லென்ஸ் சிமிட்டும் நேரம் - 23

By வனிலா பாலாஜி

பல முறை ராமேஸ்வரம் சென்று வந்திருந்தாலும் ஒரு முறை கூட தனுஷ்கோடி பார்த்ததில்லை. அப்போதெல்லாம், தனுஷ்கோடிக்குச் செல்ல தார் ரோடு வசதி எல்லாம் கிடையாது. அரிச்சல் முனை வரைக்கும்தான் பஸ்ஸிலோ நமது சொந்த வாகனத்திலோ செல்ல முடியும். அதற்கு அப்பால் அங்கே வாடகைக்குக் கிடைக்கும் (மணலிலும் செல்லும்) ஜீப்களில் பயணித்துதான் தனுஷ்கோடி செல்ல முடியும். ஆனால், இப்போது தனுஷ்கோடி வரைக்குமே பளப்பளவென தார் ரோடு பளிச்சிடுகிறது.

2015-ல் நாங்கள் தனுஷ்கோடி செல்ல இதே டிசம்பரில்தான் திட்டமிட்டோம். ஆனால், “டிசம்பரில் அங்கே போகாதே” என்று எலோரும் என்னை பயமுறுத்தினார்கள். காரணம், 1964-ல் இதே டிசம்பர் கடைசியில்தான் புயல் அடித்து தனுஷ்கோடி அழிந்ததாம். ஆனாலும் சொந்த மண்ணைவிட்டு வரமனமில்லாத சுமார் 300 குடும்பங்கள் இன்னமும் அங்கே வசிக்கின்றன. இதையெல்லாம் படித்த பிறகு, எனக்கு அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் கூடியதே ஒழிய குறையவில்லை.

இம்முறை கார் பயணத்தை தவிர்த்து, ரயிலிலோ பஸ்சிலோ பயணிக்க முடிவெடுத்தோம். கடைசியில், பஸ் தான் சிக்கியது. நானும் பாலாஜியும் மட்டுமே கிளம்பினோம். ராமேஸ்வரத்தில் எங்களுக்கு வழிகாட்டியாக, பழனி பாதயாத்திரைக்கு மாலை போட்டிருந்த முருக பக்தர் ஒருவரும் சேர்ந்து கொண்டார்.

பத்தாம் வகுப்பு வரையே படித்திருந்த அந்த வழிகாட்டி வரலாறு என்ற பெயரில் ராமர் பற்றி சொன்ன கதைகள், அவருடைய அறியாமையை வெளிப்படுத்தினாலும், அதை எதிர்க்காமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டோம்.

ராமேஸ்வரத்திலிருந்து அரிச்சல்முனை வரைக்கும் செல்ல ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். அரிச்சல்முனையிலிருந்து தமிழகச் சுற்றுலாத் துறையின் வேனில் ஏறி தனுஷ்கோடி சென்றடைந்தோம்.

தனுஷ்கோடியில் நாங்கள் முதலில் சந்தித்தது முனியசாமி தாத்தாவைத்தான். புயலுக்கு மிஞ்சி சிதிலமடைந்த நிலையில் நிற்கும் சர்ச்சின் வாசலில் அமர்ந்திருந்தார். தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது, அங்குள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாராம் தாத்தா. அப்போது அவருக்கு 12 வயதாம். புயலுக்குத் தப்பிய அனுபவத்தை அவர் கூறக் கேட்டபோது உடம்பு சிலிர்த்தது.

முனியசாமி தாத்தாவைப் போலவே மண்ணைவிட்டுப் போக முடியாமல், இன்னமும் அங்கு வாழும் மேலும் சில மக்களையும் சந்தித்தோம். “மின்சாரம், சாலை வசதி என எதுவுமே இல்லாத இங்கே எப்படி வாழ்கிறீர்கள்?” என வியப்புடன் கேட்டேன். சோலார் மின் விளக்குகளே இவர்களுக்கு இருள் போக்கி. “இப்போதுதான் ரோடு போடுறதுக்கான வேலைகளை அரசாங்கம் தொடங்கி இருக்கு” என்று சொன்னார்கள் மக்கள்.

5-ம் வகுப்பு வரை படிப்பதற்கு இங்கே ஒரு தொடக்கப் பள்ளியும் இருக்கிறது. இங்கு படிக்கும் குழந்தைகள் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளிடம் சங்கு, பாசிகள் விற்கிறார்கள்.

கடலால் சூழப்பட்ட தனுஷ்கோடி தீவுக்குள் குடி தண்ணீருக்கு என்ன செய்வார்கள் மக்கள்? அவர்களிடமே அதுபற்றிக் கேட்டேன். உடனே, பக்கத்தில் இருந்த கிணற்றைக் காட்டி, “இம்மாதிரியான கிணறுகள் இந்தப் பகுதியில் நிறைய இருக்கு” எனக் காண்பித்தனர். அந்தத் தண்ணீர் எப்படி உப்புக்கரிக்காமல் இருக்கும் என்ற சந்தேகத்துடன், தண்ணீரைச் சற்றே கையில் அள்ளி சுவைத்துப் பார்த்தேன். காவிரி தண்ணீர் தோற்றது போங்கள்; அத்தனை ருசி.

அதிகாலை 2 மணிக்கு முன்னதாகவே இந்த மக்கள் விழித்தெழுகிறார்கள். அப்போதே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்களாம். பிடித்த மீனை கரைக்கு கொண்டு வந்து, காலை 7 மணிக்குள் ராமேஸ்வரத்துக்கு அனுப்ப வேண்டுமாம். அதன்பிறகு, மீன்பிடி வலைகளை உலர்த்தி வைத்துவிட்டு மாலை 3 மணிக்கு, நண்டு பிடிப்பதற்கான வலையை எடுத்துக்கொண்டு போய் கடலில் வீசுகிறார்கள். இந்த மக்களின் அன்றாடப் பொழுதுகள் இப்படித்தான் கழிகின்றன.

“எப்போது புயலடிக்குமோ என்ற பயத்துடனேயே இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பீர்கள். பேசாமல் வேறு பாதுகாப்பான இடத்துக்குச் செல்லலாமே” என கேட்டதற்கு, “பிறந்த ஊரை விட்டுட்டு எங்கே போறதுங்கம்மா? எங்க அப்பா, தாத்தா எல்லோருமே இங்கதானே இருந்துருக்காங்க. அதுவுமில்லாம, எங்களுக்கு கடல் தொழிலை விட்டா வேற தொழிலும் தெரியாது. அதனால என்ன ஆனாலும் நாங்க இதுக்குள்ளதான் கிடந்தாகணும்” என்று சொன்னார்கள் அந்த மக்கள்.

அவர்களுடனான பேட்டியை முடித்துவிட்டு, அந்த மக்களைப் பற்றி வியந்து பேசியபடியே நானும் பாலாஜியும் சுற்றுலா வேனை நோக்கி மெதுவாக நடந்தோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE