ஒரே நேரத்தில் 3 அறுவை சிகிச்சை: முதியவரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!

By KU BUREAU

மதுரை: தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட நோயாளிக்கு ஒரே நேரத்தில் 3 சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், 8 மணி நேரம் போராடி நோயாளியின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்தவர் சேகர் (68). இவருக்கு நெஞ்சுப்பகுதியின் மகாத்தமனி ரத்தக்குழாய் வீக்கமடைந்து வெடிக்கும் நிலையில் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந் தார். ஆனால், தனியார் மருத்துவ மனைகள் இவருக்கு சிகிச்சை வழங்காமல் கைவிட்டதால், சேகரை அவரது உறவினர்கள் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு பரிசோதனை செய்த போது, அவருக்கு மார டைப்பும், இதய ரத்தக் குழாய் அடைப்பும், இதய பாதிப்பும் ஏற்கெனவே இருப்பது கண்ட றியப்பட்டது.

எனவே இவருக்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் கருதினர். அதனால், ரத்தக்குழாய் வழியே கருவிகள் மூலம் அதிநவீன ஸ்டெண்டுகளை பொருத்தினால் அவர் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் இம்முறையில் சிகிச்சை செய்யலாம் என இதய சிகிச்சை நிபுணர்கள் முடிவு செய் தனர். ஆனால், இதற்கு முன்னர் ரத்தக்குழாய் வீக்கம் கழுத்து பகுதி வரை வளர்ந்து விட்டதால் அதற்கு தனியாக கழுத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சையும், இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு கூடு தலாக ஸ்டெண்டும் பொருத்த வேண்டி இருப்பது தெரியவந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சேகருக்கு ஒரே நேரத்தில் 3 சிக்கலான சிகிச் சைகளை மேற்கொள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணர் குழு, இதய சிகிச்சை நிபுணர் குழு, மயக்க மருந்து நிபுணர்கள் குழு வினர் இணைந்து 3 அறுவை சிகிச்சைகளையும் 8 மணி நேரம் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இச்சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நவீன சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்தில் நோயாளி எழுந்து நடமாட முடிந்ததாக அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ (பொ) தர்மராஜ் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் மார்வின், அமிர்தராஜ், மீனாட்சி சுந்தரம், முத்துக்குமார், பாலசுப்பிர மணியம், செல்வராணி, ரமேஷ், இளமாறன், கல்யாணசுந்தரம் தலைமையிலான நிபுணர்கள் குழுவினர் திட்டமிட்டு இந்த சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டனர்.

தனியார் மருத்துவமனைகளில் முடியாது என கைவிடப்பட்ட நோயாளியை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளது ராஜாஜி மருத்துவ மனைக்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த பெருமை. தனியார் மருத்துவமனைகளில் முடியாத இது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் நோயாளிகள், அரசு மருத்துவமனைக்கு வந்து தாராளமாக சிகிச்சை பெறலாம். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டி ருந்தால் ரூ.25 லட்சம் வரை செலவு ஏற்பட்டிருக்கும். ஆனால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE