லென்ஸ் சிமிட்டும் நேரம் - 21

By வனிலா பாலாஜி

கூர்க் பயணம் போக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. 2013-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று அது நிறைவேறியது. இரண்டு முறை போவதென்று முடிவெடுத்து, கடைசி நேரத்தில் போகமுடியாமல் போன பயணம். ஆசை ஆசையாய் கிளம்பினோம். முதலில் நாங்கள் சென்றது ‘ப்ய்லகுப்பே’ (Bylakuppe) நகரில் உள்ள நாம்ட்ரோலிங் நிய்ங்மபா (Namdroling Monastry) மடத்தின் தங்கக் கோயில்.

திபெத்தியர்கள் இந்தியாவில் குடியேறும்போது, சிலர் ப்ய்லகுப்பேவிலும் குடியேறினர். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக, மைசூர் மாவட்டத்தில் மிகப்பெரிய மடம் ஒன்று 1963-ல் நிறுவப்பட்டது. இந்த மடத்தில் இப்போது ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் சந்நியாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மடத்தின் முழுப் பெயர் ‘Thegchog Namdrol Shedrub Dargyeling’ சுருக்கமாக ’Namdroling’.

ஆரம்ப காலத்தில் இந்த மடத்தினுள்ளே இருந்த மூங்கிலால் கட்டப்பட்ட சிறு கோயிலே, 1999 செப்.24 -ல், பத்ம சம்பவா புத்த விஹார் (Padma Sambhava Buddhist Vihara) எனப்படும் தங்க கோயிலாக உருவெடுத்தது. இக்கோயில் ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான துறவிகள் கூடி வழிபட ஏதுவாகக் கட்டப்பட்டுள்ளது.

தங்கக் கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் அங்கு நிலவும் அமைதி நம்மையும் ஆட்கொள்கிறது. எதிர்கொண்டு அழைக்கும் 60 அடி உயர 3 சிலைகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

நடுவில் இருப்பவர் நமக்கெல்லாம் தெரிந்த கௌதம புத்தர். அவருக்கு வலப்பக்கம் இருப்பவர் திபெத்தியர்களால் 2-ம் புத்தர் என அழைக்கப்படும் பத்ம சாம்பவா (Padma Sambhava). இடப்பக்கம் இருப்பவர் புத்த அமித்தயுஸ் (Buddha Amitayus). இவர் அரசராக இருந்து பவுத்த மதத்தைத் தழுவியவர். கோயிலில் இருக்கும் ஓவியங்களையும் கலைநயமிக்க பொருட்களையும் ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப மனமில்லாது கிளம்பினோம்.

இரண்டாவது நாளில் பாகமண்டலா, தலைக்காவிரி மற்றும் அபே நீர்வீழ்ச்சிக்குச் சென்றோம். தலைக்காவிரி நாங்கள் தங்கி இருந்த மடிக்கரை எனும் ஊரிலிருந்து 56 கி.மீ தொலைவில் இருந்தது. முதலில் தலைக்காவிரி சென்றுவிட்டு பின்பு பாகமண்டலா செல்லலாமென்று முடிவெடுத்து தலைக்காவிரிக்குச் சென்றோம்.

காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டதால் வழி முழுக்கப் பனிமூட்டம். பனி மூட்டத்தின் நடுவில் காபித் தோட்டமும், வானுயர்ந்த மரங்களில் படர்ந்திருந்த மிளகுக் கொடியும் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் தெரிந்தது. நேரம் செல்லச் செல்ல பசி வயிற்றைக் கிள்ளியதால், பாகமண்டலத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு தலைக்காவிரிக்குச் சென்றடைந்தோம்.

அங்கும் அதே மாதிரியான வானிலையே. பனி மூட்டத்தின் நடுவில் காவிரி நதி ஆரம்பிக்கும் இடத்தைப் பார்க்கவே அற்புதமாக இருந்தது. இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்கே, காவிரி நதி ஓர் சிறு ஊற்றாக ஆரம்பித்துப் பின்பு நிலத்தடியில் ஓடி பெரிய நதியாக உருவெடுக்கிறது. இந்த ஊற்று ஆரம்பிக்கும் இடத்தில், சின்னதாய் காவிரி அம்மனுக்காக ஒரு கோயிலும் கட்டி இருக்கிறார்கள். இங்கு வரும் மக்கள், இங்குள்ள சிறு குளத்தில் நாணயங்களை காணிக்கையாகப் போட்டு காவிரி அம்மனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

அங்கிருந்து திரும்பும் வழியில் பாகண்டேஷ்வரா கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலின் மேல்பாகத்தில் கோபுரங்கள் இல்லாமல் கூரை வடிவில் இருக்கின்றது. இந்த இடத்தில், காவிரியுடன் 'கன்னிகே' மற்றும் புராணச் சிறப்பு வாய்ந்த 'சுஜ்யோதி' நதிகள் கலப்பதால் இந்த இடத்தையும் ‘திரிவேணி சங்கமம்’ என்று சொல்கிறார்கள்.

மடிக்கரையில் மதிய சாப்பாட்டை முடித்துக்கொண்டு அபே நீர்வீழ்ச்சிக்குச் சென்றோம். சாலை மிகவும் குறுகலாக இருந்ததாலும் மழை பெய்து கொண்டிருந்ததாலும் நீர்வீழ்ச்சியை நோக்கிய பயணம் சற்றே சிரமமாக இருந்தது.

ஆனால் அபேயின் அழகு, நாங்கள் கடந்துவந்த சிரமங்களை மறக்கச் செய்தது. நீர்வீழ்ச்சியின் எதிரில் ஓர் பாலம் இருக்கிறது. சாரல் அந்தப் பாலத்தையும் கடந்து குளிரூட்டியது. சின்னவனுக்கு அப்போது 5 வயது இருக்கும். அவனுக்கே அபே அத்தனை பிடித்திருந்தது. “வாவ்... ஃபால்ஸ்ல சுடுதண்ணி எல்லாம் வருமே” என்று குதூகலித்தான்.

அனைத்தையும் ரசித்துவிட்டு நாங்கள் தங்கி இருந்த இடத்தைச் சென்றடைந்தோம். அடுத்த நாள், துபாரே (Dubare) யானைகள் முகாமில் யானைகளுடன் சிறிது நேரத்தை செலவழித்து விட்டு, ஊர் நோக்கிக் கிளம்பினோம். கூர்க் பயணமானது எங்களைவிட எங்கள் பிள்ளைகளுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஊர் திரும்பும் வரை, அவர்கள் கூர்க் கதையைப் பேசிக்கொண்டு வந்ததே அதற்கு அத்தாட்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE