இசைவலம்: அய்யப்ப பக்தர்களின் பத்ததி!

By ரவிகுமார் சிவி

அய்யப்பனுக்கு உகந்தது சரண கோஷம். சபரிமலையில் அதிகாலையில் நடை திறக்கும்போது, ‘வந்தே விக்னேஸ்வரம்...’ எனும் அய்யப்ப சுப்ரபாதம் திருப்பள்ளி எழுச்சியாக யேசுதாஸின் குரலில் ஒலிக்கும். மாலையில் நடை திறக்கும்போது, ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ என்ற மலையாளப் பாடல் ஜெயனின் (ஜெய-விஜயன்) குரலில் ஒலிக்கும். தொடக்கத்தில் ஹரிவராசனம் பாடலை அத்தாழ பூஜையின்போதே பாடிவந்திருக்கின்றனர். ‘ஹரிவராசனம்’ பாடல் ஒலித்து முடிக்கும் நேரத்தில், கதவை மெதுவாகச் சாத்திவிட்டு அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள்.

சுவாமியைத் தூங்கவைக்கிற தாலாட்டுப் பாடல் போல இருப்பதால் மலையாளத்தில் இதை ‘உறக்குப் பாட்டு’ என்கிறார்கள். யேசுதாஸின் குரலில் ஒலிக்கும் ‘ஹரிவராசனம்’ பாடலுக்கு ஈடு இணையே இல்லை எனலாம். இந்தப் பாடலுக்குப் பலரும் இசையமைத்திருந்தாலும் ஜி.தேவராஜன் இசையில் யேசுதாஸ் பாடிய பாடலே சபரிமலையில் நடைசாத்தும் வேளையில் ஒலிக்கிறது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்தப் பாடலின் மெட்டிலேயே தற்போது மலையாளத்தில், ‘விஸ்வ விஸ்மயம்.. தேவ சங்க மேஸ்வரம்…’ எனும் ஒரு பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது.

பஜனை பத்ததி எனும் இசை வடிவத்தை வட இந்தியாவில் பக்த மீரா, பக்த துக்காராம், ராமதாசர் போன்றோர் செழுமையாக வளர்த்தெடுத்தனர். தென்னகத்தில் பஜனை பத்ததி பாணியைப் பல தலைமுறைகளுக்கு முன்பாகவே இயல்பாக வளர்த்தெடுத்ததில் பெரும் பங்காற்றியிருக்கிறது அய்யப்ப பக்தர்களின் பக்தி இசை. ‘விஸ்வ விஸ்மயம்' பாடலை கிருஷ்ணதாஸ் வாரியர் எழுதியிருக்கிறார்.

தற்போது ஹரிவராசனம் மெட்டில் சதீஷ் சந்திரன் பாடியிருக்கும், ‘விஸ்வ விஸ்மயம்' பாடலைக் கேட்கும்போது நம் மனத்தில் இறுக்கம் மறைந்து அமைதி குடிகொள்கிறது. பறவையின் அகன்ற றெக்கையிலிருந்து விடுபட்ட ஒற்றை இறகாய் பறக்கும் அனுபவத்தை அளிக்கிறது இந்தப் பாடல். அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்காவிட்டால் எப்படி?

கேளுங்கள்... பரவசமடையுங்கள்: https://www.youtube.com/watch?v=G3V3yfKx6tQ

இசையின் வழியாக ஒரு தமிழ்ச் சேவை!

கர்னாடக இசையில் அமைந்த கர்த்தரின் பாடல்களைப் பின்னணிப் பாடகி கல்பனா பாடிக் கேட்டிருக்கிறீர்களா?

கம்பீரமான பிலஹரி ராகத்தின் ஆலாபனையைத் தொடர்ந்து ஒலித்தது.

‘சேனைகளின் கர்த்தரே! நின்

திருவிலம் அளவற இனிதினிதே…’

- எனும் பல்லவி. தொடர்ந்து நிரவல் பாடி, தனி ஆவர்த்தனத்துக்கு இடம் கொடுத்து, ராகம்-தானம்-பல்லவி பாடிய கல்பனா ராகவேந்தரின் இசையில் மெய் மறந்திருந்தது கூட்டம்.

கல்பனா

கிறிஸ்தவ தேவாலயங்களில் மெல்லிசையில் முகிழ்த்த பாடல்களும், மேற்கத்திய பாடல்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பாமாலைகளுமே பெரிதும் ஒலிக்கும். முழுக்க முழுக்க கர்னாடக இசையில் கிறிஸ்தவ கீர்த்தனை கச்சேரியை அருளாளர்களின் துணையுடன் 2 ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்த்திக் காட்டினார் டாக்டர் டி. சாமுவேல் ஜோசப். திரைப்பட இசையமைப்பாளர் ஷியாம் எனும் அடையாளத்துடன் இவரைப் பலரும் அறிந்திருப்பார்கள் ( ‘மழை தருமோ இம் மேகம்?’ பாடல் நினைவிருக்கிறதா?). தமிழில் சில திரைப்படங்களுக்கும் மலையாளத்தில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்திருப்பவர் ஷியாம். ராகவேந்தரின் மகள் கல்பனாதான் அந்த முழுமையான கர்னாடக இசையில் அமைந்த யேசுவின் கீர்த்தனைளைப் பாடினார். அந்த நிகழ்வை தற்போது கீதாஞ்சலி இசைக் கூடம் யூடியூபில் வெளியிட்டுள்ளது.

‘என் மீட்பர் உயிரோடு இருக்கையிலே

எனக்கென்ன குறை உண்டு நீ சொல் மனமே...’

- என ஒலிக்கும் பாடல், உள்ளத்தை உருக்கும் கல்பனாவின் குரல் வளத்துடன் நம்மை ஆட்கொள்கிறது. செல்வபிரசாத் (வயலின்), ஆம்பூர் பத்மநாபன் (மிருதங்கம்), ஹரிஹரன் (கடம்), நாகராஜ் (முகர்சிங்), கிரிதர்பிரசாத் (கஞ்சிரா) ஆகியோரின் பக்க பலத்துடன் பாரம்பரியமான கச்சேரி பத்ததியில் நிகழ்ச்சியை நடத்தினார் கல்பனா ராகவேந்தர். ஆலாபனை, விருத்தம், துக்கடாக்கள், தில்லானா, மங்களம் வரை ஆபிரகாம் பண்டிதர், கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர், வேதநாயகம் சாஸ்திரியார் போன்ற முன்னோடிகள் எழுதிய கிறிஸ்தவ கீர்த்தனைகளோடு, வைரமுத்து, கிருதியா, குளோரியா உட்பட தற்காலக் கவிஞர்களின் பாடல்களும் அந்நாள் நிகழ்வில் பாடப்பட்டன.

"தமிழ் மொழியை நமக்கு முன்பிருந்த தலைமுறையினர் பயன்படுத்தியிருக்கும் விதத்தை இப்போது இருக்கும் தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். கிறிஸ்தவ தமிழ்க் கீர்த்தனைகளுக்கு முறையான நொட்டேஷன்களை எழுதி கர்னாடக இசையில் கச்சேரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இந்திய இசை வகைமைகளில் ஒன்றான கர்னாடக இசையைக் கற்றுக்கொள்வது கடினம். அதைவிட அதை சரியாக ரசிப்பது கடினம். அந்த ரசனையை வளர்த்துக்கொள்வதற்கான முயற்சியே இது. மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களுக்குப் பதில், நம்முடைய தமிழில் தமிழர்களே எழுதிய பாடல்களைக் கேட்க கேட்கத்தான் அதன் அருமை புரியும். கிறிஸ்தவ தமிழ்க் கீர்த்தனைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதற்கான எளிய வழியாகவே இதைப் பார்க்கிறேன்” என்றார் ஷியாம்.

‘என் மீட்பர்’ பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=WBxLC6iO0vc

தந்தானை துதிப்போமே...

இயேசு பிரான் அவதரித்த செய்தியையும் அற்புதங்களையும் விளக்கும் எண்ணற்ற கிறிஸ்தவப் பாடல்கள் புதிது புதிதாகப் பாடப்பட்டாலும், இந்தத் தலைமுறைக்கு அதிகம் அறிமுகமில்லாத பாடல்கள் சிலவற்றை இந்தப் பதிவில் எழுதலாம் என்று தேடினோம்.

‘தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே...

அதைத் தேடியே நாடி ஓடியே

வருவீர் திருச்சபையானோரே...’

- எனும் பாடலை பி.சுசிலாவின் குரலில் அந்தக் காலத்தில் நேரடியாக அவர் பாடிக் கேட்டவர்கள் பாக்கியவான்கள். இப்போது அந்தப் பாடலை யூடியூபில் பதிவேற்றி, இயேசுவின் அருளைப் பெறவைத்திருக்கின்றனர்.

ஜிக்கி

எண்ணற்ற திரைப்பாடல்களின் வழியே நம் செவியைப் பெருமைப்படுத்தியவர் பாடகி ஜிக்கி. ஆனால் அவர் பாடியிருக்கும் தோத்திரப் பாடல்களைக் கேட்டால் மெய்சிலிர்த்துப் போய்விடுவீர்கள்.

‘என்னை மறவா யேசுநாதா’, ‘எண்ணிலடங்கா, இன்ப இயேசு, காலை நேர, நிகரே இல்லாத, தோத்திரம், உன் பாதம் பணிந்தேன்...’ இப்படி அவர் பாடிய எண்ணற்ற கிறிஸ்தவப் பாடல்களில் இன்றைக்கும் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடலாக இருப்பது இந்தப் பாடல். எந்தவிதமான அதீத அலங்காரமோ சொற்பிரயோகமோ இருக்காது. மிகவும் எளிமையான வார்த்தைகள்.. ஆனால் அந்தப் பாடல் அமைந்திருக்கும் மெட்டுதான், நம்மை மீண்டும் மீண்டும் அந்தப் பாடலையே கேட்கத் தூண்டும். மனதின் ஓரத்தில் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

‘தந்தானைத் துதிப்போமே..

திருச்சபையாரே கவி பாடிப்பாடி

தந்தானை துதிப்போமே!’

ஆசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் தரும் தோத்திரமகிமையைக் காற்றில் கரைக்கும் இந்தப் பாடலின் வரிகளைக் கேட்க இந்தக் காணொலியைப் பாருங்கள்:

https://www.youtube.com/watch?v=UmJX7Flskew

சுவிசேஷ கீதங்களும் தேவாலயத் திருப்பணிப் பாடல்களும் மதமாச்சரியங்களைக் கடந்து, எல்லோரின் காதுகளிலும் தேன் பாய்ச்சும் இந்த மாதத்தில் பி.சுசிலாவின் ‘தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்’ பாடலைக் காண:

https://www.youtube.com/watch?v=x9hzx6q29to

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE