தான் 50 இஞ்ச் தொப்பை இருக்கு. ஆனா வாய் ரெண்டு இஞ்ச் தானே இருக்கு?"

(பார்ட்டி கப்சிப் ஆகிறார்)

-சிவம்,

திருச்சி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE