லென்ஸ் சிமிட்டும் நேரம் - 22

By வனிலா பாலாஜி

2019-ம் வருடம் கோடை விடுமுறை முடியும் சமயம். ஒரு நாளில் சென்று வரும்படியாக ஏதாவது இடம் பெங்களூருவுக்கு அருகில் இருக்கிறதா என யோசிக்கையில், ‘அவனி’ ஞாபகம் வந்தது.

பெங்களூருவில் இருந்து 95 கி.மீ தொலைவில் உள்ளது அவனி. இங்கிருந்து 30 கி.மீ போனால் கோலார் தங்க வயல் வந்துவிடும். அது, ஒரு அழகான ஞாயிறு. காலை 6 மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கே.ஆர்.புரம் தாண்டும்வரை கான்கிரீட் காடாக இருந்த சாலையின் இருபுறமும், அதன் பிறகு பச்சைப் பசேலென மாறி கண்களுக்கு குளிர்ச்சி சேர்த்தது. காலை உணவுக்குப் பிறகான 2 மணி நேர பயணத்தில் அவனியில் இருந்தோம்.

தென் இந்தியாவின் ‘கயா’ என்றழைக்கப்படும் அவனியில், ஸ்ரீராமன் தனது சகோதரர்களுடன் ஒன்றாக அமர்ந்து சிவ பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது. ராமனால் வழிபடப்பட்டதாகச் சொல்லப்படும் லிங்கங்கள் அனைத்தும், இங்கே ஒரே கோயில் வளாகத்தில் தரிசிக்கக் கிடைக்கின்றன.

கி.பி. 10-ம் நூற்றாண்டில், நுளம்பர்கள் திராவிட கட்டிடக்கலையின் அடிப்படையில் இந்தக் கோயிலைக் கட்டி இருக்கிறார்கள். பல்லவ வம்சத்தில் வந்தவர்களாக கூறிக்கொள்ளும் நுளம்பர்களின் கோயில் கோபுரங்கள், பல்லவ கட்டிடக்கலையை ஒத்திருக்கின்றன. பிற்காலத்தில் சோழர்கள் இக்கோயில் வளாகத்தை புதுப்பித்திருக்கின்றனர்.

ராமாயணத்தை எழுதிய வால்மீகி ஆசிரமம், அவனியின் அருகில் இருக்கும் ஓர் குன்றின் மேல் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. சீதாதேவி ராமரை விட்டுப் பிரிந்து வந்த நாட்களை வால்மீகியின் ஆசிரமத்தில் கழித்ததாகவும், ராமருடைய பிள்ளைகளான லவ மற்றும் குசா இங்கு பிறந்ததாகவும் ஒரு தகவலுண்டு. அதனால், குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் குழந்தை வரம் கேட்டு ‘அவனி பெட்டா’ வுக்கு வந்து செல்கின்றனர்.

இந்தக் கோயிலைப் பற்றியும் இங்குள்ள குன்றைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. எனவே, இங்குள்ள ராமலிங்கேஸ்வரா கோயிலில் நான் எடுத்த புகைப்படங்களையும் அது குறித்த எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

அவனி புறப்படும் முன், அங்குள்ள குன்றைப் பற்றி அவ்வளவாக தகவல்களை திரட்டிக் கொள்ளவில்லை. கோயிலைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், அதைப் பற்றி மட்டும் படித்துக்கொண்டு போயிருந்தேன். அங்கு சென்ற பிறகு, குன்றைப் பார்த்தவுடன், பாலாஜி, மதி, சித்து மூவரும் குதூகலமாகி விட்டனர். எனக்குத் தான் இவ்வளவு பெரிய குன்றில் எப்படி ஏறுவது என்று வயிற்றில் லேசாக புளியைக் கரைத்தது.

மெதுவாக இதை நான் பாலாஜியிடம் சொல்வதை மதி கேட்டுவிட்டான். “உன்னை எதுக்கு ஜிம்முக்கு எல்லாம் அனுப்புறோம். இந்த மாதிரி எல்லாம் ஏறுவதற்கு தானே” என்று சொல்லி, என்னை இழுத்துக்கொண்டு போய்விட்டான். கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனாலும் விடாமுயற்சியுடன் ஏறிவிட்டேன். குன்றின் உச்சியை அடைந்ததும் அங்கு நிலவிய அமைதி, கீழிருந்த கிராமத்தின் எழில் காட்சி, அருகிலிருந்த சிறிய குன்று ஆகியவை மேலேறி வந்த களைப்பை மறக்கச் செய்தன. குன்றின் மேல் சீதா தேவிக்கு ஓர் சிறிய கோயிலும் கட்டி உள்ளார்கள்.

பொதுவாக, குழந்தை வரம் வேண்டி கோயில்களில் தொட்டில் கட்டுகிறவர்கள் துணிகளில் கட்டித் தான் பார்த்திருக்கிறேன். ஆனால், இங்கு நம் மக்கள் பிளாஸ்டிக்கில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். அக்காட்சியை வருத்தத்துடன் கடந்து சென்றோம்.

இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில், சீதா தேவி குழந்தைகளை பிரசவித்ததாக கருதப்படும் அறையிலிருந்து மண் எடுத்துச் செல்கிறார்கள் இங்கு வரும் மக்கள். அம் மண்ணை உடம்பில் வலி உள்ள இடங்களில் பூசிக் கொண்டால் வலி குறையும் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பதும் நம்பிக்கை. சமதளமாக இருந்த இடத்தை இப்படிப்பட்ட நம்பிக்கையால் தோண்டித் தோண்டிக் குழியாக்கிவிட்டார்கள் நம் மக்கள்.

லேபாக் ஷி எனும் ஊரில் சீதையின் பாதம் என அங்கிருந்த வழிகாட்டி கூறியதை மறக்காமல் படம் எடுத்தேன். பாதம் மிகவும் பெரியதாயிருக்கிறதே எனக் கேட்டபொழுது, அவர் இப்படிச் சொன்னார்: “ராமாயணம் நடந்த காலகட்டத்தில் மனிதர்கள் அனைவரும் இப்போதுள்ள மனிதர்களை விடச் சற்று பெரிய உருவத்துடன் இருந்தார்கள். அதனால் தான் கால் இவ்வளவு பெரியதாக இருக்கிறது.”

வழிகாட்டி இப்படிச் சொன்ன பிறகு, ‘அப்படியானால் ஆசிரமத்தில் உள்ள அறையில் நாம் நுழைவதே கஷ்டமாக இருந்தது. அவ்வளவு பெரிய உருவம் கொண்ட சீதா எப்படி நுழைந்திருப்பார்’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.

அனைத்தையும் கடந்து மலை உச்சிக்கு சென்றதுமே, மலை ஏறிய களைப்பில் பாலாஜியும் பிள்ளைகளும் ஓர் குட்டி தூக்கம் போட்டுவிட்டனர். அதன் பிறகு, அனைவரும் மெதுவாக கீழே இறங்கி வந்து ஊருக்குப் புறப்பட்டோம். வழக்கமாக பாலாஜியையும் மதியையும் இம்மாதிரியான பயணங்களில் வெகு எளிதாக திருப்திப்படுத்தி விடலாம். ஆனால், சின்னவர் சித்துவை திருப்தி படுத்துவது மிகவும் கடினம்.

“என்ன இருக்குன்னு இங்கே கூட்டிட்டு வந்தீங்க” என்ற எடக்கு மடக்கு கேள்வியை எப்போதும் அவனிடம் எதிர்பார்க்கலாம். ஆனால், இந்தப் பயணம் அவனுக்கும் சந்தோஷமான அனுபவமாக அமைந்ததில் எனக்குமே கொஞ்சம் திருப்திதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE